புல் மேல் பனி - வாசவன் தினமணி கதிர் ஜனவரி 1967 இதழில் வெளிவந்த சிறுகதை

வாசனைச் சோப்பை யார் கண்டார்கள்? துணிக்குப் போடுகிற ஒட்டுச் சோப்புத்தான். குளியல் அறையைச் சாத்திக்கொண்டு பூ நுரையாய் பொங்கிய சோப்பை உடல் முழுதும் தேய்த்துவிட்டு, தலைக்குமேல் இருந்த குழாயைத் திருகியதும், பனியாய் இறங்கிய நீரில் கனவு மயக்கத்தின் குளுமை பரவுகிறது. குளித்து முடித்ததும் சங்கரி மாமி கட்டிக் கழித்த புடவைகளில் நல்லதாக ஒன்றை எடுத்து உடுத்திக் கொண்டு, தலையைப் படியப் படிய வாரிவிட்டுக் கொள்கிறேன்.

அதிக நிதானத்தில் அளவாய் நெற்றிக்கு இட்டுக் கொள்கிறேன். வாசலில் பூக்காரனுடைய குரல் கேட்கிறது. கையில் அகப்பட்ட காசை எடுத்துக் கொண்டு ஓடிப்போய்க் கதம்பமும் மல்லிகையும் வாங்கிக் கொண்டு வந்து தலை கொள்ளாமல் வைத்துக் கொள்கிறேன். இத்தனையும் செய்து கொண்ட பிறகு, என்னையே நான் நிழலாகப் பார்த்துக் கொள்ளும் ஆசையில், நிலைக்கண்ணாடியின் முன்னால் போய் ஆவலோடு நிற்கிறேன்.

எனக்கு நானே ஒரு கவர்ச்சியாய், பிரமிப்பாய் நின்று கொண்டிருக்கிற வேளையில்..

சங்கரி மாமி எனக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு கேட்கிறாள், ‘ஏ குட்டி, இன்றைக்கு உனக்கு என்ன வந்தது?’

எனக்குச் சர்வாங்கமும் கூசிப் போய் விடுகிறது. அருகதை இல்லாத ஒன்றைத் திருட்டுத்தனமாய் அடைந்த பரபரப்பும், அப்பொழுது கையும் களவுமாய்ப் பிடிபட்டுவிட்டதைப் போன்ற பதைபதைப்பும் எனக்கு ஏற்படுகின்றன.

‘எல்லாரும் இங்கே வாருங்களேன்! வந்து இந்தக் கூத்தைப் பாருங்களேன்! என்று அலறி ஆர்ப்பாட்டம் செய்து ஒரு சந்தைக் கடையையே கூட்டு விடுகிறாள் சங்கரி மாமி. வீடெல்லாம் விழியாகி என்னை மொய்க்கிறது.

எதிலும் பட்டுக் கொள்ளாமல் விலகி இருந்தே வேதாந்தத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கும் மாமா கூடப் பெரிதாகக் கண்ணை சிமிட்டிக் கொண்டு, ‘என்னடி மீனா, நீதானா? நம்ப முடியவில்லையே! திடீரென்று உனக்கு என்ன வந்துவிட்டது?’ என்று அதிசயத்தோடு கேட்கிறார்.

துள்ளத் துளியூண்டு ஜானா! அவள் கேட்கிறாள்: ‘ஏண்டி மீனா! அடுப்பிலே வேகற ஜென்மத்துக்கு எதுக்கடி இத்தனை மேக்கப்? சினிமாவிலே நடிக்கப் போறாயா?’

மற்றவர்கள் எல்லாரும் சிரிக்கிறார்கள், சிலர் கையையும் தட்டுகிறார்கள்.

‘போங்கள் அப்பாலே!’ என்று திடீரென்று வந்தது ஒரு குரல். ஓய்ந்தது சிரிப்பு; உலர்ந்துவிட்டது ரகளை.



எதிரே வந்து நிற்கிறார் சங்கரி மாமியின் பிள்ளை பாலு. பெரிய பணக்காரர். மதுரையில் நல்ல வரும்படியுடன் வக்கீல் தொழில் செய்து கொண்டிருப்பவர். அவருக்குப்பெண்கொடுக்க வருகிற பிரமுகர்களுக்குப் பேட்டி கொடுக்கவே மாமிக்கு நாள் முழுவதும் சரியாக இருக்கிறது. இந்த உயர்ந்த நிலையிலுள்ள பாலு, கொல்லைக் கிணற்றடியில் வயிற்றுச் சோற்றுக்குக் கை நிறையக் கரியை அப்பிக் கொண்டிருக்கும் என்னிடம், எதன் அழகை வியந்து நிற்கிறார்?

