கொம்புத்தேன்
காலை வேலைகளை எல்லாம் முடித்து, பாத்திரங்களைக் கழுவி அதன் அதன் இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தபோது அது மணி பத்தைத் தாண்டிக்கொண்டு இருந்தது. என்றுமில்லாமல் அன்று ஏனோ மல்லிகா அசதியாக இருப்பது போல் உணர்ந்தாள். வேலை செய்த களைப்பாக இருக்கும் .சற்று நேரம் தூங்கி எழுந்தால், உடலுக்குப் பழைய உற்சாகம் வந்துவிடப்போகிறது என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவளாக, வாசலை சாத்திவிட்டு வரலாம் என்று வாசல் பக்கம் வந்தாள். வாசலில் ஏதோ நிழலாட்டம் தெரியவே ,யாரென பார்ப்பதற்காக வெளியே வந்தாள். வந்தவள் கண்களில் அவளது சம்பந்தி கனகம் நிற்பது தெரியவே,
‘வாங்க மதனி வாங்க ! ஏது சொல்லாம கொள்ளாம திடுதிப்பென்று வந்திருக்கீங்க...’என்ற மல்லிகாவின் குரலில் ஒருவித பதட்டமும், என்னவோ ? ஏதோ ? என்ற பய உணர்வும் ஒட்டிக்கொண்டு இருந்தது என்பதை மறுக்க முடியாது.
‘ஏம்மா மல்லிகா ? என் சம்பந்தி வீட்டுக்கு வர்றதுக்கு, முன் கூட்டியே தந்தி கொடுத்துட்டுதான் வரணுமா? என்ன ? சொல்லாமல் வந்தால் சேர்த்துக்க மாட்டியளோ ? என்ற கனகாவின் வார்த்தைகளில் தொக்கி நின்ற குத்தல் மல்லிகாவை சிறிது சஞ்சலப்பட வைத்தது. தன்னைத் தானே சமாளித்துக் கொண்ட மல்லிகா,
‘என்ன மதனி இப்படி சொல்லிட்டீங்க.. இது உங்க தம்பி வீடு.. நீங்க எப்போ வேணுமின்னாலும் வரலாம், எப்போ வேணுமின்னாலும் போகலாம்.. உங்களுக்கில்லாத உரிமையா மதனி? ‘ என்ற மல்லிகாவின் பேச்சில் கனகா சற்று கிரங்கித்தான் போனாள் என்பது தான் உண்மை.
‘இது நியாயமான பேச்சு. எங்கே என் மருமகள்கள் எவளையும் காணோம்..எங்கே மல்லிகா போயிட்டாளுவ...’ என்று அக்கறையோடு விசாரிப்பதைக் கண்ட மல்லிகா, மதனியின் போக்கு இன்று சற்று வழக்கத்துக்கு மாறா இருப்பதை உணர்ந்தாள் .ஆனாலும் அப்படி தான் உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை.ஆனால் கனகா தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
‘ஆமா மல்லிகா என் தம்பி எங்கே போயிட்டான் ?. வீட்டில வேலைகளை அப்படி அப்படியே போட்டுட்டு வந்துட்டேன் ‘
‘உங்களை யார் மதனி அப்படி அப்படியே போட்டுட்டு வாங்கன்னு இங்கே அழைச்சாங்க ? அப்படி என்ன தலை போற காரியமா வந்தீங்கன்னு ‘ கேட்கத்தான் நினைத்தாள் மல்லிகா. ஆனால் நாகரிகம் கருதி வாயா மூடிக்கொண்டாள்.
‘சரி ! வந்த காலோட நிற்கிறிங்க ... முதல்லா உட்காருங்க....’ என்று நாற்காலியை எடுத்துப் போட்டாள் மல்லிகா. வசதியாக அமர்ந்து கொண்ட கனகா,
‘இப்போ சொல்லு மல்லிகா ......’ என்றாள்.
‘இருங்க மதனி... காப்பித் தண்ணி போட்டுட்டு வந்துடுறேன். பசியோட வந்திருப்பீங்க... குடிச்சுக்கிட்டே பேசாமல் ‘ என்ற மல்லிகா, கனகாவின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் , விருட்டென சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள். மெதுவாக அடுப்பைப் பற்ற வைத்து,பாலைச் சூடு பண்ணி, காபி கலந்து, இரண்டு டம்ளரில் ஊற்றி தனக்கொன்றும், கனகத்துக்கு ஒன்றுமாக எடுத்து வந்தாள் மல்லிகா.
