காதலும் கல்யாணமும் - லட்சுமி சுப்ரமணியம் 1958

சாயங்காலம் ஐந்து மணி! பனகல் பார்க் பெஞ்சியின் மேல் உட்கார்ந்து அன்றைக்கு வந்த ‘பத்திரிகை’யைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.

‘பாலசுப்ரமணியம்! மிஸ்டர் பாலசுப்ரமணியம்!’

கூப்பிடுவது நண்பர் அன்புராஜ் என்று திரும்பாமலே தெரிந்துவிட்டது. என் பெயரைத் தப்பாக அப்படிக் கூப்பிடுகிறவர் அவர் ஒருவர்தான். பிரித்த பத்திரிகையை மடக்கிக் கொண்டே, ‘வாருங்கள்! இப்படி உட்காருங்கள்!’ என்று வரவேற்றேன்.

உட்கார்ந்து கொண்டே. ‘இன்றைய பத்திரிகையா? கொடுங்கள், பார்க்கலாம்!’ என்று கேட்டார். நண்பரை அந்தப் பெஞ்சுக்கு இழுத்தது என்னுடைய கையிலிருந்த பத்திரிகைதான் என்று தெரிந்து கொண்டேன். பத்திரிகையை அவர் கையில் கொடுத்து விட்டு எதிரே பு தரையில் விளையாடிக் கொண்டிருந்த குழ்நதையைப்பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

தரையில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று நடந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் சுமார் முப்பது வயது மதிக்கக் கூடிய ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தாள். அவள் நடுநடுவே குழந்தையிடம் விளையாடிய நிலை என் கவனத்தை கவர்ந்தது. எடுப்பான தோற்றம். எழிலை எடுத்துக் காட்டும் அலங்காரம். தலையில் கொண்டையின் மேல் வளைவாகச் செருகியிருந்த மல்லிகைச் சரம் ஒரு ஓரத்தில் அவிழ்ந்து சரிந்து ஊஞ்சலாடியது. குழந்தை அதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.

நண்பர் கனைக்கும் சப்தம் காதில் விழுந்ததும், ரசனையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, அரை மனத்துடன் அவர் பக்கம் திரும்பினேன். அவர் சொன்னது காதில் விழவில்லை. மனம் அவர் பேச்சிலும் பதியவில்லை. மறுபடியும் பார்வை அந்தப் பெண்மணியின் பக்கமே திரும்பியது. ஏதோ ஒரு குறை அவளிடம் இருப்பதாக என் உள்ளுணர்வு சொல்லியது. என்னால் அதை உடனே ஊகிக்க முடியவில்லை.

‘சந்திரா! குழந்தையைப் பார்த்துக் கொள். இதோ வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அவளுடைய கணவராக இருக்குமோ என்னவோ!’

நண்பர் மறுபடியும் கனைக்கும் சப்தம் கேட்டுத் திரும்பினேன். ‘தொந்தரவு பண்ணிவிட்டேனா?’ என்று கேட்டார் அவர்.

‘இல்லை….குழந்தை…அந்தக் குழந்தை…..என்று இழுத்தேன்.

‘சொல்லாமலே தெரிகிறதே? இந்தச் செய்தியைப் பார்த்தீரா?’ என்று, பத்திரிகையை நீட்டினார் என்னிடம். நான் அவர் காட்டிய பக்கம் கண்களைத் திருப்பினேன்.

’ஆண் உடையில் பெண்’ என்ற தலைப்பில் யாரோ ஒரு பெண் ஆண் வேஷம் தரித்து உலாவியதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருப்பதாகவும் செய்தி கூறியது.

’வேடிக்கையாக இருக்கிறதே! ஆண் உடையில் பெண்ணாவது? உண்மையாகவா இருக்கும்’ என்று வியப்போடு சொன்னேன்.

‘அப்படிச் சொல்லிவிடாதேயும்! எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அவருடைய வாழ்க்கையிலேயே அந்த மாதிரி ஓர் அநுபவத்தைப் பார்க்க வேண்டியிருந்தது.’