அவர் வியப்பில் எனக்கொரு செய்தி இருக்கிறது. அவர் தன் வியப்பின் ஜில்லிப்பில் என்னை நினைக்கத் தூண்டிக் கொண்டிருக்கையில், என் தரித்திரத்தை எண்ணெயாக உறிஞ்சி, என்னில் ஒரு விளக்கேற்றி இருக்கும் அழகையும், அந்த அழகின் சுமையில் அழுந்திப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் என் பெண்மையையும் பற்றியே சிந்திக்கிறேன்.

அவர் தன் யஜமான ஸ்தானத்தை மறந்துவிட்டு நிற்கும் நிலையில், நானும் வேலைக்காரி என்பதை மறந்துவிட வேண்டியதுதானே? ‘எனக்கு வேலை இருக்கிறது. இவ்வளவு பாத்திரங்களையும் நான் விளக்கியாக வேண்டும். தயவு செய்து கொஞ்சம் போகிறீர்களா?’

அவர் சிரித்தார். அதுதான் ஏமாற்றத்தை மறைக்கப் பூசப்பட்ட புனுகு என்று எனக்குச் சொல்ல வேண்டியதில்லை.

‘மீனா! போகாமல் இங்கேயா நின்று கொண்டிருப்பேன்! என்னை நீ புரிந்து கொண்டு விட்டாயா? சொல், போய்விடுகிறேன்.’

‘ஒரு சில வார்த்தைகளைக் கொண்டு ஒருவரைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் உங்களையும் நான் புரிந்து கொண்டு விட்டதாகச் சொல்லலாம்; ஆனால் ஒரு யுகத்துக்கும் நிற்க வேண்டிய பலத்தை ஒரு கண உணர்ச்சியில் முடிவு கட்டிவிடலாமா?’

‘என்ன, என்ன சொல்கிறாய் மீனா?’

‘ஆடம்பரமான வார்த்தைகளை உபயோகிப்பதில் இன்று ஒரு கவர்ச்சி இருக்கிறது. இப்பொழுதைய மனிதர்கள் ஆடைகளுக்கு அடுத்தபடியாகச் சொற்களைத் தான் விரும்பி அணிகிறார்கள். அணியப்படுபவை அழுக்குப் படலாம். கழற்றி எறியவும் கூடும். இல்லையா?’

பாலு என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அவர் பார்வையில் அலட்சியத்தைவிட அச்சம் குடி கொண்டு விட்டதை அவருடைய ‘வழக்கறிஞ்சர் அறி’வினாலுங்கூட மறைக்க முடியவில்லை.

‘என்னை மன்னித்து விடு!’

அவர் குற்றவாளியாகவும், நான் ஒரு பெரிய மனுஷியாகவும் மாறிவிட்ட நிலையில் என் மனத்தில் அந்த அந்தஸ்துக்குரிய கம்பீரம் எப்படித்தான் வந்ததோ? ‘உங்களை மன்னிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் நீங்கள் செய்த குற்றம் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டேன்.

அவர் போய்க் கொண்டிருந்தார்.

என்னை வேலைக்காரியாகவே பார்த்த என் உலகத்தில் என்னை ஒரு பெண்ணாகவும் பார்த்து விட்டுப் போன பாலுவுக்காகப் பெருமூச்சுவிட்டேன்.

அன்று இரவு சங்கரி மாமிக்குக் கொஞ்சம் பிரஷர் தூக்கலாகி விட்டது. படுத்துக் கொண்டிருந்த பாலுவின் மண்டையை மாமி சதா உருட்டிக் கொண்டிருந்தாள். ஒரு நீதிபதியின் பெண்ணை பாலுவுக்கு முடிக்க முக்கால்வாசி தீர்மானமாகி இருந்தது. பெரிய இடம். அவர்கள் அடிக்கடி அங்கே வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் இரண்டொரு தடவை வந்து போயிருக்கிறாள். சும்மா சொல்லலாமா? அவள் மகாலட்சுமியின் அவதாரம்தான். பெண் பார்க்கத்தான் கடிதம் எழுதி பாலுவை வரவழைத்திருந்தாள் மாமி. அதற்காகவே புறப்பட்டு வந்த அவர், அம்மாவிடம் இப்பொழுது தனக்குத் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்! அதனால் மாமிக்கு கவலையும், பிளட் பிரஷரும் அதிகமாகிவிட்டன.

