சினமலி அறுபகை

சிவகவி (1943) என்ற திரைப்படத்திற்காக பாபனாசம் சிவன் எழுதி, ஜி.ராமனாதனால் ’பந்துவராளி’ ராகத்தில் இசை அமைக்கப்பட்டு, M.K.தியாகராஜ பாகவதர் நடித்துப் பாடிய ஒரு அருமையான பாடல் ’அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்’ என்பதாகும்.

இப்பாடலில்,

‘பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்

இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா),

என்று மனம் உருகிப் பாடுவார்.

அறுபகைவர் யார் என வலைத்தளத்தில் தேடியபோது கிடைத்த திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலையும், அதன் பொருளையும் இங்கு தருகிறேன்.

திருச்சிவபுரம் திருத்தலம் – ஒரு அறிமுகம்

கும்பகோணம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் திருச்சிவபுரம் என்ற சிவத்தலம் உள்ளது. கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையில் 'பட்டாமணிஐயர் ஸ்டாப்'பிற்கு பக்கத்தில் பிரியும் சிவபுரி கிளைப் பாதையில் - மண் பாதை - 2 கி. மீ. சென்றால் சிவபுரத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து எல்லா பயண வசதிகளும் உண்டு. இறைவன் பெயர் சிவபுரநாதர், இறைவியின் பெயர் சிங்காரவல்லி. தலமரம் செண்பக மரம் ஆகும்.

முதல் திருமுறையில் திருஞானசம்பந்த சுவாமிகள் திருச்சிவபுரம் சிவபெருமானைப் பாடிய தேவாரப் பதிகங்கள் மூன்று (பாடல்கள் 33). நட்டபாடை பண்ணில் பாடிய 11 பாடல்களில் ஒன்று ‘சினமலி யறுபகை மிகுபொறி’ என்று தொடங்கும் பாடல்.

பாடல் சந்தமுடன் தரப்பட்டுள்ளது

சினமலி யறுபகை மிகுபொறி
....சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
....தருபொரு ணியதமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை
.....தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரநினை பவர்
....கலை மகள்தர நிகழ்வரே. 221

சொற்கள் புரியும்படி பிரித்துத் தரப்பட்டுள்ளன.

சினம் மலி அறுபகை மிகு பொறி
…..சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை
…..எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை
…..தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர்
…..கலைமகள் தர நிகழ்வரே

பதவுரை:

சினமலி அறுபகை - கோபம் முதலாகிய காமம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு உட்பகைகளை

மிகு பொறி சிதை தரு வகை – அதிகரிக்கச் செய்யும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் ஆதிக்கத்தை சிதைத்து அடக்கும் வகையில்

வளி நிறுவிய மனன் உணர்வொடு - காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமம் என்ற தியானம் புரிந்தும்

மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் - தாமரை மலரின்மேல் எழுந்தருளியிருக்கும் பேரொளிப் பிழம்பாகிய சிவபெருமானை எப்பொழுதும் உள்ளத்தில் உணர்ந்தும் தொழும் சிவனடியார்களுக்கு

தனது எழில் உருவு கொடு - கண்டக்கறையும் கங்கையும் இல்லாத தன்னுடைய அழகிய வடிவத்தைக் காண்பித்து

அடை தகு பரன் உறைவது – பேரருளை அடையும் பேற்றையும் தந்தருளும் சிவபெருமான் உறைந்தருளும்

நகர் மதில் கனம் மருவிய - மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த நகராகிய

சிவபுரம் நினைபவர் – சிவபுரத்தை மனதில் நினைப்பவர்கள்

கலைமகள் தர நிகழ்வரே - கலைமகளின் அருளைப் பெற்று இன்புற வாழ்வார்கள்.

கருத்துரை:

கோபம் முதலாகிய காமம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற ஆறு உட்பகைகளை அதிகரிக்கச் செய்யும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் ஆதிக்கத்தை சிதைத்து அடக்கும் வகையில், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமம் என்ற தியானம் புரிந்தும், தாமரை மலரின்மேல் எழுந்தருளி இருக்கும் பேரொளிப் பிழம்பாகிய சிவபெருமானை எப்பொழுதும் உள்ளத்தில் உணர்ந்தும் தொழும் சிவனடியார்களுக்கு கண்டக்கறையும் கங்கையும் இல்லாத தன்னுடைய அழகிய வடிவத்தைக் காண்பித்து பேரருளை அடையும் பேற்றையும் தந்தருளும் சிவபெருமான் உறைந்தருளும் மேகம் தவழும் மதில்கள் சூழ்ந்த நகர் திருச்சிவபுரம்.

இச்சிவபுரத்தை மனதில் நினைப்பவர்கள் கலைமகளின் அருளைப் பெற்று இன்புற வாழ்வார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-16, 10:47 pm)
பார்வை : 198

சிறந்த கட்டுரைகள்

மேலே