வீடு வேண்டும்
ஓலைக் கூரை வேண்டும்
உறுதியான மண் சுவர் வேண்டும்
தரையை மெழுக வேண்டும்
தாழ்வாரத்தில் பூந்தொட்டி
தலைமேல் தொங்கவேண்டும்
ஓரத்தில் திண்ணை வேண்டும்
உள்ளே பரணும் வேண்டும்
வாசலில் கோலம் வேண்டும்
வண்ண பூக்கள் வாழவேண்டும்
தேனீக்கள் உறவாட வேண்டும்
சிட்டுகளும் சிணுங்க வேண்டும்
வண்ணத்துப் பூச்சிகளும் அங்கே
வந்து போக வேண்டும்
தென்னை மரங்கள் வேண்டும்
தீஞ்சுவை மாவும் வேண்டும்
வாழை மரங்கள் வேண்டும்
வகை வகையாய் கனிகள் வேண்டும்
சோலை செழிக்க வேண்டும்
சுகமான தென்றல் வேண்டும்
வேலிகள் அமைக்கவேண்டும் அதில்
விளையாடும் அணில்கள் வேண்டும்
விளைந்த நெல்வயல்கள்
சுற்றிலும் வேண்டும்
சில்லென்ற ஒரு ஓடையும்
சித்திரம் வரைய வேண்டும்
தாமரை குளமும் வேண்டும்
அதில் அல்லியும் மலர வேண்டும்
தவளையும் கத்த வேண்டும்
தங்க மீன்களும் நீந்த வேண்டும்
குயில்களின் கானம் வேண்டும்
குருவியின் காதல் வேண்டும்
தென்றல் தினந்தோறும்
தீண்டிச் செல்ல வேண்டும்
தனிமையின் இனிமை வேண்டும்
தலைவன் துணையாய் வேண்டும்
திகட்டாத காதல் வேண்டும்
தினமும் புதிதாய் பிறக்க வேண்டும்
இயற்கை அன்னை என்னோடு
இரண்டறக்கலக்க வேண்டும்
இணைபிரியா உறவாக நாம்
இன்பங்கள் நுகர வேண்டும்
முதுமையிலும் கைகோர்த்து
முத்தங்கள் தரவேண்டும்
சத்தங்கள் கேட்டு பூக்களின்
மொட்டுக்கள் அவிழவேண்டும்
இறப்பிலும் இணைபிரியாது வேண்டும்
இறந்த பின்னும் நாம் வாழ வேண்டும்.