நான் மட்டுமே ஏனோ மகிழ்ந்து போகிறேன். அவர் அப்படி மறுத்ததற்குக்காரணம் நான் தானோ? திகைப்பின் கொடியில் கனவுப் பூக்கள் பூக்கின்றன.

‘டீ குட்டி! பாலுவுக்குப் பால் கொண்டு போய்க் கொடுத்தாயா?’ என்று படுக்கையிலிருந்து கொண்டே இரைகிறாள் மாமி.

‘இல்லையே’.

‘கொண்டு போய்க் கொடுப்பதற்கு என்ன கொள்ளை?’

கொள்ளைதான்! வெட்கக் கொள்ளைதான்.

‘போயேண்டி!’

நான் பால் தம்பளரை எடுத்துக்கொண்டு மாடிக்குப் போகிறேன்.

பாலு ஜன்னல் பக்கமாக ஈசிச்சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு, ஏதோ புத்தகம் படிக்கிறார்.

‘இங்கே கொஞ்சம் திரும்புங்களேன்’

அவர் பார்வை மட்டும் திரும்புகிறது. அந்தப் பார்வை ஒரு சட்டப் புத்தகத்தைப் போல் சுவை இல்லாமல் இருந்தது.



‘கிணற்றடியில் உங்களை மன்னிக்கச் சொன்னீர்கள் அல்லவா? நான் ரொம்ப நேரம் யோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்!’

மனிதர் என்னவென்று கேட்க வேண்டாமா. மண்ணாந்தையாக இருந்தார்.

நானே தொடர்ந்தேன்: ‘நான் உங்களை மன்னிக்கப் போவதில்லை!’

‘பிறகு?’ என்று பதறிக் கேட்டார்.

‘நீங்கள் குற்றத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.’

‘அப்படி என்றாள்?’

‘நீங்கள் எப்படியோ, நானும் அப்படித்தான்!’

அதைக் கேட்டதும் அவர் உற்சாகம் அடையவில்லை. கண்ணை மூடிக்கொண்டு விட்டார்.

அவர் உணர்வில் உறங்கத் தெரிந்து கொண்டு விட்டாரோ?

ஏதோ குரல் கீழிருந்து என்னை அழைக்கிறது. நான் அறையைவிட்டுக் கிளம்பும் போது, ‘என்னை மன்னித்துவிடு!’ என்று கெஞ்சுகிறது பாலுவின் குரல்.

‘உங்களை மன்னிக்கவே மாட்டேன்!’ என்று அழுகை வெடிக்க அறையை விட்டு வெளியேறினான் நான்.

மறுநாள் மாமாவுக்கு வெந்நீர் கொடுப்பதற்காக மாடிக்குப்போன நான், பாலுவின் அறையில் சங்கரி மாமியின் குரல் கேட்டு நின்றேன். பேச்சில் என் பெயர் அடிபட்டதால் காதும் கொடுத்தேன்.

‘மீனாவை விலக்கிவிட வேண்டுமா? அவள் என்ன தப்புச் செய்தாள்?’ என்று கேட்கிறாள் மாமி.

‘இதுவரை செய்யவில்லை. ஆனால் இனிமேல் செய்வாள்!’ என்கிறார் பாலு.

மாமி சிரிக்கிறாள் ‘நீ அப்படி நினைக்கக் காரணம்?’

‘என்றும் இல்லாத திருநாளாக நேற்று அவள் அலங்காரம் செய்து கொண்டாள்..’

இடை மறிக்கிறாள் மாமி: ‘உனக்கு என்னடா பாலு, இரட்டை நாக்கா? மீனாவும் பெண் தானே? அவளுக்கும் ஆசை என்று ஒன்று இருக்காதா? ஏதோ உங்களைப் போலப் புடவை கட்டிக் கொண்டாள், பூ வைத்துக் கொண்டாள், இதற்கு ஏன் இவ்வளவு ரகளை செய்கிறீர்கள்? இவ்வளவு கேவலமான முறையில் சந்தோஷப்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று நேற்று எங்களை எல்லாம் திட்டித் தீர்த்தாயே, அதை மறந்துவிட்டாயா?’