மனம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. என்ன வில்லங்கம் பண்ணப் போறாங்களோ , அவரு வேற வீட்டில் இல்லையே என்று மனசு அலைபாய்ந்து கொண்டு இருந்தது.
‘இந்தாங்க மதனி... சூடா காப்பி சாப்பிடுங்க....’என்றாள்
‘அது என்னவோ மல்லிகா ..உன் வீட்டு காபியில மட்டும் ஒரு மணம், ஒரு சுவைன்னு தனியா இருக்குது.... அப்படியே மூக்கைத் துளைத்து குடிக்கணுமிங்கிற ஆசையைத் தூண்டுது....’
மல்லிகாவிற்குத் தெரியும் . இது எப்போதும் வழக்கமாக காபி குடிக்கும் முனபு சொல்லும் வார்த்தைகள்தான் என்பது.மல்லிகாவும் ஒரு நாற்காலியை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து ,காபியை குடித்துக்கொண்டே...
‘சொல்லுங்க மதனி...ஊருல அண்ணன் நலமா ?மருமகப் பிள்ளை எப்படி இருக்காரு..அண்ணனுக்குத் துணையா இருக்காரா ...இல்லை.....’ ‘ஊதாரித் தனமா சுற்றிக்கிட்டு இருக்காரான்னு ‘ தான் கேட்க நினைத்தாள் .ஆனால் மனசுக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள்.
‘அண்ணன் நல்லாத்தான் இருக்காரு..ஆனா உன் மருமகன் தொல்லைதான் தாங்கல...’ என்றவள், காபியை ஒரு வாய் அருந்திக் கொண்டாள். பதறிப் போன மல்லிகா,
‘என்ன அண்ணி மருமகப்பிள்ளை ஏதாவது வம்பு கிம்பு பண்ணுறாரா..? ‘ என்றாள்.
‘இங்க பாரு மல்லிகா... உன் மருமகப்பிள்ளைக்கு இருபத்து ஒன்று வயசாயிடுது.. அதோட கல்யாண ஆசையும் வந்திடுது...அதான் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லாமச் சொல்லி தொந்தரவு பண்ணுறான். உங்க அண்ணன் இதப் பற்றியெல்லாம் கவலைப் படாம.. தானுண்டு, தன் உழைப்புண்டுண்ணு இருக்கிறாரு.. வயசுக்கு வந்த பையன் இருக்கிறானே என்ற கவலை ,கொஞ்சம் கூட கிடையாது. அதான் நான் கிடந்து அல்லோலப் படுறேன் ‘ என்றவளின் கண்களில் இலேசான கலக்கம் ஒன்று தெரிந்தது.
‘இதிலென்ன இருக்கு மதனி... அவனுக்கு ஏற்ற மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து சட்டுப்புட்டுன்னு கல்யாணத்தை முடிச்சுட வேண்டியதுதானே.....’
‘முடிச்சிடலாம் மல்லிகா..... ஆனா சிக்கலே அங்கே தானே இருக்கு...’
‘என்ன மதனி சிக்கல்... ஏதாவது லவ் கிவ்ன்னு மாட்டிக்கிட்டாரா ? ‘
‘அப்படித்தான்னு வைச்சுக்கேயேன்.......’
‘பின்னே என்ன மதனி சிக்கல். பொண்ணோட அம்மா,அப்பாவைப் பார்த்துப் பேசிட்டா பிரச்சனை ஈசியா முடிஞ்சுடப்போகுது...இத உட்டுட்டு ஏன் மதனி கிடந்து குழம்பிக்கிட்டு வர்றீங்க.....’
‘சரியாத்தான் சொல்றே மல்லிகா. அதான் இங்கே வந்திருக்கேன் ‘ என்ற கனகாவின் வார்த்தைகளைக் கேட்ட, மல்லிகாவின் மனதில் இனம் தெரியாத ஒரு இறுக்கத்தை உணர்ந்தாள்.
‘புரியலை மதனி... உங்க தம்பியோட உதவி ஏதாவது தேவைப்படுதா ?’ என்று கேட்ட மல்லிகாவின் குரலில் ஒரு அப்பாவித்தனம் தெரிந்தது.
‘அடி போடி பைத்தியக்காரி... அவன் விரும்புறதே உன் பொண்ணு சாந்தியைத்தானே.... கட்டினா அவளைத்தான் கட்டுவேன்னு ஒத்தைக் காலில நிற்கிறான்...’ என்றாள் கனகா.
மல்லிகாவுக்கு இப்போது புரிந்தது . ஏன் மதனி காலையிலேயே இங்கே வந்திருக்காங்கன்னு... வயிற்றிலே புளியை கரைத்தது. இக்கட்டான சூழ்நிலையில் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்தாள் .என்ன பேசுவது என்பது தெரியாமல் தவித்துப் போனாள்.
