தேவதைகள் தூங்குகிறார்கள்- 15- சந்தோஷ்

தேவதைகள் தூங்குகிறார்கள்-
( நிறைவுப் பகுதி )
-----------------

சென்னையிலிருந்து புறப்பட்ட இரயிலில் விஜி- விஷாந்தினியின் அந்த முதல் நாள் சந்திப்பு... ஜப்பான் மூக்கழகியின் விழிகளுடன் உரையாடிய தித்திப்பு... இரயில் காதலாய் முளைத்த பேரின்ப மலைப்பு என யாவும் விஜியின் சிந்தைக்குள் பறவை பாஷையில் கவியெழுதிக்கொண்டிருக்க .. முடிவிலா தண்டவாளத்தில் சிறகடித்து உடல் தொலைத்து அவன் ஆன்மா வானில் மிதக்கும் உணர்வாய் பறந்துக்கொண்டிருந்தான் விஜி.

நானுன் மழை
நீயென் நிலம்
நீயென் கூந்தலில்
நானுன் மீசையில்
நீயென் வானம்
நானுன் பறவை
நீயென் புத்தகம்
நானுன் எழுத்து
நீயென் கவிதை
நானுன் உவமை.
நீயென் இதழ்கள்
நானுன் இமைகள்
நீ கொலுசு
நான் ஒலி
நீ பிம்பம்
நான் கண்ணாடி

வந்து நின்ற சொற்கள் எல்லாம் கவிதைகளாகிக்கொண்டிருக்க..... விஜி... கவி.. ஜியாய் கவி வரி ஆளுமை செய்ய.. இரயில் சத்தம்.. மெட்டுப்போட.... இளையராஜா இசையாய் மெல்லிசையாய் பயணம் தொடர்ந்தது.

இரயில் ஜோலார்ப்பேட்டை வந்து நின்றது. விஜி.. விஷாந்தின் நினைவிலிருந்து மீட்டெடுத்தது... " டீ.. காபி..சாயா..... சாயா.. " எனும் இரயில் நிலையத்தில் டீ விற்கும் தோழர்களின் குரல்...

பத்து ரூபாய் எடுத்துக்கொடுத்து.. தேநீர் வாங்கினான் விஜி. தேநீர் விற்றவர் மூன்று ரூபாய் மீதம் தரவில்லை.
" தோழா.. இரயில்வே ஸ்டேன்ஷல் டீ.. ஏழு ரூபாய் தானே.. மீதி மூன்று ரூபா தராம போறீங்களே.."

" சேஞ்ச் இல்ல சார்."

" சேஞ்ச் இல்லன்னா சொல்லு நண்பா... நான் தரேன். எப்போதுதான் நீங்கலாம் சேஞ்ச் ஆவிங்களோ.. ? நேர்மை.. நாணயமுன்னு சில வார்த்தை இருக்கே..."

" என்ன சார்.. மூனு ரூபாய்க்கு உலக மகா தத்துவம் சொல்றீங்க.. இந்தா பிடி... வந்துட்டான்..பிச்சைக்காரன்... " ஏடாகூடமாக வார்த்தை விட்ட அந்த டீ விற்பனையாளரின் சொல்லும் ..சொல்லிய அந்த நயமும்.. விஜியை கோபமூட்டியது..

"டேய் பண்ணாடை.. பரதேசி.. யாருடா.. பிச்சைக்காரன்.?. மூனு ரூபாய் ஏமாத்துற நீ என்னை பிச்சைக்காரன்னு சொல்றீயா... பல்லு பேந்திடும் ஜாக்கிரதை.. இரயில் பயணிகளுக்கு சலுகைவிலையில கொடுக்கச் சொல்லும் சென்ட்ரல் கவர்மெண்ட் ரூல்சை மீறிட்டு ... லொல்லு தனமா பேசுறீயா.."