‘அதென்ன கூத்து?’

‘சொல்கிறேன் கேளும்’ என்றார் அவர்.

வேர்க்கடலை விற்பனைக் கூப்பிட்டு ஆளுக்கு அரையணாவுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு கதை கேட்க உட்கார்ந்தேன்.

அந்த நண்பருடைய பெயர் செல்வராஜ் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்போது இஞ்சினிரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். சர்வே வகுப்புச் சம்பந்தமாக விடுமுறையில் நாற்பது நாட்களுக்கு உளுந்தூர் பேட்டையில் ஒரு முகாம் ஏற்படுத்தி இருந்தார்கள் அதற்காக மாணவர்களும், உபாத்தியாயர்களுமாக அங்கே போயிருந்தார்கள்.

இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது, அங்கே ஏராளமான கட்டிடங்களும் விமான நிலையமும் கட்டிப் போட்டிருந்தார்கள். யுத்தம்முடிந்து போன பிறகு, அவைகளெல்லாம் உபயோகிப்பார் இல்லாமல் காலியாகவே கிடந்தன. மாணவர்கள் தங்குவதற்கும், சமையல் சாப்பாட்டுக்கும், கட்டிடங்கள் வசதியாக அமைந்து உதவின.

அந்த இடம் நல்ல மேட்டுப் பாங்கான பூமியில் அமைந்திருந்தது. சாயங்கால வேளைகளில் இருமருங்கிலும் வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவே, சாலையில் நடந்து போனால் எவ்வளவு தூரம் நடந்தாலும் உடம்பில் அலுப்புத் தெரியாது. பகல் வேளையில் வெயில் வெந்தழலாகப் பொரிந்தாலும், மாலையில் வீசும் காற்றில் பூமி குளிர்ந்துவிடும். திரை திரையாக இருட்டு விழ ஆரம்பிக்கும் போது, காட்டு மல்லிகையின் மணம் மயக்கி அடிமைப்படுத்திவிடும்.

இயற்கையின் அழகு இருக்குமிடத்தில் அந்த அழகு பூர்த்தியாக வேண்டுமானால், அங்கே ஒரு பெண்ணும் இருக்க வேண்டும். எத்தனை பார்வைகள் கண்ணில் பட்டாலும், ஒரு கடைக்கண் பார்வையில் இருக்கும் குளிர்ச்சி அவைகளில் இருப்பதில்லை.

ஒருநாள், செல்வராஜ் சர்வே வகுப்புக்காக வெளியே போயிருந்த போதுதான், அப்படி ஒரு கடைக் கண் பார்வையில் விழ வேண்டியதாயிற்று.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் மாதா கோவிலில் தொழுதுவிட்டு, அவன் தனியாக வந்து கொண்டிருந்தான். வேலைக்கு நடுவே மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்த அவன் பார்வையில் அந்த அழகுப் பிம்பம் விழுந்துவிட்டது.

அழகுத் தெய்வமாகத் தோன்றிய அவளிடம் பேச அவன் உள்ளம் விழைந்தது. ஆனால் முன்பின் அறியாத அவளிடம் எப்படிப் பேசுவது! திரும்பிவிட்டான்!

அன்று சாயங்காலம் செல்வராஜ் காற்று வாங்க ரெயில்வே ஸ்டேஷன் வர நடந்து போய்வரப் புறப்பட்டான். மனம் ஒரு நிலையில் இல்லை! ஏதோ கடமையைச் செய்யத் தவறிவிட்டவன் போல மனம் சங்கடப்பட்டது.

