கனம் தரும் கணம் நீ
எள்ளென உள்நுழைந்த காதலி
எல்லாமென நீநிற்க காரணம் என்சொல்....!
தெளிவாய் தான்மொழிகிறாய் வரிகளில்..!
தெளியவைத்து என்தேகம் கொய்வதேன் விழிகளில்..!
ஒளிவடிவா ஒலிவடிவா காதல்
வரிவடிவிலும் விழிவடிவிலும் வீழ்த்துவதன் ரகசியம் சொல்..!
களையென விளையுதென் காடு..
கலையென மாற்றி நீவந்து விளையாடு...
நாளமெலாம் நீ இசைக்கும் கானம்
நாடி நரம்பெலாம் வழியுதென் நாணம்..!
துளிஅமிர்தா.. துளிநஞ்சா.. கண் மை
துளிர்விடுமுன் துளைப்பதுன் மென்மை..!
அளகொன்றும் இல்லை உன்னை அளவிட
அழகொளிர்வது நீ என் உயிரில் துளை இட..!
களங்கமிலா தென்றலென வருகிறாய்
கன்னம் வருடி..கண நொடியில் விழைகிறாய்..!