சிறிது நேரத்துக்குப்பிறகு பாலுவின் குரல் கேட்டது. ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவளை நீ விலக்கப்போகிறாயா இல்லையா?’

‘நீ ஆயிரம் தான் அடித்தொண்டை போட்டுக் கத்தினாலும், அவளை நான் விலக்கப் போவதில்லை. அவள் அநாதை. உன்னை விட அவள் நம் குடும்பத்துக்கு உபகாரமாகவும் இருப்பவள். அவளுடைய நிலைக்காகவும், நம் குடும்பத்தின் அவசியத்துக்காகவும் அவளை விலக்குவதற்கில்லை. எனக்குக் கீழே வேலை இருக்கிறது. போகிறேன்…’

காலடிச் சத்தம் கேட்கிறது. சங்கரி மாமி வருகிறார். நான் மாடியிலிருந்தும், கண்ணிலிருந்தும் நழுவி ஓடுகிறேன்.

மாலை நேரம். சங்கரி மாமி கோயிலுக்குப் போய்விட்டாள். மாமா காற்று வாங்கக் கிளம்பி விட்டார். ஜானா தோட்டத்து மலர்க் கூட்டத்தில் மலராகிச் சிரிக்கிறாள். பாலுவும் எங்கேயோ போவதற்காக ‘டிரஸ்’ செய்துகொண்டு மாடியிலிருந்து இறங்கி வருகிறார். நான் அவர் எதிரே போய் அணை போட்டு நிற்கிறேன். அவர் திடுக்கிட்டு விழிக்கிறார்.

எனக்குள் பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரம் வெடித்தது. ‘நீங்கள் மனிதர்தானா?’

அவர் பதில் பேசவில்லை. அவருடைய மெளனம் இன்னும் அதிகமாக என் சீற்றத்தைக் கிளறிவிட்டது. ‘சோற்று மாடாக இருந்து கொண்டிருந்த என்னைக் காதலிக்கத் தூண்டியது யார்? மகா புருஷரான நீங்கள் தானே? அதை மறைக்கத்தான் என்னை வேலையிலிருந்து விலக்கச் சொன்னீர்களோ? ஒரு பாவமும் அறியாத ஒருத்தியின் மனத்தை இப்படி உதைத்து விளையாட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’

‘வெட்கப்படுவதைவிட நான் வேதனைப்பட வேண்டியதே அவசியமாகவும், அவசரமாகவும் இருந்தது,மீனா!’

‘துரோகம் செய்ய வேண்டியது என்று அதைத் திருத்திக் கொல்ளுங்கள்!’

‘அறிவுபூர்வமான பேச்சைக் கொண்டு ஒரு பலவீனத்தை மறைக்க நான் இப்பொழுது தயாராக இல்லை. மீனா, நான் ஏற்கனவே கல்யாணமானவன்!’

இவர் யாருக்குக் காது குத்துகிறார்? பத்து வருஷங்களாக இவர்கள் வீட்டில்தானே நான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்? எனக்குத் தெரியாமல் இவருக்குத் திருமணம் நடந்துவிட்டதா? நேற்றுக் கூட ஜட்ஜ் வீட்டுப்பெண்ணை, இவர் வேண்டாம் என்று நிராகரித்தாரே! அபத்தத்தையும், அவருடைய அயோக்கியத்தனத்தையும் தாள முடியாமல், ‘போதும், நிறுத்தங்கள்’ என்று கத்தினேன்.

‘போதாது, மீனா! முழுவதையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.’ என்று கூறிக் கொண்டே அவர் மணிப்பர்ஸை எடுத்தார். அதிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டினார்.

அது ஒரு திருமண போட்டோ!

மணமகனாக பாலு! அவர் அருகே மாலையும் கழுத்துமாக அழகி ஒருத்தி!

‘இப்பொழுதாவது என்னை நீ நம்புகிறாயா?’ என்று கேட்கிறார் பாலு.

‘நம்பித்தான் நாசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறேனே!’ என்று சொல்ல நினைத்தவள் அப்படிச் சொல்ல முடியாமல் விம்முகிறேன்.

