கனவுகளின் உருவம் கலைந்தது

ஜெயினுலாவுதீன் பெற்றெடுத்த மகன்
ஜனங்களிடம் பெயரெடுத்த மகான்.

கருணையோடு மாணவர்களுக்குக்
கல்வி நீர் கொட்டிய அருவி
திக்கற்றுத் திரிந்த இளைஞர்களுக்குத்
திசை காட்டிய கருவி
தீராத பழியைத் தேடிக்கொண்டான் எமன்
உன்னிடம் இருந்து உயிரை உருவி.

சுமைதாங்கியாய் நாட்டின் கனவைதாங்கி
இமை மூடியது இந்த இமயம்
சிறப்பான மாமனிதரின் இறப்பால்
இருண்டு போனது எங்கள் இதயம்.

நபிகளாரிடம் நல்வழியைக் கற்றாய்
அடிகளாரிடம் அறத்தையும் பெற்றாய் - எனவேதான்
உலகம் அழுகிறது உன்மீது பற்றாய்.

இவர் அறிவு பயன்பட்டது கல்விக்கூடங்களில்
கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும்
இவர் அறம் உந்துசக்தியாய் இருந்தது
உலகில் வாழும் சகலமானவர்களுக்கும்.

மதங்களை விடுத்து மரங்களை வளர்க்க - மனிதர்கள்
விதைகளை மண்ணில் விதைக்கிறார்கள் - காரணம்
மரங்கள் மனிதரின் வரங்கள் என்ற கருத்தை
நீங்கள் அவர்கள் மனதில் விதைத்ததால்.

தாய்நாடு தலை நிமிர உம் கரம் பட்டு
எத்தனையோ ஏவுகணைகள் விண்ணில் பாய்ந்தன
தாய் போல எம் துயர் துடித்தாயே
நீ மரணித்த செய்தி கேட்டு - அவை
அத்தனையும் எங்கள் கண்ணில் பாய்ந்தன.

பணத்திற்காக அறிவியலை
அரசியலாக்கிய பனாதிபதிகளின் உலகில்
ஜனத்திற்காக அரசியலை
அறிவியலாக்கிய ஜனாதிபதி நீங்கள்.

நிதிகளை இணைத்து நீதியை அழிக்கும்
தவறான தலைவர்கள் தவழும் புவியில்
நதிகளை இணைத்து நாடு நலம் பெற விரும்பிய
சரியான தலைமகன் மடிந்ததோ விதியில்.

இன்று எத்தனையோ தலைவர்கள்
கோடியில் பிறந்து கோடியில் புரண்டாலும் - அவர்கள்
நெஞ்சம் லஞ்சத்தையே நாடுகிறது நாட்டில்
கரை படிந்த கரங்களில் இருந்தாலும் - காந்தி
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறார் நோட்டில்
பதவியை இங்கனம் தவறாக பயன்படுத்தினால்
இவர்கள் பெயர்தான் வருமோ நல்லதொரு ஏட்டில்
அன்பையும், அறத்தையும் விடப் பணம்தான் பிரதானம் என்றால்
ஆறடி நிலம் கூட கிடைக்காது சுடுகாட்டில்.

இந்நாட்டில் ஒரு தலைவரின் மரணம் எத்தனையோ
மரணங்களை உருவாக்கும் வன்முறையில் - ஆனால்
உங்கள் ஒருவரின் மரணம் மட்டுமே மக்களிடம்
மௌனங்களை உருவாக்கியது நன்முறையில்.

அண்ணல் காந்தி, அம்பேத்கர்
அறிஞர் அண்ணா, பெரியார்
நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங்
ராமானுஜர், பாரதியார் - இவர்கள்
அனைவரும் மீண்டும் ஒருமுறை இறந்தார்கள்
நீங்கள் இறந்த போது.

கனவுகள் தூக்கத்தைத்
தொலைக்க வேண்டுமென்று சொன்னீர்களே
இன்று உங்கள் தூக்கம்
எங்கள் கனவுகளைத் தொலைத்துவிட்டதே?

வேதங்களும், நூல்களும் எத்தனையோ உண்டு - அவற்றில்
மொழிக்குச் சிறப்புத் தந்தது திருக்குறள்
பேதங்களை ஒழிக்க இதை மக்களுக்கு
மொழிந்தது உங்களின் திருககுரல்.

திருக்குரானின் பாதையில்
தினமும் வாழ்ந்த பெருமகன்
வான்வழியில் அறிவைச் செலுத்தினாலும்
தீன்வழியில் அன்பைச் செலுத்திய திருமகன்.

இன்னல்கள் பல தீண்டிய போதும்
நேர்மையை மட்டுமே தாங்கிய இரும்பு
இன்பங்களை அனைவருக்கும் தந்துவிட்டு
பேக்கரும்பில் அடங்கியது இந்த தேன் கரும்பு.

மாணவர்களின் தாயுமானவரே - நீங்கள்
தேசத்தை ஒளியுடன் வாழ வைக்க
தேகத்தைத் தியாகம் செய்த அமரஜோதி
இருந்தாலும், இறந்தாலும் என்றுமே நீங்கள்தான்
எங்கள் இதயத்தில் அமர்ந்தஜோதி

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (28-Dec-15, 3:03 pm)
பார்வை : 714

மேலே