அப்பா

அப்பா

சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயில் பயணம்.

அதிகாலையில் புறப்படும் சதாப்தி ரொம்ப சௌகரியமாய் இருந்தாலும் , நாலு மணிக்கே எழுந்திருந்து அரக்கப் பறக்க ஓடி , அஞ்சு மணிக்கு முன்னாலேயே வீட்டை விட்டு கிளம்ப இப்போதெல்லாம் முடிவதில்லை. பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஏழு மணிக்கு கிளம்புவதால், இன்னும் ஒரு மணி அவகாசம் கிடைக்கிறது
.
630 மணிக்கு ஸ்டேஷன் வந்து, A .C சேர் காரில் சீட்டைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தாகிவிட்டது. ஜன்னல் ஒர சீட் .

சீட்டில் உட்கார்ந்து செட்டில் ஆனேன். வண்டி புறப்பட இன்னும் அஞ்சு நிமிடம்தான். பக்கத்தில் இருந்த இரண்டு சீட்டுகளும் நிரம்பவில்லை. யார் வரப் போகிறார்கள் என்ற க்யூரியாசிட்டியோடு , அவசரம் அவசரமாக ரயில்பெட்டிக்குள் ஏறுபவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் ஏறும் அவசரத்தில் , ரிசர்வேஷன் சார்ட்டில் பார்க்க மறந்துவிட்டேன். ஒருவேளை ஒருத்தரும் வரவில்லை என்றால் , கொஞ்சம் கையைக், காலை நீட்டி வைக்க சௌகரியமாக இருக்கும் என்ற ஒரு நப்பாசை கூட.



ரயில் மெல்ல நகர ஆரம்பித்து விட்டது. சரி, இன்னிக்கு நமக்கு கொஞ்சம் லக் இருக்கு என்று நினைப்பதற்குள் . பின் பக்கத்தில் இருந்து வந்து நின்றார்கள் இரண்டு பேர் - முப்பதுக்கு மேல் வயதான ஒரு ஆணும்,ஒரு ஏழு வயதுப் பெண் குழந்தையும்.

குழந்தை கொள்ளை அழகு.

அதிதி- என் பேத்தி- இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள் என்று கற்பனை ஓடியது.

பெட்டி, பைகளை யதாஸ்தானம் செய்துவிட்டு அப்பா என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார். குட்டிப் பெண் அதற்கு அடுத்த எயில் (aisle)சீட்டில் .

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்தது. குட்டிப் பெண் முகத்தை "உம்" என்று வைத்துக்கொண்டிருந்தாள் .என்னைப் பார்த்து கையைக் காட்டி, அப்பாவின் காதில் "குசு - குசு ' என்று எதோ சொன்னது. என்ன சொல்லியிருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், வேண்டும் என்றே மூஞ்சியை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு, வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தேன். அப்பா ' இரு ,இரு" என்று சமிஞ்கை செய்து அவளை அடக்குவதை ஓரக்கண்ணால் பார்க்க முடிந்தது.

ஒரு ஐந்து நிமிடம் இந்த நாடகம் தொடர்ந்தது. என்னால் அதற்கு மேலும் அடக்கமுடியவில்லை. அப்பாவிடம் கேட்டேன்--


"குழந்தை என்ன சொல்றாள்?"
" ஹி , ஹி , ஒண்ணும் இல்லை, ஜன்னல் ஒர சீட்டு வேணுமாம். கேக்கறா. இருடி, தாத்தாவை டிஸ்டர்ப் செய்யக்கூடாது" -ன்னு சொல்லிண்டு இருந்தேன்."
'அதனால் என்ன, கொழந்தைதானே, தாரளமா வரட்டுமே"

என்று கூறியவாறு, என் ஜன்னல் ஒர சீட் ஆசைகளுக்கு ஒரு மூட்டை கட்டி விட்டு சீட்டை மாற்றிக்கொண்டேன்.

அப்போது அந்த குழந்தையின் முகத்தில் ஒரு பூரிப்பு -- ஆகா, பார்க்க ஆனந்தமாக இருந்தது.