" சார் விடுங்க சார்.. எதுக்கு வெறும் மூனு ரூபாய்க்கு போயி பிரச்சினை... அவனுங்க அப்படித்தான்.. பாவம்... டீ வித்துதான் பொழைக்கிறானுங்க.. ஏதோ சம்பாதிச்சிட்டு போகட்டும்.சின்ன விசயம் சார்.. எதுக்கு இப்போ சண்டை போடறீங்க. " சக பயணி ஒருவர்

"எதுய்யா சின்ன விசயம். ஒவ்வொரு சின்ன விசயம் தான் .. ஒவ்வொரு பெரிய தப்பு ஆகுது. ..பாரு.. வந்துட்டான் நாட்டாமை. ஊருக்கு ஒரு நாட்டாமை.. வீதிக்கு ஒரு நாட்டாமை.. வெப்சைட்டுக்கு ஒரு நாட்டாமைன்னு எவன் எவன்னோ கிளம்பிடுறானுங்க... எவன் என்ன கொள்ளையடிச்சா எதையும் கேட்காத உன்னமாதிரி ஆளுங்கன்னாலதான் நாட்டுல லஞ்சம் , ஊழல் எல்லாம் நடக்குது....அரசியல்வாதிங்க மாறுவதைவிட.. உன்ன போல ஒவ்வொருத்தனும் முதல்ல திருந்தனும்.. அப்பதா நாடு உருப்படும்.. " அர்த்த இராத்திரி 1 மணிக்கு.. கொந்தளித்த விஜி தொடர்ந்து எதை எதையோ பேச ஆரம்பிக்க.. சக பயணிகள்.. " இவன் பைத்தியக்காரன் போல " என பேசிக்கொள்ள... இரயிலின் கார்டு விசில் ஊதிவிட்டார். இரயில் புறப்பட ஆரம்பித்தது.

புறப்பட்ட இரயிலில் லாவகமாக ஏறிக்கொண்டான் விஜி. விஜி படுக்கைக்கு அருகேயுள்ள பதினாறு வயதுடைய ஒரு வாலிபன்..
" சார் செமயா பேசினீங்க .. சூப்பர் சார், கிரேட் சார்.. "

" போட்டேன்னா பாரு.. நான் பேசும் போது கூட வந்து தட்டி கேட்டியா.. என் பிரச்சினைன்னு நீ ஒதுங்கிட்ட இல்ல.. அடுத்தவன் எதாவது உண்மை பேசிட்டா. அவனை பாராட்டி வாய் கிழிய பேசி.. அத.. பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு.. 100 , 500 லைக்ஸ் வாங்குறவந்தானே நீ... " விஜியின் கோபம் ஏனோ இம்முறை வினோதமாக அரங்கேறியது"

" சார் நீங்க கூடத்தா தப்பு பண்றீங்க. ஒடுற இரயில் ஏறுவதும் இறங்குவதும் தப்புன்னு ரூல்ஸ் இருக்கு.. முதல்ல நீங்க பாலோ பண்ணுங்க .. அப்புறம் எல்லாம் திருந்தும்.."

" சரிங்க தம்பி.... நான் பண்ணினது தப்புதான். நான் தப்பே பண்ணமாட்டேன்னு எவன் சொன்னான் உனக்கு.? இப்படித்தான்டா எல்லாத்தையும் எல்லோரையும் இப்படித்தான் இருப்பான்னு நீங்களே முடிவு பண்ணிக்கிறீங்க. . ஒவ்வொரு தப்பும் ஒவ்வொரு தத்துவம் பிறக்க வைக்கும் தம்பி... "

"இவரு நல்லவரா கெட்டவரா.. கன்பியூஸ் பண்ணுறாரே.. " அந்த இளம் வாலிபன் மனதுக்குள் எண்ணிக்கொண்டிருக்க....

. " விஜி... கூல் டா. ஏன் இப்படி டென்ஷன் ஆகுற.?. ஒரே இராத்திரில எல்லாம் மாறிடாது. இப்போதுதான் எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருக்கு...முதல்ல என்னை வந்து பாருடா.. நான் உனக்காக காத்திருக்கேன்.. "விஜியின் எதிர்ப்படுக்கையில் விஷாந்தினி பேசுவதாக ஒரு மாயையில் உணர்ந்தான் விஜி...

மறுநாள் காலை.....!

விஷாந்தின் அலைப்பேசிக்கு ஓர் அதிர்ச்சி தகவல்....