‘உன்னை நேற்று மத்தியானம் வரை நாசப்படுத்தத் தான் நினைத்தேன், மீனா. உன் அழகில் மயங்கிப் போய் நான் ஒரு மிருகமாகவும் தயாராக இருந்தேன். நேற்று இரவு உன் உள்ளக் கிடக்கையை வெளியிட்ட போதும், நீ என்னை உன் வாழ்க்கை முழுவதுக்கும் நம்பும் பெருமிதத்தோடு கூர்ந்து பார்த்த போதும் என்னை நேர்மையாய் எதிர்ப்பார்கும் உன் பெண்மை, கொஞ்சமும் நேர்மையற்ற என்னைத் தீப்போலப் பொசுக்கியது. உன்னிடமிருந்து நான் மதுரைக்குப் போய் விட்டாலே தப்பித்துக் கொண்டு விடுவேன். ஆனால் அதிலிருந்து நீ கொஞ்சமாவது மீள வேண்டுமானால், நான் அயோக்கியன் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் என் மேல் நீ வைத்திருக்கும் அன்பு ஆத்திரமாக மாறும் என்று நினைத்தேன். அப்பாவின் அறையிலிருந்து நீ வெளியே வருவதைப் பார்த்த நான், ஆத்திரத்தை அடக்கி அழைத்தேன். சற்று உரக்கவே உன்னை அவதூறாகப் பேசினேன். உன்னை உடனே வேலையை விட்டு விலக்கும்படி அம்மாவிடம் கேட்டுக் கொண்டேன். நீ அதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாய். நான் எதிர்பார்த்தபடியே என் மேல் ஆத்திரமும் அடைந்தால், அதற்குப் பிறகு நீ மூலையில் விழுந்து பொசுங்குவாய் என்று எண்ணினேன். மாறாக வினை கடியப் புறப்பட்ட வேலாக என் முன் வந்து நிற்கிறாய். உன் எதிரே பொய் பேச முடியவில்லை. தவறு செய்ய முடியவில்லை. நான் கற்ற படிப்பும், அனுபவங்களும் உன் முன்னால் கோழையாகிக் குனிந்து நிற்கச் செய்துள்ளன. என் பலவீனத்தை மறைக்க முடியாமல் என் சாமர்த்தியம் தோற்றும் போன நிகழ்ச்சியும் உன் முன்னால் தான் நிகழந்திருக்கிறது.’

அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே வாசலில் சங்கரி மாமியின் குரல் கேட்டது, அதற்குள்ளாகவே திரும்பிவிட்டாள்!

‘மீனா?’

‘ஊம்…!’

‘என் கல்யாணத்தைப் பற்றி அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது. காதல் கல்யாணம் அதுவும் வேறு சாதியில். அம்மாவுக்கு அது தெரிந்தால் அந்தக் கணமே உயிர் விட்டுவிடுவாள். அவளுக்கு பிளட் பிரஷர் என்பதால் என் திருமண விஷயத்தை மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கிறேன். பாவம், அம்மா! எனக்கு ஊரெல்லாம் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள். உள்ளதைச் சொல்ல எனக்குத் துணிவில்லை. அதனால் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன். நான் வரன் பார்க்க வந்ததும், வேண்டாம் என்று மறுத்ததும் என் ஏமாற்ற நாடகத்தின் தந்திரக் காட்சிகள்தாம், மீனா…’

இப்பொழுது சங்கரி மாமி வாசற்படி ஏறிவந்து கொண்டிருந்தாள்.

‘மீனா! தயவு செய்து என்னை மறந்துவிடு; மன்னித்து விடு!’

பாலுவின் உருக்கமான குரல், என் மனத்தில் விழுந்து அழுந்திக் கிடந்த கல்லை,மலையாக்கிவிட்டது.

மாமி நெருங்கிக் கொண்டிருக்கிறாள்.

‘மீனா! அம்மா வந்து கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் தொடர்ந்து என்னை நீ குற்றவாளியாக்கிக் கொண்டிருந்தால், அவள் எதிரே நான் பிடிபட்டு நிற்பேன். நான் கல்யாணமானவன் என்பது தெரிந்தால், அவள் தன் ஏமாற்றத்தை துணிந்து ஏற்றுக் கொள்ள மாட்டாள். தயவு செய்து பேச்சை விடு! அந்தப் போட்டோவை இப்படிக்கொடு!’ கெஞ்சுகிறார் பாலு.

