காட்சிப்பிழைகள் 34 அ வேளாங்கண்ணி

காட்சிப்பிழைகள் - 34

1. கயத்தாறென்றதும் கட்டபொம்மனுக்கு முன்... உன் பார்வை ஞாபகம் எனைத்தாக்கும்..!
...பார்வையாலேயே எப்படி தூக்கிலிடுகிறாய்... தூக்கு மரத்திற்கருகில் காத்திருந்தபடி நான்...!

2. உனைப் பார்க்காத பொழுது... என் கண்களுக்குத் தேவையில்லை பார்வை...!
...நீயென் கனவுக்குள் வந்தவுடன்... குளிரெடுத்து காய்ச்சலுறத் தேடுகிறேன் விழிப்போர்வை...!

3. காடுவிட்டு நாடுவந்து சுற்றியலையும்... மதம்பிடித்த பொல்லாக் களிறாய் நான்...!
...யானைப்பாகனின் மகளாகி நீயெனையடக்க... அங்குசம்விடு ஒற்றைப்பார்வை நாண் எய்...!

4. நீந்தத் தெரியா என்னை... காதல் குளத்தில் ஏன் தள்ளிவிட்டாய்...?
...தத்தி தத்தி நானெழும்முன்னே... கானல் குளமாக்கி ஏன் கொள்ளிவைத்தாய்...?

5. தோற்றக் காதலை சரித்திரமாக்கி... சமுதாயம் உனக்களித்த பாடம் தவறு...!
...வென்ற காதலை வரலாறாக்கி... சமுதாயம் திருத்த எனக்கு உதவு...!

6. என்னிதய காயத்திற்கு மருந்துதேடி... உன்னிதய மருத்தவமனைக்கு தவறாய் வந்துவிட்டேன்...!
...ரணம்பெரிதாக்கி வலிமிக கொடுக்கும்... அரைகுறை மருத்துவருன்னால் மனம் வெந்துவிட்டேன்...!

7. விட்டதைப் பிடிக்கிறேன் பாரென.. திரும்ப விளையாடவந்த வீரனாய் நான்...!
...நீவிட்ட மறுதலிப்பின் அறையில்... இன்று காகமாய் கரைகிறேன் ஏன்…?

8. உன்னிதழ்சுற்றி பறக்கும் தேனீக்களுக்கு... விடமூட்டி எனை நோக்கி அனுப்புவதேன்...?
...கடித்தால் கிடைக்கும் முடிவுதெரிந்தும்... சாளரம் திறந்தே நான் இருப்பதுமேன்...?

9. இலக்கணம் என்றோ படித்தது... ஞாபகம் வந்தாடுது விணையாலணையும் பெயர்... !
...ஆசைவைத்தாய் காதலித்தாய் மறுதலித்தாய்... இன்றுன் வினையால் அடைகிறேன் பெருந்துயர்...!

10. உனக்கும் எனக்கும் நிரந்தரமானதாய்... காதல் மட்டும் என்றும் நிலைக்கட்டுமே...!
...பிரிவைக் கொடுக்கும் காதல்தோல்வி... தனியாய் நொந்து நிராயுதபாணியாய் நிற்கட்டுமே...!

11. உனைபற்றி(ப்) நானெழுதும் கவிதைகள்... சந்திபிழை(ப்) முந்தி வருவதால் பரிதவிக்கறதோ?
...எழுதி முடிக்கும் வரையிலாவது... என் நினைவிற்குள் வாராமல் இருந்திடாயோ...!

12. அவரைக்காய் பறிக்குமுன் வெண்டைவிரல்களில்... எப்பொழுதோ நான் ஆகிவிட்டேன் பகடைக்காயாய்...!
...உருட்டு உருட்டென உருட்டியாடிவிட்டு... "நீ தோத்துட்டே" என்பதேன் பாகற்காயாய் ..!

13. சின்னச்சின்ன கவிதைப்பானைகள் செய்து... பாலும் ரொட்டித்துண்டும் உண்டு கிடந்தேன்...!
...காதலித்தென் மூளையைக் களிமண்ணாக்கி... கஜல்பானை செய்யவைத்த மாயக்காரி நீ...!

14. ஏதும் தெரியா வேளாவிற்குள்... காதலைத் தீயென எரிய வைத்தாய்...!
...நீயே உலகென இருந்தபொழுது... நீயும் பெண்ணென அறிய‌ வைத்தாய்...!

15. உன்னில் காதல் உள்ளதென... மேய்ந்து கொண்டிருந்தேன் ஓர் ஆட்டுக்குட்டியாய்...!
...அப்புல்வெளி நீவரைந்த ஓவியமென... அறியும்முன் நான் மரித்து விட்டிருந்தேன்...!!!

(இத்தொடரில் எழுத வாய்ப்பளித்த தோழர் ஜின்னா அவர்களுக்கு மிக நன்றி....)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Jan-16, 9:16 am)
பார்வை : 572

மேலே