இருள் நிலை

கலைந்த மேகங்கள் இணைந்து கொண்டதும்,
தொடர்ந்து பெய்தது பெருமழை பூமியில் !
வெளுத்த பஞ்சாய் வெளிறிய மேகமல்ல,
கருமை சூழ்ந்து கரைபுரண்டு சேர்ந்தவை !

அதற்குத்தப்பியே அகத்துள் புகுந்ததும்,
தலையை துவட்டிட துணிக்குள் அடைந்தனன் !
அங்கே துணைக்கு வெளிச்சம் எதிரியாய்,
மிதமாய் தெளிந்திட இருட்டே துணைக்கென !

ஈரம் உலர்ந்திட மின்சாரம் அணைந்திட,
மெழுகின் துணை அங்கு மிகவும் நெருக்கமாய் !
அதனின் அடிநாதம் சுழலும் கருப்பினாய்,
அங்கே படர்ந்தது இருள்தானே இணக்கமாய் !

வெளியே கவனிக்க சாளரம் திறந்ததும்,
தூரத்தில் மங்கலாய் ஒளிந்தனன் ஆதவன் !
வெளிச்சம் மங்கிப்போய் வழியே தெளிவாகி,
இதமாய் மெதுவாக இருளுக்குள் கால்நடைகள் !

மனதில் சில சோகம் விழியெல்லாம் வெகுபாரம்,
வெளிப்படுத்த பக்கத்தில் வேண்டாமே மனிதர்கள் !
எல்லாம்தான் துறந்து புகவேண்டும் தனிமைக்குள்,
எனக்கே எனக்கான கருநிறத்து இருளுக்குள் !

இருளின் தயவின்றி எவர்வாழ முடியுமிங்கே !
இருள்வந்து நீங்காமல் எங்கனம் விடியுமிங்கே !
இரவின் மடியில்தான் ஆக்கங்கள் வழியுமிங்கே !
அபசகுனம் எனும் மனிதம் என்றைக்கு தெளியுமிங்கே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Feb-16, 10:07 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 104

மேலே