தோழர் பரதனின் குரல்...திக்கி திணறியது...
" மனச திடப்படுத்திக்கோ மா.. தோழர் விஜி வந்த இரயில்... ஜோலார்ப்பேட்டை கிட்ட வரும் போது.... "

" வரும் போது.. என்ன சார்.. என்ன ஆச்சி.. விஜிக்கு.. " விஷா பதட்டமடைகிறாள்.

"டிரெயின்ல எவன்னோ குண்டு வச்சிருக்கான். நம்ம தோழர் வந்த கோச் புல்லா எரிஞ்சிப்போச்சாம். இப்போதான் தகவல் வந்துச்சி.. "

" அப்போ என் விஜி.. என் விஜி......... வி... வி........வி... " கண்ணீர் பெருமழையாய் கொட்ட.. அவள் காதல் வாழ்க்கையில் பேரிடர் தாக்கியது போன்ற உணர்வில்.. பேச முடியாமல் மயங்கிச் சரிந்தாள் விஷா...

தகவல் அறிந்து.. விஜியின் தாய், தந்தை, தம்பி.. நண்பன் ஆதி அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக.. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும் என்கிற கொடும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

..விஷா.. தன்னை தானே நொந்துக்கொண்டாள். விஜியின் அம்மாவிடம் " அம்மா நான் ராசி இல்லாதவ.. நான் விஜி வாழ்க்கையில வந்ததே தப்பு... உங்க மகன நான் தானே கொன்னுட்டேன்... என் மேல எனக்கே வெறுப்பா இருக்கு." விரக்தியில் வெறுப்பாக பேச.. அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டார் விஜியின் தாயார்.



தன் நண்பனை இழந்த மனப்பிறழ்வில்.. உணர்ச்சி மிக்கவனாக ஆதி.. " விஜி ஏன் தான் தீவிரவாதி ஆனானோ.. இப்ப பாரு... எல்லாத்தையும் அழவச்சிட்டு இருகான்.. விஷாந்தியை இப்படி தவிக்க வச்சிருக்கான்.. டேய் விஜி.. நீ தீவிரவாதியா மாறினது தப்புடா. அதான்.. ********** தீவிரவாதி வச்சி குண்டுல பலியாகிட்ட.. நீ நல்லவன் டா.. ஆனா தீவிரவாதியை நல்லவனா பார்க்காதுடா இந்த உலகம்.. போடா. யாருக்காக டா இந்த இயக்கத்தில சேர்ந்த?. இப்போ உனக்காக அழுவது யாருன்னு பாருடா... பெரிய பெரிய தலைவர்கள் செய்யாத ஒரு விசயத்தை நீ செஞ்சி என்ன மாற்றம் கண்ட.. போடா.. நீ போயிட்ட.. நிம்மதியா.. . நீ பட்ட வலிக்கெல்லாம் சாவுதான் பரிசா.. ? நீ திவிரவாதியா போனது தப்பு டா..... தப்புடா.. விஜி.. நீ தீவிரவாதி ஆனது தப்புடா.. " உளறி உளறி தன்னிலை மறந்தவனாய் தன்னை தேற்றிக்கொண்டிருக்க... விஷாந்தினி......