இரவு நேரம்! ஸ்டேஷனில் ரெயில் இல்லை. மங்கிய லாந்தர் வெளிச்சத்தில் மனிதர்கள் நடமாடுவது கூட நிழல் போலத் தெரிந்தது. கார்டு பச்சை விளக்கை ஆட்டியபோது, ஸ்டேஷனுக்கு வெளியே யாரோ ஓடி வருவது தெரிந்தது. அந்த ஆள் உள்ளே வரும்போது, ரெயில் கிளம்பிவிட்டது. வேகமாக நகர்ந்து கொண்டிருந்த ரெயிலில் ஒருமுறை ஏற முயன்று தடுக்கி விழுந்தான் அந்த ஆள். ஸ்டேஷன் மாஸ்டர் ‘பிடி, பிடி!’ என்று கத்தினார். செல்வராஜ் ஓடிப் போய் அவனைப் பிடித்துக் கொண்டான். ரெயில் போய்விட்டது.

அந்த இருளிலும் அவனைத் தீண்டியதும் அவன் உடல் முழுவதும் விவரிக்கவொண்ணாத ஒரு உணர்ச்சி பரவியது. புல்லரிப்பில் உடல் சிலிர்த்தது.

‘இவ்வளவு நேரம் விழுந்திருப்பியே ஐயா! அடுத்த ரெயிலில் போனால் போகிறது’ என்று சொல்லிக் கொண்டே விளக்கடியில் அழைத்துக் கொண்டு வந்தான் அவனை.

அவன் ஒரு இளைஞன்! இருபது வயதுக்கு மேல் இராது. தலையில் முண்டாசு. உடலில் ஜிப்பா. மேலே துண்டால் போர்த்தியிருந்தான். அந்த முகத்தை எங்கேயோ பார்த்தது போல இருந்தது. அந்தக் கண்கள்? குவிந்த அந்த உதடுகள்? நாணம் கலந்த அந்தப் பார்வை! முகத்தில் தேங்கியிருந்த துயரத்தின் சாயை? இடது கண்ணுக்குக் கீழே தென்பட கறுப்பு மச்சம்…கண்ணை உறுத்தியது.

’நீங்கள்…நீ….நீ…’ என்று தடுமாறினான்.

அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். கொஞ்ச நேரம் சமாதானப்படுத்தி, ஒரு வண்டி வைத்து செல்வராஜ் அவனை ஊருக்குள் அழைத்துக் கொண்டு போனான். வழியில் அன்று காலையில் பார்த்த பெண் தான் அவள் என்றும், சித்தியின் கொடுமை தாங்காமல் ஆண் உடையில் ஊரை விட்டு ஓடிவிட முயன்றாள் என்று தெரிந்து கொண்டான்.

சந்திரா என்ற அந்தப்பெண்ணின் பெயர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் தங்கையில் பெயர் கூட அதுதான். அன்று இரவு அவளைச் சமாதானப்படுத்தி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் சேர்த்துவிட்டு வருவதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

இந்த இடத்தில் ஒரு நிமிஷம் கதையை நிறுத்தினார் நண்பர். ‘சந்திரா’ என்ற பெயரைக் கேட்டதும், என் மனம் மேலே கதையில் பதிய மறுத்தது. என் எதிரே குழந்தையோடு உட்கார்ந்திருந்த பெண்மணியின் பெயரும் அது தானே? அந்த முகத்தை மறுபடியும் ஒருமுறைப் பார்க்க வேண்டுமென்று என் மனத்தில் எழுந்த ஆவலை அடக்க முடியாமல் உற்று நோக்கினேன். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. இடது கண்ணுக்குக் கீழே பளிச்சென்று தென்பட்ட கறுப்பு மச்சம் என் கண்ணை உறுத்தியது.

‘அப்புறம் பார்க்கலாம். மேலே கேளுங்கள்! என்று நண்பர் தொடங்கவும் சமாளித்துக் கொண்டு கதையைக் கேட்கத் தயாரானேன்.

‘அப்புறம் செல்வராஜும் அந்தப் பெண்ணும் அடிக்கடி சந்திப்பது வழக்கமாகிவிட்டது! ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்கு வரும்போதோ, மாலை வேளைகளில் ஒதுங்கிய இடங்களிலோ அவர்கள் பிறருக்குத் தெரியாமல் சந்தித்துப் பேசுவதுண்டு.

