இனியாகிலுமே நினையாயோ - கல்யாணி

மாயூரம் மாஜி முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றிய சர்வசமய சமரசக் கீர்த்தனைகள், புத்தகம் 1941 ல் பதிப்பிக்கப்பட்டது, புத்தகத்தின் விலை அணா 2. என் அப்பாவால், அவர்தம் 18 வயதில் 22.2.42 ல் வாங்கப்பட்ட இப்புத்தகம் எனக்கு சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது.

இவர் 'சர்வசமய சமரச ஸ்தோத்திரம்' என்று ஆரம்பத்தில் ஒரு பாடலும், 208 கீர்த்தனைகளும், இறுதியில் 'மங்களம்' ஒரு பாடலும் மொத்தம் 210 பாடல்களை இயற்றியிருக்கிறார். அனைத்துப் பாடல்களும் நிரம்ப சொற்ஜாலங்கள் நிறைந்தது. சில பாடல்கள் அதிகமான வரிகளுடனும், பல பாடல்கள் ஒரு பக்கம் வரையிலும் அமைந்துள்ளன. ஸ்தோத்திரப் பாடல் நீங்கலாக, அனைத்துமே கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டவை.

இதிலிருந்து ஒரு பாடல். வயதான பின்னாலாவது இறைவனை வணங்கி நற்பேறு பெறுவோம் என்று, வயோதிகத்தை கவிஞர் நகைச்சுவையாக விவரிக்கிறார்.

ராகம்:கல்யாணி

ராகம் என்ற இடத்தைச் சுற்றி கைகளினால் வேகவாகினி, காம்போதி, மனோஹரி, சிவாநந்தி, ராகவினோதினி, பைரவி, ஆபேரி என்று பல ராகங்களின் பெயர்களை என் அப்பா கையால் எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை இந்த கீர்த்தனையை பல ராகங்களில் பாடலாம் போலத் தெரிகிறது.

பல்லவி:

இனியாகிலுமே – ஐயனைநீ – நினையாயோ தினமே
இகபரசித்தி பெறவே.

அநுபல்லவி:

தனியிளம்பருவமுந் தாண்டிப் போனோமே
பனைபோல் வளர்ந்து கிழப் பருவமானோமே (இனி)

சரணங்கள்:

ஆசைக்கொரு கருப்பு............................மயிரேனும் இலையே
ஐயையோ கொக்குப்போல்..................நரைத்தது தலையே
காசுக்குதவாக்கிழ....................................மென்பது நிலையே
கன்னியர்க்கும் இனிநாம்......................கசக்கும் வேப்பிலையே (இனி)

கண்கள் இரண்டும்...................................மூக்குக்கண்ணாடி தேடும்
காலூசலாடும் ஓர்....................................கழியைக் கைநாடும்
தண்கொள்ளும் வேரற்றுத்....................தந்தங்கள் ஆடும்
தடுத்தாலும் நில்லாமல்.........................யௌவனம் ஓடும் (இனி)

பசிவந்தபின்னெல்லை.............................விதைப்பது மதியோ
படுந்தாகம் வந்தபின்................................வெட்டுதல் நதியோ
விசயஞ்செய்திடப்போகுங்.........................காலமேததியோ
வீணேயுனக்குக் கெட்டு்ப்........................போகச்சம்மதியோ (இனி)

காலந்தனக்கென்ன...........................செய்தோம் அபகாரம்
கனத்தை ஆயுசை அநு...................தினஞ்செய்யுஞ்சோரம்
மேலும்மேலும் உடலில்.................விளைக்கும் விகாரம்
வேதநாயகன் சொல்லே..................வேதாந்தசாரம் (இனி)

தெரிந்த பாடகர்கள் இருந்தால் பாடச் சொல்லிக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-16, 4:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 136

மேலே