"என்ன சொன்னிங்க தீவிரவாதி வச்ச குண்டா.. அதுவும் அந்த மதத்துக்காரனா.. ? எப்படிங்க இப்படி குருட்டுதனமா.. பேசுறீங்க.. விஜியோட நண்பனா நீங்க? .. விஜியோட நண்பனா இருந்துட்டு கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க... இதுசரியில்ல.. எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்காங்க. மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு சொன்னதும் கூட ஒரு தீவிரவாதம் தான். வெறித்தனம் தான்... சாமி பேரை சொல்லி.. நம்மை அடக்கி ஏமாத்துற ஒவ்வொருத்துனும் தீவிரவாதிதான்.. . ஏதோ ஒரு மதத்துல இருக்கிறவங்க தான் தீவிரவாதிங்க மாதிரி பேசாதீங்க..
எந்த மதமும் அழிக்க சொன்னது இல்ல.. மத நெறி தெரியாம வெறிப்பிடிச்சவனெல்லாம் குண்டு வைப்பான். கொலை பண்ணுவான்.. அவனுக்கு என்ன தேவையோ... அது எப்படி கேட்கனுமுன்னு தெரியாம ஆயுதத்தை தூக்குறாங்க. ஆயுதம் தூக்கிறவன் எல்லாரும் மோசக்காரன் இல்ல.. நல்லவனும் இல்ல. எதுக்காக . என்ன நோக்கத்திற்கு துப்பாக்கி தூக்கினான்னுதான் பார்க்கனும்.. ஆயுதம் யாரு கையில இருக்கோ.. அதப்பொறுத்து தான்.. அவன் தீவிரவாதியா போராளியான்னு முடிவு பண்ண முடியும்....ஆளும் அரசிற்கு பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் இருப்பவர்கள்தான், ஆளப்படுகிற மக்களுக்கு விடுதலைப்போராளிகளாக இருக்கிறார்கள். இன்ன மதக்காரன் தான் குண்டு வச்சிப்பான்னு எப்படிங்க நீங்களே முடிவு பண்றீங்க.. இப்படிதாங்க எல்லாத்தையும் நாமளே முடிவுபண்ணிக்கிறோம். நாமளே நமக்குள்ள பிரிவினை உண்டாக்கிறோம்.இந்த வீக்னஸ் வச்சிதான் அரசியல்வாதிங்களும் நம்மை பிரிச்சி வச்சி அரசியல் பண்றாங்க.

நம்ம நாடு விடுதலை அடைஞ்சதுக்கு காரணம்.. இப்போ நாம பெருமையா பேசிட்டு இருக்கோம்ல காந்தி... அவருமட்டுந்தான் காரணமா... ? சுபாஷ் சந்திரபோஸ்,......... போஸ் போல இன்னும் பல பேரு.. மாவீரன்.. பகத் சிங்.. போல இன்னும் பல சிங்.. கட்ட பொம்மன் போல பல பேரு.... இவங்க எல்லாம் தீவிரவாதியா.. இல்ல போராளியா.. சே.குவேரா.. தீவிரவாதியா போராளியா.. ? பிரபாகரன் எப்படி தீவிரவாதின்னு நீங்க சொல்ல முடியும். ..? வெறும் அஹிமிச்சையில நாம வாங்கினது இல்ல சுதந்திரம்,... பல பேரு இம்சையோடு வலியில துடிச்சி.. துடிச்சி... இரத்தம் சிந்தி.. உயிர்கொடுத்து வாங்கினது. ஆனா பேரு.?. வரலாறு பேசுது சுதந்திரம் வாங்கினது காந்தின்னு.. காந்தியும் ஒரு காரணம்தான்.,. காந்தி மட்டுமே காரணமில்ல. ஒரு மறுமலர்ச்சி வரணுமுன்னா என் விஜி போல பல பேரு உயிர் போகதான் வேணும்.விஜினால மட்டுமே மாற்றம் வருமுன்னு அவன் எப்போமே சொன்னது இல்லயே.. நீங்களே முடிவு பண்ணிக்கிறீங்க.. . விஜி போயிட்டான் .. அவன் காதல் இல்ல. எங்க அன்பு போகல.. உடம்பும் உடம்பும் ஒட்டி உரசினாதான் காதலா... ?

விஷா தான் கொதித்து எழுந்து பேசினாள். விஜி தற்போது தன்னுடன் இல்லை என்றாலும்.. அவனின் போராட்டக்குணம். கொள்கை அவளிடம் இருந்தது . பகுத்தறிவுக்கு உடன்படாத மேம்போக்கான.. குருட்டுத்தனமான பேச்சை தட்டிக்கேட்க ஆரம்பித்தாள். விஷாக்குள் விஜி இருக்கிறான் என்பதாலோ என்னவோ.. அதே கோபம்.. அதே.... ஆக்ரோஷம் இப்போது விஷாந்தினி கண்ணிலும் குணத்திலும்....

விஜியின் குடும்பத்தினர்... விஜியை இழந்த துக்கத்தையும் மீறி.. விஜியின் மறுமுகம் இதுதானா என்பது போல வியந்து பார்த்தார்கள்.

" இங்க.. வாடா... வா.. நீ என் மருமகள் இல்ல. மகள் இல்ல., என் மகன்.. என் விஜி நீ.." என்றாவாறே விஷாந்தியை அணைத்துக்கொண்டு அழுதார் விஜியின் தாயார்.

