பெண்ணென்று மறந்து பொருளென்று நினைத்தாயோ - கற்குவேல் பா
மார்பு தெரியாத உடைகளை
உடுத்திக் கொண்டு நடிக்க
ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்
ஒருவேளை அனுமதித்தாலும்
குனிந்து நிமிர்ந்து ஆட வைத்து
கேமராவை முடிந்தவரை
முன் எடுத்துச் செல்ல முயலுங்கள் !
தொடைப்பகுதி நன்றாக தெரியும் அளவு
மைக்ரோமினி ரக பாவாடைகளை
அணிய கட்டளையிடுங்கள்
அணிய மறுக்கும் நடிகைகளுக்கு
முழுப் பாவாடைகளை அணியவிட்டு
இடை முதல் பாதம் வரை
இரு ஓரங்களிலும் கிழித்து விடுங்கள்
பின் தானாக தெரிந்துவிடும் !
முடிந்தவரை தொப்புள் தெரியும் அளவு
சேலைகளை , விலக்கி நடிக்கச் சொல்லுங்கள்
மறுப்பின் , அத்தனையும் தெரியும் அளவு
மெல்லிய சேலை அணிய கட்டளையிடுங்கள்
அதையும் மறுப்பின் , காற்றாடி சுழலவிட்டு
ஒரு ஓரமாக ஒதுங்க வைத்து
பளிச்சென்று படம் பிடித்து விடுங்கள்
படத்திற்கு மூன்று முறையாவது
மறவாமல் முத்தக்காட்சிகளை பதியுங்கள்
கதாநாயகன் அடிவாங்கினாலும் சரி
கதாநாயகி கோபித்துக் கொண்டாலும் சரி
மறுக்கும் புதுமுக நடிகைகளுக்கு
படுக்கையறை கட்சிகளை கட்டாயமாக்குங்கள்
கடைசியில் சென்சாரில் நீக்கினால்
நீக்கிக் கொள்ளட்டும் - கவலை விடுங்கள் !
கதையின் தன்மைக்கே திரைப்படம்
நூறு நாட்களைக் கடந்து ஒடுமானாலும்
மூன்று பாடல்களிலாவது
நானூறு துணை ஆட்டக்கார பெண்களை
கூட்டமாக ஆட விடுங்கள்
முக்கியமாக அவர்களின் உடைகளை
முடிந்தவரை உள்ளங்கையளவு குறைத்து
ஆங்காங்கே ஜூம் செய்து கொள்ளுங்கள் !
அத்தனையும் கச்சிதமாக முடித்துவிட்டு
தவறியேனும் எடிட்டிங்கில் எதையும்
நீக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
பிறகு நீங்கள் இத்தனை நாட்கள்
ஓடி ஓடி ஜூம் செய்ததற்கு
பலனில்லாமல் போய் விடும் - பின்பு
பணம் கொடுத்தேனும் எது செய்தேனும்
" யூ " தரச்சான்றிதல் வாங்கி விடலாம்
திரைப்படத்தை விற்பனை செய்ய
தயாரிப்பாளருக்கு முன்னோட்டம்
காட்டும் நேரங்களின் - மறந்தும்
உங்கள் வீட்டுப் பெண்களின் நினைவு
கண்களை எட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
பின்பு , அதுவரை நரம்புகளை
முறுக்கேற்றிக் கொண்டிருந்த ஹார்மோன்கள்
விறுக்கென்று இறங்கிவிடும் !!!
#பெண்ணென்று_மறந்து_பொருளென்று_நினைத்தாயோ ?
#கற்குவேல்_பா