இது படகு போகும் வீதி

மழையின் தாகத்தால் - எங்கள்
குடிசைகள் குடிக்கப்பட்டது.
மழலையின் புத்தகங்கள்
மழையால் படிக்கப்பட்டது.

ஈரமான ஆடையோடு - கடும்
குளிரையும் உடுத்திட்டோம்.
இதமாக இருந்ததினால் - நாங்கள்
நாய்களோடு படுத்திட்டோம்.

நதியோரமே வாழ்ந்து - நாங்கள்
நாணலாய் மாறிவிட்டோம்.
நாணலாக நின்றே..
நடுத்தண்ணீரில் ஊறிவிட்டோம்.

அழுகின்றகுழந்தைக்கு
நீர அள்ளிக்காட்டித் தூங்கவைத்தோம்.
பாடையும் பயணமுமின்றி
இறந்தவனைக் கூட ஏங்கவைத்தோம்.!

பஞ்சையும் நெருப்பையும்
விளக்காக்கினோம்.- ஒளி
படுகின்ற திசையை
கிழக்காக்கினோம்.

பால்சோறு கேட்டு அழவில்லை - நாங்கள்
பாலுக்கும் சோற்றுக்கும் அழுதிருந்தோம்.
பாக்கெட்டில் கிடைத்த நீர் அருந்தி
பலநாள் உயிர்பிழைக்கத் தொழுதிருந்தோம்.

மிதந்தது போதாதென - இனியும்
இலவசங்களில் மிதந்திடுவோம்.
இழந்தது போதாதென
இன்னும் சில சவங்களைச் சுமந்திடுவோம்.

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (27-Dec-15, 12:21 pm)
பார்வை : 380

மேலே