கூடா நட்பு

உன்
ஊசிக்குத்தல்கள்
இணைக்க
என்றே நினைத்திருந்தேன்
நீ
நூல் கோர்க்காமல்
குத்திக் கொண்டிருந்த
சேதி தெரியாமல்.

நீயோ
இன்னும்
குத்திய இடத்திலேயே
குத்திக் கொண்டிருக்கிறாய்
என் கிழிசல்
ஒட்டுப் போடப்படவில்லை.

காயங்களின்
காலங்கள் நீண்டபோது
என்
உறக்கம் கலைத்து
எட்டிப் பார்த்தேன்,
நூல் இல்லா
நிலையும் அறிந்தேன்.

காரணமற்ற காரணங்களுக்காய்
என்
முதுகைக் காட்டிக் கொண்டிருந்த
அறியாமையால்
இன்னும் கொஞ்சம்
கூடிப் போனது
வலி.

நூல் கோர்த்துக் கொள்
இல்லையேல்
கிழிசலோடு எனை
வாழவிடு என்று
அப்போது தான்
முதன் முதலாய் சொன்னேன்.

ஊசிக்குக் காதில்லை
என்கிறாய்
சிரித்துக் கொண்டே.

அப்போதே
என்னை
ஆடை மாற்றவேனும்
அனுமதித்திருக்கலாம்
நீ

எழுதியவர் : (5-Dec-09, 1:23 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 786

சிறந்த கவிதைகள்

மேலே