காதலின் கருணை மனு

உன் விவாகரத்து மனு
கருணையற்றச் சட்டத்தின் முன்
கைகட்டி நிற்கிறது .

யோசித்துப்பார்ச் சகியே ,

சட்டத்தைக் கேட்டாக் காதலித்தோம்
கறுப்புக் கோட்டும்
நீதி மன்ற வளாகமும்
நம் காதல் சட்டத்தின் முன்
இலைச் சருகாய்க் கூச்சலிடுகின்றன ,

போதும் பெண்ணே
பிரிவின் வலிகள் !

மீண்டும் வசந்தம்
நம் வாழ்வில் துளிர்க்க வேண்டும்

காலங்கள் நடத்திய பாடம் போதும்
நமக்குள் சில மூடிகிடக்கும்
கதவுகளைத் திறப்போம் !

அதற்குள் ...
நாம் வெய்யிலில்
விடைப் பெறும் பனித்துளியாய்
நம் முரண்களைத் துறக்க வேண்டும் .

காதல் தோணியில்
அன்புத் துடுப்புதான்
நம்மைக் கரைச் சேர்த்தது

ஏதோ ஓர் அலையின் வருகையில்
துடுப்பை மறந்தோம்
எங்குப் போகிறோம் என்பது
இருவருக்கும் தெரியவில்லை .

ஒரு தோணி
இரு திசையில் பயணம்
வெகு தூரம் வந்து விட்டோம் !
கரைகள் தென்படவில்லை
இறுகிப்போன கோபமும்
எதையும் அடையவில்லை !

எட்டும் தூரத்தில் இருக்கும்
உன்னிடம் பேச எதுமில்லாமல்
உப்புக்காற்றின் உறவில்
எனக்குப் புழுக்கம் தாங்கவில்லை.

வா மீண்டும் காதலிப்போம்
வசந்தம் நம் வாசல் கதவைத் தட்ட
பிடிவாதச் சிறைக்குள்ளிருந்து
வேளியே வருவோம்...

இலை எதிர்காலம்
எதிரே தெரிகிறது ...
இது என் காதலின் கருணை மனு !

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (16-Feb-16, 10:33 am)
பார்வை : 339

மேலே