‘இல்கே பாரு மல்லிகா....சாந்திக்கு படிப்பும் முடிஞ்சுடுது.... யாரோ ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கத்தானே போறே.....அது என் பையனா இருந்துட்டு போகட்டுமே.. ஒண்ணுக்குள்ள ஒண்ணு பிள்ளைங்க சந்தோசமா இருக்கட்டுமே... குடும்பச் சொத்தும் வெளியே எங்கேயும் போகாமல் பத்திரமா இருக்குமில்ல... வெத்திலை ,பாக்கு,பழம் ,பூவெல்லாம் கொண்டு வந்திருக்கேன்.... நீ சரின்னு சொன்னா இப்போவே தட்டை மாத்திக்கலாம்...எம் மருமக வந்துட்டானா அப்படியே தலையிலே பூவை வைச்சு உறுதியும் செஞ்சுடலாம்.... என்ன மல்லிகா சொல்றே.....’ என்று தான் வந்த வேலைக்கு அச்சாரம் போட்டாள் கனகா. மல்லிகாவோ கிறங்கிப் போனாள்.
‘என்ன மதனி இது?...திடுதிப்பென்று என்னென்னவோ சொல்றிங்க...எனக்குத் தலையே சுத்துறது... உங்க தம்பி வேறே வீட்டிலே இல்லை...பொம்மளைங்க நாமே பேசிக்கிறது சரிப்பட்டு வருமா ? ‘ என்று தடுமாறினாள் மல்லிகா.
‘இதுல என்ன மல்லிகா இருக்குது.... நாம என்ன தூரத்து மனுசாளா.... நாம முடிவு பண்ணிட்டு ,ஆம்பிளைங்க கிட்டே சொன்னா சரின்னு தலையை ஆட்டிட்டுப் போகப்போறாங்க....’’
‘பிள்ளைங்க விசயத்திலே நானே ஒரு முடிவு எடுக்கிறதை உங்க தம்பி விரும்ப மாட்டார் மதனி....’ என்று தட்டிக்கழிக்கப் பார்த்தாள்.
‘என் தம்பியைப் பத்தி எனக்குத் தெரியாதா? நான் சொன்னா தட்டவே மாட்டான்... அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்...இப்போ நீ என்ன சொல்றே..அதைச் சொல்லு ?’ என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதுபோல் பேசினாள் கனகா. மல்லிகா வெலவெலத்துப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.என்ன பேசுவது என்பது புரியாமல் மல்லிகா கையை பிசைந்து கொண்டிருந்தாள். இப்படி எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு விட்டோமே என்று தவித்துக்கொண்டிருந்த போதுதான்., வெளியே சென்றிருந்த சாந்தி வீட்டிற்குள் நுழைந்தாள். மருமகளைக் கட்ட மல்லிகாவிற்கு, சந்தோசம் இன்னும் அதிகமாயிற்று.
‘வாடியம்மா சாந்தி.. என் மருமகளே.. எப்பிடி அம்மா இருக்கே... படிப்பெல்லாம் நல்ல படியா முடிஞ்சுடுதில்ல அதான் உன் கல்யாணத்தைப் பற்றி பேசிக்கிட்டு இருந்தோம். அதுக்குள்ளே நீயே வந்துட்டே... எல்லாம் நல்லதுக்குத் தாண்டியம்மா...’ என்று ஆசையோடும், ஆர்வத்தோடும் பேசினாள்.
என்ன நடக்கிறது என்பது புரியாமல் பேந்தப் பேந்த விழித்த சாந்தியின் கண்கள், அம்மாவை நோக்கித் திரும்ப. ‘ என்னம்மா இதெல்லாம்’ என்று கேட்பது போல் இருந்தது.அம்மாவின் கண்களில் தெரிந்த கலக்கம், இனம் தெரியாத அச்சம், அம்மா ஏதோ ஒரு இக்கட்டில் மாட்டிக்கிட்டு விழிப்பதாக உணர்ந்தாள். கண்களை அத்தையிடம் திருப்பிய சாந்தி ‘ என்ன அத்தை சொன்னீங்க ? என் கல்யாணத்தைப் பற்றி பேசிக்கிட்டு இருந்தோமுன்னா. ‘ என்றாள்.
‘ஆமாண்டி ராசாத்தி...உன்னை அத்தான் செல்வத்துக்கு கல்யாணம் செய்து வைச்சுடலாமுன்னு தான் ‘ என்ற மல்லிகாவின் குரலில் நம்பிக்கையும்,மகிழ்ச்சியும் பொங்கிக் கிடந்தன.