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. சர்வே வகுப்புக்காக ஏற்படுத்தியிருந்த முகாம் முடியும் நாள் நெருங்கிவிட்டது. செல்வராஜுக்கு உளுந்தூர்பேட்டையை விட்டுப்போகவே மனம் இல்லை. அவனுக்கு மட்டும் அப்போது ஓர் உத்தியோகமும் பெற்றோரின் அனுமதியும் இருந்திருந்தால், சந்திராவை அங்கேயே விட்டு விட்டுப் போகவே மாட்டான். ஆனால், சந்தர்ப்பம் அப்படி இல்லையே!

ஊருக்குப் போவதற்கு முதல் நாள், அவர்கள் கடைசியாகச் சந்தித்த போது, செல்வராஜ் அவளுக்காக முதல் நாள் பாண்டிச்சேரியிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த பரிசைத் தயாராக எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

‘உனக்காக ஒரு பரிசு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். பார். அது என்னவென்று சொல் பார்க்கலாம்?’ என்று அவளிடம் வேடிக்கையாகக் கேட்டான்.

பிரிவுத் துயர் இருந்த அந்த வேளையிலும் ஆவலோடு அவள், ‘என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டாள். ஆனால், செல்வராஜ் அந்தப் பரிசை எடுத்துக் காண்பித்ததும், அந்த முகத்தில் இருந்த குதூகலம் அவ்வளவும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. கண்களில் நீர் முட்டியது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘இவ்வளவு நாட்களாக என் காதுகளை நீங்கள் கவனித்தது இல்லையா?’ என்று தழுதழுத்த குரலில் கேட்டாள். அப்பொழுது தான் செல்வராஜ் அவளுடைய இடது காதைக் கவனித்தான். அது மூளியாக இருந்தது. காதின் கீழே அரை விரல் அகலத்துக்குச் சதையே இல்லாமல் இருந்தது. அவன் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்தது ஒரு ஜதை முத்துத் தோடு!.

’எனக்குத் தெரியவில்லை சந்திரா! வருத்தப்படாதே! என் தங்கைக்காக ஒரு முத்து மாலை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். அதை வேண்டுமானால் நீ எடுத்துக் கொள். உனக்கு அதுவாவது சந்தோஷமாக இருந்தால் சரிதான்’ என்று சொன்னான்.

பக்கத்தில் அவ்வளவு நேரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தடுக்கி விழுந்து ‘ஓ’வென்று அழ ஆரம்பித்துவிட்டதால், கதை அங்கே மறுபடியும் தடைபட்டது. அந்தப் பெண்மணி ஓடிப்போய் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். அப்போதுதான் கவனித்தேன். அவ்வளவு நேரமும் அந்தப்பெண்ணிடம் இருப்பதாக என் உள்ளுணர்வு கூறிய அந்தக் குறை – என் கண்ணுக்கு அதுவரையில் புலப்படாமல் இருந்த அந்தக் குறை – இப்போது சட்டென்று என் கண்ணில் பட்டது. அந்தப்பெண்ணின் இடதுகாது மூளியாக இருந்தது. அரை விரல் அகலத்துக்கு அங்கே சதை காணாமல் போயிருந்தது!

எனக்கு ‘குப்’பென்று உடல் முழுவதும் வியர்த்தது. ஆவல் தூண்ட, ‘ அப்புறம்? மேலே என்ன ஆயிற்று?’ என்று கதையைக் கேட்டேன்.

சந்திராவை அவனால் சமாதானப்படுத்தவே முடியவிலை. அவனைப்பிரிவதற்கு அவள் சம்மதிக்கவே இல்லை. ‘நீங்கள் போய்விட்டால் என்னை சித்தி யாராவது ஒரு கிழவருக்குக் கட்டி விடுவாள். அப்புறம் நீங்கள் என்னை உயிரோடு பார்க்க முடியாது’ என்று அழுதாள்.

அவன் என்ன செய்ய முடியும்? அவளை எப்படி அழைத்துப் போக முடியும்? உபாத்தியாயர்களோடும் மாணவர்களோடும் அங்கே வந்திருக்கும் ஒரு மாணவன் ஒரு பெண்ணை எப்படி அழைத்துக் கொண்டு போவது? அவனுடைய தாய் தந்தையர் என்ன சொல்லுவார்கள்? அவ்வளவு துணிச்சல் அவனுக்கு ஏது?

