மொழி பெயர்ப்பாளர்

ஒரு புகழ்பெற்ற அல்லது அவ்வளவாக புகழ்பெறாத மொழிபெயர்ப்பாளரை பார்த்து ''இப்படி அங்கிருந்து தமிழுக்கு மட்டும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறீர்களே தமிழில் உலகத்தரம் வாய்ந்த கதைகள் உள்ளன.தமிழிலிருந்து அங்கும் கொண்டு சென்றால் என்ன?''என்று கேட்டேன்

அவர் திடீரென்று சொல்லாமல் முனியடித்த பிள்ளை போலானார்

''அய்யோ அது பயங்கரமான ஒரு காரியம்''என்றார்.அவர் உடல் நடுங்கத் தொடங்கிற்று

நான் அவரை அணைத்து ஆற்றுப்படுத்தி அவரது பீதியின் காரணத்தை விசாரித்தேன்

அவர் ஏற்கனவே தான் அப்படி ஒரு துணிகரக் காரியத்தில் ஈடுபட்டபோது நேரிட்ட துயர அனுபவங்களை விவரித்தார்

''மற்ற மொழிகளில் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டால் சந்துஷ்டியடைவார்கள் ''

'இங்கிருப்பதும் மனிதர்கள்தானே ?இவர்களும் களிகூரவே செய்வார்கள்''

''ஆஹா..நானும் அப்படித்தான் நினைத்தேன்''என்றார் அவர்.பிறகு தனது வாழ்க்கையின் மிக இருளான ஒரு காலகட்டத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்

''வேற்று மொழியில் பிரபலமான ஒரு பதிப்பகம் தமிழில் அப்போது எழுதிக் கொண்டிருந்த பனிரெண்டு பேரின் சிறுகதைகளை நான் சொல்லியதன் பேரில் தங்கள் மொழியில் வெளியிடத் தயாராக இருந்தது .நான் அப்போது இலக்கியத்தின் உச்சியில் இருந்த பன்னிருவருக்கு அந்த நல்ல விஷயத்தை தெரிவித்து அவர்களது அனுமதியைக் கேட்டு கடிதம் எழுதினேன்.பத்து பேர் பதிலே எழுதவில்லை.பதினோராவது நபர் அதற்கு ஒரு லட்சத்தி ஓரு ரூபாய் ராயல்டியாய் கேட்டார்.இப்போதைக்கு அதன் மதிப்பு அதைவிட ஐம்பது மடங்காவது இருக்கும் ''

''ஓ ''என்றேன் நான் மெல்ல சுருதி இழந்து

''ஆனால் பனிரெண்டாவது நபர் செய்த காரியம்தான் மிக சிலாக்கியமானது.அவர் நான் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பதிப்பகத்தின் விலாசத்தை எப்படியோ கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து -இணையம் இல்லாத காலம் நினைவில் கொள்ளுங்கள் -ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதில் அவர்களிடம் நான் கொடுத்த பட்டியலில் அவரைத் தவிர இருந்த மற்ற பதினொரு பேரும் நாலாந்தர எழுத்தாளர்கள் என்று சொல்லி உண்மையில் தமிழில் பெறுமதியான எழுத்தாளர்கள் யார் என்று புதிதாக பனிரெண்டு பெயர் கொண்ட பட்டியலையும் கொடுத்திருக்கிறார் ''

நான் இப்போது பராக்கு பார்க்க ஆரம்பித்தேன்

''அப்போ நான் வரட்டா ''

''இருங்க முடியலை ''என்றார் அவர்.''கடைசியாக அவர் எழுதிய பின் குறிப்பு தான் முக்கியமானது.பதிப்பகம் அதை நகல் செய்து எனக்கே அனுப்பி வைத்தது.''

நான் ''அப்படியா எதுக்கு ?''

''எதுக்கா ?மொத்த கடிதமும் தமிழில் இருந்தது .அவர்களுக்காக நான்தானே மொழிபெயர்க்கவேண்டும் ?அந்த பின் குறிப்பில் என்ன எழுதியிருந்தார் என்றால்....''

நான் விசயத்தின் அபத்தத்தையும் ஆபத்தையும் ஒரு சேர உணர்ந்து ''சார் அப்போ நான் வரட்டா ''

அவர் என் தோளைப் பிடித்து அழுத்தி ''இருங்க''என்றார் .பிறகு நினைவிலிருந்து அதை வாசித்தார்

''பின் குறிப்பு.முதலில் இவற்றையெல்லாம் மொழிபெயர்க்க வக்காளி இந்தப் பயல்தான் உங்களுக்குக் கிடைத்தானா ?தமிழில் இவன் யாரென்றே எவருக்கும் தெரியாது .கடைந்தெடுத்த சல்லிப்பயல் .இவன் உங்களுக்கு வேண்டாம்.இவனைவிட நல்ல திறமைசாலிகள் இங்கு உண்டு.உதாரணமாக இவர்....எனது நண்பர்தான்,நல்ல திறமைசாலி.. நீங்கள் இந்த பெயர் தெரியாத பனாதைக்கு கொடுக்கிற காசில் பாதியைக் கொடுத்தால் போதும்.

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (29-Nov-15, 8:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 141

மேலே