நீ வசந்தமாகவே

உள்ளத்திற்கு ஏன் இந்த நிலைமை?
உன் உணர்வுகளில் எதற்கிந்த வெறுமை?
ஊசலாடும் உயிரின் அருமை
உணர்ந்துவிட்டால் பெறுவாய்
நீயும் பலகோடி அர்த்தங்கள்
உன் பிறப்புக்கு இங்கே..!
அனுபவங்கள் உ(ன்)னை
முதிர வைத்துவிடும் - பிறர்
அலட்சியங்கள் உ(ன்)னை
அசைத்து எழுப்பிவிடும்,
முயற்சிகள் உ(ன்)னை - பலர் முன்
உயர்த்தி நிறுத்திவிடும்,
வாழ்க்கை உனக்கு இங்கு - புது
பாடங்கள் கற்றுத் தரும்!
மௌனத்தில் நிறைந்த
வார்த்தைகளை - புதைத்து விடு
நெஞ்சத்தில் விதையாகவே...!
உதிர நீர் கொண்டு அதன் வேர்கள்
நிலம் தோண்டி ஊன்றி படரட்டும்,
அதன் வலிமை கொண்டு - விழுதுகள்
அவ்வானையும் விஞ்சட்டும்,
அங்கு பூக்க மொட்டவிழும்
வண்ண மலர்கள் - வாசம் பரப்பி
பறைசாற்றட்டும் - உன்
வசிப்பை பூமியில் வசந்தமாகவே..!