‘என்ன அத்தை சொல்றீங்க... உங்க புள்ளைய நான் கட்டிக்கிடணுமா? ‘
‘ஆமாண்டி அம்மா... உன் மேல அவன் ரொம்ப கிறுக்கா இருக்காம்மா....’
‘சொல்றேன்னூ கோபிச்சுக்காதிங்க.... கிறுக்கு புடிச்சா ஆஸ்பத்திரயில சேர்க்கணுமே தவிற, கல்யாணமெல்லாம் பண்ணி வைக்கக் கூடாது அத்தை...’என்ற சாந்தியின் குரலில் தொனித்த நக்கலை உணர்ந்தாலும் அதை காட்டிக்கொள்ள வில்லை மல்லிகா.
‘ஆதாம்மா ராசாத்தி... அந்த கிறுக்கு உன்னாலதான் ஏற்பட்டது.. அது உன்னாலதான் குணமும் ஆகணும்..’ என்று சிரித்தாள் மல்லிகா.
‘ஏ அத்த கொஞ்சமாவது யோசித்து பேசுறீங்களா...உங்க பையனோட படிப்பு என்ன? என்னோட படிப்பு என்ன? உங்க பையன் ஐந்தாம் வகுப்பைத் தாண்டல... நான் கல்லாரிக்குப் போய் படிப்பு முடிச்சு, இப்போ வேலைக்குப் போகப்போறேன்... நான் வேலைக்குப் போயிட்டா... உங்க பையனால் என்னோட நகரத்துல வந்து இருக்க முடியுமா? உங்க பையனுக்கு விவசாயந்தான் கொஞ்சம் தெரியும்... அப்படியே நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ,கிராமத்துல வந்து, சமைத்துப் போட்டுக்கிட்டு, அவரோட சேர்ந்து விவசாயம் பார்க்க முடியுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்க அத்தை... எனக்கும் அவருக்கும் எந்த விதத்திலேயும் ஒத்துப் போகாது... உங்க எண்ணம் சினிமாவில் ஒத்துப் போற மாதிரி இருக்கலாம்.. ஆனா நடைமுறைக்கு நிச்சியம் ஒத்து வராது...தயவுசெய்து அவருக்கு ஒத்து வர்ற மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க.. உங்க பையனோட வாழ்க்கை நல்லா இருக்கும்...’ என்ற சாந்தியின் வார்த்தைகளைக் கேட்ட கனகா மலைத்துப் போனாள். மல்லிகாவிற்கோ தன் காதுகளை தன்னால் நம்ப முடியவிலை. தன் பொண்ணா இப்படி பேசுகிறாள்.அவள் பேசவில்லை. அவள் படித்த படிப்பு அவளை அப்படி பேச வைக்கிறது என்பதை உணர்ந்த போது , தான் சிரமப்பட்டு பொண்ணை படிக்க வைத்தனின் பலனை உணர்ந்தாள்.
‘என்னம்மா இப்படி பேசுறே.... அவன் என்னடான்னா உன்னைத்தான் கட்டிக்கணுமின்னு ஒத்தக்கால்ல நிற்கிறான்..’
‘அத்தை...முடவன் தேனுக்கு ஆசப்படலாம். ஆனா கொம்புத்தேனுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு சொல்லி ..புரிய வைங்க...’ என்ற சாந்தியின் குரலில் நிதானம் தெரிந்தது.
‘ ஏம்மா... நம்ம கிட்ட நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து தின்கிற மாதிரி சொத்து இருக்கு.. நீ எதுக்கும்மா ஊருஊரா வேலைக்குப் போய் சிரமப்படணும்....’
‘இல்லை அத்தை. எனக்கு அது புடிக்கலை..என் அம்மா அப்பாவே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும், நான் ஒத்துக்க மாட்டேன். ஏன்னா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணிக்கணுமிங்கிற ஆசையை விட, நிறைய படிக்கணுமிங்கிற ஆசை தான் நிறைய இருக்கு...தயவு செய்து உங்க பையனோட வாழ்க்கையை நரகமாக்கிடதிங்க....’என்ற சாந்தியின் வார்த்தைகளைக் கேட்ட, கனகாவால் அதற்குமேல் பேசமுடியவில்லை. விக்கித்துப் போன கனகா, மல்லிகாவின் முகத்தைப் பார்த்தாள். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போல் இருந்தது அது. எதுவுமே பேசத தோன்றாமல், மெல்ல எழுந்து கனகா, வாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
*****************************