சதாப்தியில் ரயில்வேஸ்- ஏ சாப்பாடு கொடுத்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது சௌகர்யம் என்றாலும் , அவன் கொடுப்பதை சாப்பிட்டாகவேண்டிய கட்டாயம். ஆனால் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்! மற்ற ரயில்களில், இடைவெளி விடாமல் , இப்படியும் அப்படியுமாய் , தோசை, பூரி, பஜ்ஜி, ஆம்லெட், பிஸ்கேட் , சிப்ஸ் இத்யாதி இத்யாதி வகையறாக்களை விற்றுக்கொண்டு போவார்கள். எல்லாருக்கும் சாப்பிடவேண்டும் என்ற சபலம் வராமல் இருக்காது. இதற்காக வேண்டியே , "டிபன் கட்டிக் கொடுக்கிறேன்" என்று சொன்ன மனைவியிடம், : உனக்கு எதுக்கு சிரமம்," என்று சொல்லி விட்டு வந்து இருந்தேன்!.



எனக்கே இப்படி என்றால் அனன்யா விற்கு ( அவள் பெயர்- கே.அனன்யா, 3 rd ஸ்டாண்டர்ட் சீ செக்ஷன்- அப்பா -கிருஷ்ணன், அம்மா - பவித்ரா, டீச்சர்- மாலதி மிஸ், ரொம்ப ஸ்ட்ரிக்ட்,- பிடிச்ச ப்ரெண்ட்-பாவனா, எனிமி - மகேஷ் போன்ற கம்ப்லீட் பயோ டாடா சொல்லி முடித்து விட்டாள் .) கேட்கவா வேண்டும்? ஒவ்வொரு வியாபாரி போகும் போதும் ' அப்பா, இது வேணும்" என்று கோரிக்கை. சிலதை வாங்கிக் கொடுத்தார் கிருஷ்ணன். மற்றதற்கு எல்லாம் ஏதோதோ காரணங்கள் சொல்லி சமாளித்தார். மனுஷனுக்கு ரொம்ப பொறுமை என்று நினைத்தேன்.

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து ஐஸ் கிரீம் விற்பவன் வந்தான்.. 'ஐஸ் க்ரீம் ' என்ற வார்த்தையைக் கேட்டதுமே அனன்யாவின் கண்கள் அகல விரிந்தன! அந்தக் கண்களாலேயே அப்பாவுக்கு கோரிக்கை வைத்தாள் குழந்தை.



கிருஷ்ணன் சாமர்த்யசாலி .

எப்படியும் ஐஸ் கிரீம் வாங்கித் தராமல் இருந்தால் விட மாட்டாள் என்று தெரியும்.
அதனால் அவளுடன் ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கொண்டான்.


" அனன்யா, நான் ஐஸ் கிரீம் வாங்கிர்த் தரேன்! ஆனா ஒரு கண்டிஷன், கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வர வரைக்கும் நல்ல பொண்ணா , இது வேணும், அது வேணும் -ன்னு தொந்தரவு பண்ணாம இருந்தா, இறங்கரத்துக்கு முன்னாடி வாங்கித் தருவேன்".


இது அனன்யாவுக்கு சரியாகப் பட்டது.

"ப்ராமிஸ்?"
"ப்ராமிஸ்!"
"தம்ப் ப்ராமிஸ்?"
"தம்ப் ப்ராமிஸ்!"

ஒப்பந்தம் செய்து முடிந்தாயிற்று.

ஒரு ஐந்து நிமிடம் போனது.

"அப்பா"--

ஆள்காட்டி விரலால் கிருஷ்ணனின் தோளில் குத்தி எழுப்பினாள் அனன்யா.


"என்னம்மா?"
'டூட்டி பிரூட்டி தான் வேணும்."
"சரி."
"நீயும் சாப்பிடனும்."
"சரி."
"ஒனக்கு ஒண்ணு , எனக்கு ஒண்ணு !"
"ஓகே ."

அப்பா, உனக்கு ஐஸ் கிரீம் பிடிக்குமா ?
"பிடிக்குமே."
"எவ்வளோ பிடுக்கும்?"
"இவ்வளோ !"-

கிருஷ்ணன் கை அகல விரித்துக் காட்டினான்.



"எந்த ஐஸ் க்ரீம் உணல்லு ரொம்பப் பிடிக்கும்?"
"சாக்லேட்!"
"அப்போ,நம்ப ஒரு டூட்டி பிரூட்டி, ஒரு சாக்லேட் ஐஸ் கிரீம் வாங்கலாம்."
"சரி."
"நீ எனக்கு ஒரு வாய் சாக்லேட் கிரீம் தா, நான் ஒனக்கு ஒரு வாய் டூட்டி பிரூட்டி தரேன். சரியா?"
"ஓகே. டீல் !"

இருவரும் ஒரு "ஹை பய்வ்" கொடுத்துக் கொண்டார்கள்.

"உங்கப்பா உனக்கு ஐஸ் க்ரீம் வாங்கி தருவாரா?
"தருவாரே!"

