ஓடியே போய்விட்டார்

ஓடியே போய்விட்டார்.

================================================ருத்ரா.இ .பரமசிவன்.


கடவுளே

உன் முகச்சித்திரம் வேண்டுமே

எனக் கேட்டேன்.

அந்த கிருஷ்ணன் காட்டியிருப்பானே

விஸ்வரூபம்

என்றார்.

சமஸ்கிருதம் புரியவில்லை

என்றேன்.

"கோளில் பொறியில் குணமிலவே ....."

புரிகிறது...புரிகிறது.

இன் தமிழ் புரிகிறது...

"எண்குணத்தான்.." தான் புரியவில்லை.

சரி போகட்டும் .

அந்த தேவகுமாரன்

மலைச்சொற்பொழிவில்

விளக்கியிருப்பானே

என்றார்.

அவர் பிய்த்துக்கொடுத்த ஜீவ அப்பம்

இந்த கடைக்கோ டியில் உள்ள

எத்தியோப்பிய எலும்புக்குழந்தைக்கு

ஊட்டுவதற்குள்

எந்திரத்துப்பாக்கிகள் வந்து

இந்த உயிர்கள் எனும்

கார்ட்டுன் சித்திரங்களைக்கூட

கூழாக்கிப் போயினவே.

உன்னிடம் விளக்கம் கேட்பதற்குள்

நீ

நெஞ்சில் ஆணி அறையப்பட்டு

தலையில் முட்கிரீடம் நசுக்க

முடிந்து போய்

மீண்டும் முளைத்து

முளைத்த சுவடு தெரியாமால்

போதுமடா சாமி என்று

ஓடி விட்டாயே.

அதோ

அந்த தீர்த்தங்கரிடம் போய்க் கேள்.

அதற்கு அவர்

"இந்த உடம்பு உயிர் என்ற ஆடைகளே தான் சுமை.

நிர்வாணம் கொள்" என்றார்.

அந்த மூளி நீலவானத்தை

கண் மூடி வைத்துக்கொண்டு

என்ன செய்வது?

"புத்தனைப்போய் பா ர்த்தாயா?"

இலங்கையின் அரசமர நிழலில்

அவன் கண்ணெதிரேயே

லட்சம் தமிழ்ப்பிணங்களை தின்னும்

வெறியைபார்த்த பின்

அவரே அமரர் ஆனார்.

அந்த அரசமரம் இப்போது

வெறும் துப்பாக்கிகளின் எலும்புக்கூடு.

மானிட அன்பின் அந்த

நெடிய வானத்தின்

முகடுகளிலிருந்து

ஒலிகளாகவும் எதிரொலிகளாகவும்

தூவப்படும் அந்த

இறைநேசத்தை

புரிந்து கொள்ளேன்.

அதற்கு மண்டியிட்டு நிமிர்வதற்குள்

இந்த தோட்டாக்கள் தின்றது போக

எத்தனை பேர் மிஞ்சுவோம்

என்று தெரியவில்லையே?

நான்

என்ன செய்ய

அந்த "பிக்காசோ"வைக்கேள்

ஏதாவது கிறுக்கித்தருவார்.

நிறுத்துங்கள்.

நீங்கள் செய்ததைத்தானே

அவரும் செய்கிறார்.

நாங்களாகவே குழம்பிக்கொண்டு

நாங்களாகவே தான்

புரிந்து கொள்ள வேண்டுமாமே !

ரகசியத்தைக்கண்டு பிடித்து விட்டாயல்லவா

ஆளை விடு.

கடவுள்

ஓடியே போய்விட்டார்.

இந்த வர்ணங்களையும் தூரிகையையும்

வீசி எறிந்து விட்டு.

====================================================

எழுதியவர் : ருத்ரா (8-Jan-16, 12:36 pm)
பார்வை : 56

மேலே