"அம்மா.... நானிருக்கேன் அம்மா.. உங்களுக்கு.. விஜியா இந்த விஷாந்தினி இருக்கா.. "

என்ன சொல்வது என துக்கத்தோடும்... ஒரு மன எழுச்சியோடும் விஜியின் தாயார்.. விஷாந்தினியை தன் மடியில் உறங்க வைத்தார். விஜியின் தேவதை இப்போது தூங்க ஆரம்பித்தாள். அன்னையின் மடியெங்கும் விஷாந்தியின் ஈரம்.. பாசம்.. அன்பு.. காதல் கண்ணீராக ஆழிப்பேரலையாய் வழிந்துக்கொண்டிருக்கிறது.

----


மிக மிக உருக்கமான இந்தக்காட்சி அங்கிருந்த அனைவரையும் மிகவும் நெகிழவைத்து அழுவே வைத்தது.

கட் கட் கட என சொல்லமறந்தவராக இக்கதையின் இயக்குநர் கவிஜியும் நெகிழ ஆரம்பித்தார். நிமிடங்கள் நிசப்தங்களாய் .. மெளனங்களே அங்கு பாராட்டு சான்றிதழாய்... சற்று நிமிடங்களுக்குப் பிறகு.........

இந்த திரைப்படத்தின் கதையை உலக வரலாற்றில் முதன் முறையாக ஒன்றுக்கூடிய எழுதிய எழுத்தாளர்களான மணிமீ, வேளாங்கண்ணி, இராஜ்குமார், கோபி, லாவண்யா, மேரி டயனா , ஆனந்தி, உதயா, சந்தோஷ் குமார் , ஆண்டன் பெனி ஆகியோருடன்....படத்தில் நடித்த சக நடிகர்களும் சேர்ந்து . அந்த படப்பிடிப்பு தளமே அதிர அதிர கைத்தட்டினார்கள். ..


கவிஜி...தாயாக நடித்தவரின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த விஷாந்தியை ஒரு குழந்தைப்போல தூக்கி வாரி அணைத்துக்கொண்டார்.

எக்ஸ்லெண்ட் டா.. மார்வெலஸ்.. கிரேட்.. யூ ஆர்.... யூ ஆர்.. கிரேட் ஆக்டர்.. தமிழுக்கு இப்படி ஒரு நடிகை வேணும்...

நடிகை விஷாந்தினி எழுந்திருக்கவில்லை....

" விஷா.. விஷா. எழுந்திரு.. என்னாச்சி,.... " கவிஜி பதறுகிறார்.
விஷாந்தினி எழுந்திருக்கவே இல்லை.....

படப்பிடிப்பு தளத்திலுள்ளவர்கள் அதிர்ந்தனர். என்னாயிற்று விஷாந்தினிக்கு.....

கவிஜி.... " ஏய் ஜப்பான் மூக்கழகி.. எழுந்திரு....? "

எழுவே இல்லை விஷாந்தினி...

தேவதை தூங்குகிறாளா...... ? இல்லை..

"விஷாந்தினி...... நான் உன் விஜி டா.......... எழுந்திரு..... "

" ஹா ஹா.. ஹா.. அடேய் என் காதலனே என் இயக்குநரே.. இப்படியான கதைக்கு இப்படியான நடிப்பு போதுந்தானே...." கவிஜிக்கு இப்போதான் உயிரே வந்தது.. அவரின் உயிர் பேசியதால் .மட்டுமல்ல.. " எல்லா தேவதைகளும்... ஏமாற்றுவதில்லை" என உணர்ந்ததாலும்.

இப்போது கவிஜியின் இருதயத்தில் விஷாந்தினி தூங்குகிறாள்.. ஆம் ஒவ்வொரு உன்னத காதலன் இருதயத்திலும் தேவதைகள் ஏமாற்றினாலும் ஏமாற்றாவிட்டாலும் உண்மைக் காதல் தூங்குவதைப்போல நடிப்பதைப்போலவும்..

ஒவ்வொரு காதலும் ஒரு புரட்சிதான்.. சமூக மறுமலர்ச்சிக்குத்தான்...

.


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (22-Dec-15, 4:05 pm)
பார்வை : 393

மேலே