ஊன்றுகோல்
...........................................................................................................................................................................................
கைப்பிடித்த கைதான்
ஊன்றுகோலானது..
மெய்வடித்த சொந்தம்
வேறு வழி போனது...
குழந்தை சாய்ந்த மடி
குறுகுறுப்பில் குழைந்த மடி..
கிழமாய்ப் போன பின்னே
கிழவனைத்தான் தாங்குதடா..
நாலடியில் தெரு கடந்து
நகர் பார்க்க வாழ்ந்தவராம்...
காலடியில் கிடப்பதென்ன...
காலத்தின் கோலமென்ன?
உடலே உடலைத்தான்
ஒவ்வொன்றாய்க் குத்திடுதே..
உருளும் புவியிவரை
ஒதுக்கி வைத்து சுற்றிடுதே..
இரண்டு இரண்டாகத்
தெரிகிறதே காட்சிகளே..
எதிலும் ஒன்றாகித்
தெரிவதிந்த திருமகளே..
இதயம் புடவை கட்டி
இருமருங்கும் அணைக்கிறதே..
ஈழை இருமலெல்லாம்
இவள் விரலில் தணிகிறதே..!
எலும்போ எலும்பல்ல
இற்றுப் போன குச்சியடி..!
பழைய நினைவு மட்டும்
சீரணித்த மிச்சமடி..!
இரண்டாம் சிசுப் பருவம்
இருவருக்கும் வாய்த்தடி..
என்னை முந்திப் போகாதே...
இடுகாடு தூரமடி......!