அதே சமயத்தில், ‘திருட்டு நாயே! யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலுவை மயக்கிக் கொண்டிருந்தாயா? இதற்காகக்தானா நீ நேற்று சீவிச் சிங்காரித்துக் கொண்டாய்?’ என்று சீறிக் கொண்டே எங்கள் எதிரே வந்து நிற்கிறார் சங்கரி மாமி.

‘அதில்லை அம்மா…’ என்று திணறுகிறார் பாலு.

‘எதில்லையடா? இவளை விலக்கி விடும்படி என்னிடம் சொல்லிவிட்டு, இப்பொழுது பல்லைக் காட்டி நிற்கிறாயே? உன்னைச் சொல்லிக் குற்றம் என்ன? பெண்ணாகப் பிறந்த ஜன்மம் வெட்கம், மானம் விட்டு எதிரே வந்து மயக்கினால், நீ என்ன செய்வாய்?’ என்று தன்பிள்ளைக்குச் சான்றிதழ் தந்துவிட்டு, எரிக்கும் விழிகளை என் பக்கம் திருப்பினாள் மாமி. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்த சண்டாளி! உன் பவிஷுக்குப் பணக்காரப் பிள்ளையாகக் கேட்கிறதோ? என் எதிரே நிற்காதே போடி, வெளியே!’

பெற்ற பெண்ணுக்கு மேலாக என்னை வளர்த்த மாமிக்கு நான் ஏழேழு ஜன்மத்துக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்பொழுது அவள் என்னை விரட்டிவிடுவதற்காக நான் ஆயாசப்பட்டால் நன்றி மறந்தவளாவேன். ஆனால் நான் துரத்தப்படுவதற்கு நியாயமான காரணம் இல்லை என்பதை பாலு அறிவார்.

‘இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தொலைந்து போடி!’ மாமி நிர்த்தாட்சண்யமாக கத்துகிறாள்.

அவளால் எவ்வளவு அன்பாக இருக்க முடிந்ததோ அவ்வளவு நிர்த்தாட்சண்யமாகவும் இருக்க முடிகிறது. எங்கேயோ ஒருத்தியைக் கல்யாணம் செய்துவிட்டு, இந்த அநாதையின் தூங்கிக் கிடந்த உள்ளத்தைச் சீண்டி இழுத்துவிட்டு, நல்ல பிள்ளையாக நின்றுகொண்டிருக்கும் பாலு.

நேற்றுவரை எனக்குத் தாயாக இருந்துவிட்டு இன்று பாலுவுக்குத் தாயாகி என்னைத் தகித்து நிற்கும் சங்கரி மாமி.

நான் புழுங்கிய அடுக்களை, கிணற்றடி, என்னை வேக வைத்த அடுப்பு, துணை இருந்த அழுக்கு எல்லாவற்றையும் விட்டு இதோ நான் போய்க் கொண்டிருக்கிறேன். ஒரேயொரு நாள் நான் பெண்ணாகிய குற்றம், என் வயிற்றுச் சோற்றில் மண்ணாகி விழுந்து விட்டது.

இமய மலை நெடிதுயர்ந்து நிற்கிற இந்த உலகத்தில் தான் எங்கேயோ ஒரு மூலையில் புல்லும் இருக்கிறது. கேவலமான அந்தப் புல்லையும் பெருமைப்படுத்த பனித்துளி இருக்கிறது. புல் நுனிக்கு மகுடம் சூட்டும் பனித்துளியின் வாழ்வு, அற்பம் தான். ஆனாலும் என்ன? அந்த அற்பத்தின் சோகத்தையும், சுகத்தையும், பெருமையையும் புல் நுனி தானே அறியும். நான் அறிந்துகொண்ட புல் நுனி அநியாயமாய்த் தூக்கி எறியப்பட்ட அற்பம். ஆனாலும் என்ன? ஒரேயொரு நாளாவது பெண்ணாகக் காதலித்து விட்டுத்தானே நாசமாய்ப் போனேன்!

நாசம் என் கிரீடம்!

(தினமணி கதிர் 6.1.1967 இதழில் வெளிவந்த சிறுகதை)

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (26-Dec-15, 10:12 pm)
பார்வை : 107

மேலே