பக்தியும் செல்வமும்

வைகுண்டத்தில் ஜகத்தைப் பரிபாலனம் செய்கிற ஸ்ரீமந் நாராயணன் அனந்தசயனத்தில் இருந்தார்கள். வெண் மேகங்கள் அமுதத் திவலைகளைத் தூவிக் கொண்டிருந்தன. அவர்களுடைய பாதக் கமலங்களுக்கு அருகில் ஸ்ரீ மகாலட்சுமி அமர்த்திருந்தார்கள். அனைத்துலக நாயகராய் விளங்கும் ஸ்ரீ விஷ்ணு லக்ஷ்மிதேவியுடன் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும்போது சொன்னார்கள், “பூலோகத்தில் என்னைக் குறித்துப் பிரார்த்திப்பவர்களை விட, உன்னைக் குறித்துப் பிரார்த்திப்பவர்கள்தான் அதிகம்.”

இறைவனுடைய திருமுக மண்டலத்தையே பார்த்தவண்ணம் ஸ்ரீலக்ஷ்மிதேவி சொன்னார்கள், “அவர்கள் அன்பிற்கு உகந்தவர் தாங்கள்தான். உங்களைக் குறித்து தியானிப்பவர்கள்தான் அதிகம் என்பது என் அபிப்பிராயம்.”

அதைச் சோதிப்பதற்கு ஒருநாள், பெருமாள் பூலோகத்தில் ஓர் அந்தணரின் வீட்டிற்கு, களையான முகத்தோடு ஒரு சந்நியாசி வேஷத்தில் வந்து இறங்கினார். அந்த அந்தணர் சாது சன்னியாசிகளை அழைத்து உபசரிப்பதையே தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு இல்லறத்தை நடத்துபவர். இறைவனுடைய மெய்யடியார்களைப் பூஜித்து அவர்களுக்கு தினமும் உணவளிக்காமல் சாப்பிடும் பழக்கமில்லாதவர்.

அந்த அந்தணர் சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

சந்நியாசி வேஷத்திலிருந்த பெருமாள் சொன்னார், “நான் உங்கள் வீட்டில் உணவருந்த வேண்டுமானால் ஒரு நிபந்தனை. நானாக உங்கள் வீட்டை விட்டுப் போகிற வரையில் என்னை யாரும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியேபோகச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது. சம்மதமா?”.

அந்த அந்தணர், “பரிபூரண சம்மதம். வாருங்கள், வாருங்கள். நீங்கள் இங்கேயே தாராளமாகத் தங்கிக் கொள்ளலாம். அதுவும் நீங்கள் விரும்பும் வரையில்” என்று சொன்னார்.

“அப்படியா சரி” என்று சந்நியாசி அங்கேயே காலவரையின்றி தங்கிக் கொண்டுவிட்டார்.

அந்த அந்தணரும் அவருடைய இல்லத்தரசியும் சந்நியாசிக்கு ஆசார உபசாரம் செய்து விருந்தளித்தார்கள். அன்பைப் பொழிந்து பணி செய்யலானார்கள்.

இவ்வாறு சன்யாசியை நாள்தோறும் விருந்தோம்பி, உபசரித்துக் கொண்டே வந்த காலத்தில் அந்தணருடைய வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்து கடைசியாக அஸ்தமித்து விட்டது. நகை-நட்டுக்களை விற்றாகி விட்டது, தோட்டம்-துரவுகளை விற்றாகிவிட்டது, வீடு-வாசல்களையும் விற்றாகி விட்டது, வாடகை வீட்டில் இடம்பெயர்ந்து விட்டார்கள். அந்தணரும், அவருடைய மனைவியும் சந்நியாசிக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுக்கு வந்த சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் சந்நியாசியைக் கவனித்துக் கொண்டார்கள். ஆனால், சந்நியாசியோ தான் ஒரு சுமையாக இருந்ததையோ, அவர்களுடைய கஷ்டங்களைப் புரிந்துக் கொள்கிற மாதிரியோ, அவர்களை விட்டு அசைகிற மாதிரியோ தெரியவில்லை.

சொல்லி வைத்தாற்போல், காஷாயமணிந்த ஒரு வசீகரமான தபஸ்வினியின் வேஷத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவியின் பிரவேசம் ஆயிற்று.

அந்த அந்தணத் தம்பதிகள் சந்நியாசினியையும் வணங்கி அன்போடு அழைத்துச் சென்று உபசரித்தார்கள்.

