கிறிஸ்து பிறப்பு

வலம்புரி ஜான் கவிதை! வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் வழங்குகிறது கிறிஸ்துமஸ் கவிதை விருந்து இதோ..

எல்லோருக்கும் விலாசம் எப்போதும் தருகிறவன்
தனக்கொரு முகவரியை தான் தேடிப் புறப்பட்டான்.
வாய்க்காதோ வயிற்றிலென்று வாயவிழ்ந்த தாய்மார்கள்
காத்திருந்தார் காத்திருந்தார்; கண்ணெல்லாம் பூத்திருந்தார்.

மாதவன் பிறப்பதற்கு மரியாளைத் தேர்த்தெடுத்தான்.
ஆண்டவன் முன்மொழிந்தான்; அவன் தூதும் வழிமொழிந்தான்.
ஆடவரை அறியாத அபலைப் பெண் எனக்குள்ளே
ஆகாயக் குழந்தை அவதாரம் சாத்தியமா?
எழுத்தாணி பழகாமல் ஏட்டினிலே பா வருமா?
கருவி ஒன்று ஆடாமல் கல்லிலே சிலை எழுமா?
பாதையிலே வெள்ளாமை பார்ப்பதுவும் சாத்தியமா?
பதைபதைத்து கேட்டிருந்தாள் பாசமுள்ள மரியம்மாள்.

மின்னல் அலகாலே மேகத்தில் கூடுகட்டும்
வல்லவனாம் வானவன் வார்த்தைச்சரம் தொடுத்தான்.
ஆகுமம்மா ஆண்டவனால் அனைத்தும் என்றிட்டான்.
அன்னை மரி ஆகிவிட்டாள்.

பெத்லஹேம்..
மானுடத்தை விடுவிக்க மணி பார்த்து காத்திருந்த
மன்னர்பிரான் இயேசுவுக்கு இருப்புக் கொள்ளவில்லை
மரியாளுக்கோ இடுப்புவலி தாளவில்லை
இடமுண்டா இடமுண்டா தட்டாத கதவில்லை
தவித்துநின்று தாகத்தோடு கேட்காத ஆளில்லை

அன்று சத்திரத்தில் இடமில்லை என்றார்கள்
இன்று அவர் கொடுத்த இடத்திலேதான்
சரித்திரமே சாய்ந்து கொள்ளுகிறது
கி.மு., கி.பி. என்று நின்று நிலைத்ததைத்தான்
நினைவில் நிறுத்துகிறேன்.

மரியாள், "ஆண்டவரே நான் உனக்கு அடிமை' என்றாள்.
இதுவே சரணாகதி. ராமானுஜர் சொன்ன
பிரபத்தி தத்துவம்தானே அது?
இஸ்லாத்தில் அப்துல்லா என்றால்
அடியான் என்றுதான் பொருள்
நபிகளே, "நான் இறைவனின் அடிமையும் தூதனுமாக
இருக்கிறேன்' என்றுதானே சொன்னார்.

எந்த மதம் எதைத் சொன்னதோ சொல்லவில்லையோ
சரணாகதி தத்துவத்தை சொல்லியிருக்கிறது
அதைப்போலவே அர்த்தமற்ற சடங்குகளான
அம்மைத் தழும்புகளில் சமயத்தில் உண்மை முகம்
உறைந்து அழிந்துவிடக் கூடாது என்பதில்
எல்லா சமயங்களுமே குறியாக இருக்கின்றன.

வெவ்வேறு சமயங்களை சார்ந்தவர்கள் எங்கெங்கே
கைகுலுக்கிக் கொள்ளலாம் என்று பார்க்கவேண்டும்.
ஆனால் மனநோயாளிகளான சில மதவாதிகள்
எங்கெங்கே மனிதர்கள் பிரிந்து நிற்கலாம்;
பிளவுபட்டுப் போகலாம் என்பதற்கே
வழி சொல்கிறார்கள்.

எது எது நம்மைப் பிரிக்குமோ அவற்றை மறப்போம்;
எவை எவை நம்மை இணைக்குமோ அவற்றை நினைப்போம்

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

எழுதியவர் : மீரான் (25-Dec-15, 12:49 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : kiristhu pirappu
பார்வை : 4700

மேலே