அதனால் அவளுக்குச் சொல்லாமலே ரெயில் ஏறிவிட்டான். மற்ற மாணவர்கள் புறப்படுவதற்காக இருந்த ரெயிலுக்கு முதல் ரெயிலிலேயே ஊருக்குப் போய்விட்டான். அவன் ஞாபகார்த்தமாக அவளிடம் அந்த முத்துமாலையை மட்டும் விட்டுப் போயிருந்தான்.

கதை இப்படித்தான் சோகரசமாக முடியுமென்று எனக்கு முதலிலேயே தெரியும். சந்திரா அவனுடன் எப்படிப் போயிருக்க முடியும்? என்னுடைய ஊகம் சரிதான். என் பார்வை என்னையறியாமல், என்முன் குழந்தையோடு உட்கார்ந்திருந்த சந்திராவின் பக்கம் திரும்பியது. குழந்தை அதன் தாயின் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து வாயில் வைத்து ருசி பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் கணவர் வந்துவிட்டார். அந்தப் பெண் குழந்தையோடு கிளம்பிக் கொண்டிருந்தாள். என் நண்பர் அதுவரையில் புரிந்து கொள்ளாமல் இருந்த அந்த மர்மத்தை உடனே சொல்லிவிட வேண்டுமென்ற ஆவலில் மனம் துடிதுடித்தது.

பரபரப்போடு, ‘காதல் முறிந்து போன செல்வராஜ் என்ன ஆனான்?’ என்று கேட்டேன்.

‘என்ன ஐயா உளறுகிறீர்கள்?’

‘பின்னே என்ன?’

’செல்வராஜ் அவன் மனைவி சந்திராவோடும் நான்கு குழந்தைகளுடனும் வருகிற சம்பளம் போதாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். அதுதான் குடும்ப வாழ்க்கை!’

’என்னது? என்னது?’

‘ஆமாம். ஒரு சமாசாரம் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண்ணின் முகத்தை எப்போது ஒருவன் ஏறிட்டுப் பார்த்தானோ அப்போதே அவன் தொலைந்தான். பார்க்க வேண்டும் என்று மனத்தில் நினைத்தாலும் தொலைந்தான். காதல் வாழ்க்கை வேறு. குடும்ப வாழ்க்கை வேறுதான்!’

கறுப்பு மச்சமும், மூளியான காதும், முத்துமாலையும் என் கண் முன்னால் தோன்றி தோன்றி மறைந்தன.

‘ஆமாம்! சந்திராவின் தகப்பனார், பர்மாவில் யுத்தத்தின் போது காணாமல் போயிருந்தவர் திடீரென்று பெரும் செல்வத்தோடு வந்து சேர்ந்தார். சந்திராவின் விருப்பப்படி செல்வராஜைத் தேடிப் பிடித்துக் கல்யாணம் செய்துவைத்தார். போகட்டும்! ஒரு நண்பனின் இவ்வளவு அந்தரங்கமான வாழ்க்கை எனக்கு எப்படித் தெரிந்தது என்று நீ கேட்கவில்லையே?’

‘எப்படி?’

‘அந்த செல்வராஜ் வேறு யாருமில்லை. இந்த அன்புராஜ் தான்!’

மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன். மறுபடியும் நான் நிமிர்ந்து பார்த்தபோது, அந்தப் பெண்மணி கணவருடனும் குழந்தையுடனும் எழுந்து போய்க் கொண்டிருந்தாள். அவ்வளவு நேரமும் அநாவசியமாக அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததற்காக அவள் கோபத்துக்கு நான் ஆளாகியிருப்பதை அவளுடைய முகபாவத்திலிருந்து உணர்ந்து கொண்டேன்.

(தினமணி கதிர் 23-02-1958)

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (26-Dec-15, 11:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 182

மேலே