உரையாடல் தொடர்ந்தது.கிருஷ்ணன் அவரது சின்ன வயது ஐஸ் க்ரீம் கதைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
நான் தூங்கப் போய்விட்டேன்.



கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வருவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னாலேயே , கச்சா முச்சா என்று சத்தத்துடன் இறங்குவதற்கு ஆயத்தம் செய்ய பலர் ஆரம்பித்தார்கள். நானும் இந்த சத்தத்தில் முழித்துக்கொண்டு விட்டேன்.

அனன்யா " அப்பா, ஐஸ் கிரீம்," என்று தொண தொணக்க ஆரம்பித்து இருந்ததாள் !
கிருஷ்ணன் ஒரு பதபதைப்புடன் ஐஸ் கிரீம் கொண்டு வருபவனைத் தேடிக்கொண்டிருந்தான்.

அவன் வருவதாகக் காணோம் .

அப்போது அந்தப் பக்கம் வந்த காபி விற்பவரிடம் கிருஷ்ணன், " ஏம்பா!அந்த ஐஸ் கிரீம் ஆளை கொஞ்சம் வரச் சொல்லேன்" என்று சொல்லி அனுப்பினான்.



குழந்தையின் முகம் சுருங்கி , உதடுகள் பிதுங்கின!.எந்த சமயமும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடலாம்.

நல்ல வேளை ! " கூல் டிரிங்க் , ஐஸ் கிரீம் " என்ற கூவலுடன் விற்பவன் வரவும், அனன்யாவின் கண்களில் மீண்டும் ஒளி மின்னல்!

" ஐஸ் கிரீம்! இங்க வாப்பா, "

நூறு ரூபாய்த் தாள் ஒன்று நீண்டது.

" ஒரு டூட்டி பிரூட்டி, ஒரு சாக்லேட்"

"சாரி சார், ஒரே ஒரு ஐஸ் கிரீம் தான் இருக்கு. - டூட்டி பிரூட்டி ;

மீதி எல்லாம் காலி!"

கிருஷ்ணன் அதை வாங்கி குழந்தையிடம் கொடுத்துவிட்டு, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
'கொடுத்த வாக்கைக் காப்பாற்றியாகி விட்டது".

அனன்யா கொடுக்கப்பட்ட ஐஸ் கிரீமை சாபிடாமல் கையிலேயே வைத்துக் கொண்டு இருந்தாள்.

"ஏண்டா செல்லம், ஏன் சாப்பிடலே? சீக்கிரம். கண்டோன்மெண்டுக்கு அப்பறம் உடனே சென்ட்ரல் வந்துடும். க்விக்,க்விக் "
'ஒண்ணுதானே இருக்கு; உனக்கு சாக்லேட் வரல்லையே?"
"பரவாயில்லடா செல்லம்., நீ சாப்பிடு."
' ஒனக்கு ரொம்பப் பிடிக்கும்னு சொன்னே?"
" அது உனக்காகச் சொன்னேன்டா கண்ணு ; ஆக்சவாலா எனக்கு ஐஸ் கிரீம் பிடிக்காது. டாக்டர் கூட நான் ஐஸ் கிரீம் சாபிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கார்"
" நிஜமாவா?"
"ஆமாண்டா செல்லம்."
"ப்ராமிஸ்?"
"ப்ராமிஸ்!"
"தம்ப் ப்ராமிஸ்?"
"தம்ப் ப்ராமிஸ்!"

குழந்தை சமாதானம் அடைந்து ஐஸ் கிரீமை சாப்பிடத் தொடங்கினாள் .
நானும், கிருஷ்ணனும் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டோம்.

என் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.

நான் சின்னவனாக இருக்கும்போது அப்பா அடிக்கடி மாம்பழம் வாங்கி வருவார். வீட்டில் எல்லோருக்கும் மாம்பழம் ரொம்பப் பிடிக்கும்.

அதன் கதுப்புகளை வெட்டி எனக்கும், என் தங்கைக்கும் கொடுப்பார். கொஞ்சம் அம்மாவுக்கு.

அவர் மட்டும் கொட்டையை எடுத்துக்கொண்டு அதை உறிஞ்சி சாப்பிடுவார்--.-" எனக்கு கொட்டையை சப்பி சாப்பிடறதுதான் ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிக்கொண்டு!

அதன் அர்த்தம் இப்போது புரிந்தது.

கண்களில் நீர் முட்டியது.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (17-Feb-16, 6:18 pm)
Tanglish : appa
பார்வை : 506

மேலே