சந்நியாசினியும் ஒரு நிபந்தனை வைத்திருந்தார்கள். சாப்பிடும் உணவு அந்தணத் தம்பதிகளுடையதாக இருந்தாலும், சந்நியாசினி தனக்கென்று வைத்திருக்கும் பாத்திரம்-பண்டங்களைத்தான் உபயோகிப்பார்களாம்.

சந்நியாசினி தன்னுடைய துணி மூட்டையிலிருந்து வெளியே எடுத்த கனமான பாத்திரம்-பண்டங்கள் என்ன தெரியுமா? அத்தனையும் தங்கம். அந்தணத் தம்பதிகள் தங்கள் ஆச்சிரியத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே அவர்களுக்கு உணவு படைத்தார்கள். இப்படியாக முதல்தடவை சந்நியாசினிக்கு உபசாரம் நடந்து முடிந்தது. சந்நியாசினியும் அந்தணத் தம்பதிகளின் உபசரிப்பில் மகிழ்ந்து உள்ளம் குளிர்ந்து போனார்கள்.

அடுத்த தடவை அந்தத் தம்பதிகள் சந்நியாசினிக்கு விருந்து படைக்க அதே தங்கப்பாத்திரங்களை அதாவது, தாம்பாளம், கிண்ணம் இத்யாதிகளை துப்புபரவாகத் துலக்கி நன்றாக அலம்பி அவர்கள் முன்னால் கொண்டுவந்து வைத்தார்கள்.

அப்போது சன்யாசினி சொன்னது அந்தத் தம்பதிகளை ஆச்சிரியப்பட வைத்து விட்டது.

சந்நியாசினி சொன்னார்கள், “இல்லை, இல்லை, இந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்து விடுங்கள். நான் ஒரு தடவை உபயோகித்த பாத்திரங்களை மறுபடியும் உபயோகிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு தன் மூட்டையிலிருந்து உபரியாக இன்னும் ஒரு தங்கப் பாத்திர வரிசையை எடுத்துக் கொடுத்தார்கள்.

அந்தணர் வினவினார், “அப்படியென்றால், இதற்கு முந்தின பாத்திரங்களை எல்லாம் என்ன செய்வது?”

சன்யாசினி சொன்னபதில் அவர்களை அதிர வைத்து விட்டது, “வீட்டுக்குப் பின்பக்கம் தூக்கி எறிந்துவிடுங்கள்!”.

அந்தணரும் அவருடைய மனைவியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

விருந்து முடிந்த பிறகு, அந்தணர் மனைவியிடம் சொன்னார், “அடியே, கேட்டாயா, இந்த அபார மதிப்புள்ள தங்கப் பாத்திரங்களை வீட்டுப் பின்பக்கம் தூக்கிக் கடாசி விட வேண்டுமாம். எப்படி இருக்கிறது! நீ ஒன்று செய். இந்தத் தட்டு, கிண்ணம் இவைகளை ஒன்றொன்றாகத் தூக்கி எறிவதுபோல் எறி. நான் அங்குப் போய் நின்றுகொண்டு அவைகளைப் பிடித்துக்கொள்கிறேன்.

அப்புறம் கேட்கவா வேண்டும்? இப்படி ஒவ்வொரு வேளை பரிமாறல் முடிந்ததும் அந்தணருடைய மனைவி தங்கப் பாத்திரங்களை வீட்டுக்குப் பின்பக்கம் தூக்கி எறிவதும், அந்தணர் அவற்றைப் பிடித்துக் கொண்டு வருவதுமாக நாள்கள் சென்றன. சந்நியாசினியின் வருகை அந்தணத் தம்பதிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. லக்ஷ்மி தேவியின் க்ருபா கடாக்ஷத்தில் அவர்களுடைய ஐசுவரியம் வளர்ந்தது. ஏழ்மை ஒழிந்தது என்று ஆனந்தமடைந்தார்கள். விருந்தாளிகளை இன்னும் பரிவுடன் உற்சாகமாக கவனித்துக் கொண்டார்கள்.

ஒரு நாள், சந்நியாசினி அந்த அந்தணரைக் கூப்பிட்டார்கள். அவரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

“என்ன தேவி, எல்லாம் சீராக இருக்கிறதா? குற்றங் குறைகள் ஒன்றும் இல்லையே? உங்களுக்குப் பணிவிடை செய்யக் காத்திருக்கிறேன்.”

“எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரேயொரு சின்ன தொந்தரவு”

தினமும் மூன்று வேளை தங்கமாய் பொழியும் சந்நியாசினிக்குத் தொந்தரவா? அந்தணர் பதறி விட்டார். “சொல்லுங்கள், எதுவாயிருந்தாலும் நிவர்த்தி செய்து விடுகிறேன்”

“இதைக் கேளுங்கள். இந்த வீட்டில் என்னைப் போலவே இன்னொரு சந்நியாசியும் தங்கி இருக்கிறார் இல்லையா?”

“ஆமாம். அவரால் உங்களுக்கு இடைஞ்சல் ஏதுமில்லையே?

“இடைஞ்சல் ஒன்றுமில்லைதான் ஆனால் அவருடைய பூஜை புனஸ்காரங்கள், இரைந்து உச்சரிக்கும் மந்திரங்கள், எழுப்பும் மணிச் சத்தம் – இவைகள் மட்டும் எனக்கு ஒத்துப் போகவில்லை. கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது. தலையும் வெடித்துவிடும் போலிருக்கிறது”

“இப்போது நீங்கள் சொன்னீர்களே, ஆயிரத்தில் ஒரு வார்த்தை!”

அந்தணர் ஒரு கணம்கூட தாமதிக்கவில்லை. சந்நியாசி இருப்பதால்தானே ஓசை எழுகிறது. அந்தச் சந்நியாசினியின் விருப்பத்தை இப்போதே அமல்படுத்த வேண்டும். விருட்டென்று கிளம்பி தவக்கோலமாய் வீற்றிருக்கும் சந்நியாசியின் முன்னால் வந்து நின்று அவரை நிஷ்டூரமாகப் பார்த்தார்.

“என்ன சாமியாரே, எப்போது புறப்படுவதாக உத்தேசம்?”

“அதற்கென்ன, இப்போது புறப்பட்டு விட்டால் ஆயிற்று” என்று சொல்லி விட்டு அந்த சந்நியாசி அங்கிருந்துப் புறப்பட்டு அந்தர்தியானம் ஆகி விட்டார்.

அந்தணத் தம்பதிகள் சந்நியாசினியிடம் வந்து, “அப்பாடா, சந்நியாசி ஒருவழியாகக் கிளம்பி விட்டார். இனிமேல் நீங்கள் இங்கு வசதியாக இருந்துகொள்ளலாம்”.

சந்நியாசினியாக இருந்த ஸ்ரீலக்ஷ்மிதேவி சொன்னார்கள், “என்ன, சந்நியாசி புறப்பட்டுப் போய் விட்டாரா? காரியத்தைக் குழப்பி விட்டீர்களே. நான் அவர் செய்யும் பூஜையால் எழுகின்ற ஓசைகளைத்தான் தவிர்க்கும்படியாகக் கேட்டுக் கொண்டேன். நீங்கள் அவரையே அனுப்பி விட்டீர்களா? அவரை யார் என்று நினைத்தீர்கள்? அவர் என் கணவர். கணவரில்லாத இடத்தில் மனைவிக்கென்ன வேலை?”

லக்ஷ்மிதேவியும் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

அந்த அந்தணர்தான் அடுத்த ஜன்மத்தில் ஸ்ரீருக்மணியின் தமையனார் ருக்மியாகப் பிறந்தார்.

- டி.ஜே. மாதவன்
---------------------------------------------------------------------------------------------------------------

பாகவதத்தின் கடைசியில் பெருமாள் சொல்கிறார், ‘என்னை வழிபடுபவர்களிடமிருந்து, என் மேல் பக்தி வைப்பவர்களிடமிருந்து, நான் சொத்து சம்பத்துக்களை பிடுங்கிக் கொள்கிறேன். அவர்களுடைய உற்றார், உறவினர்கள் பிணங்கி, தூர விலகிப் போகுமாறு செய்து விடுகிறேன். பிறகு நாலாவிதமான கஷ்ட நஷ்டங்களைத் தருகிறேன்’.

இப்படி பகவான் சொன்னார் என்றால் யார் அவரை வழிபடுவார்கள், பக்தி செய்வார்கள்?

பகவான் மேலே சொல்கிறார், ‘இத்தனைக் கஷ்டங்களை அனுபவித்த பிறகும், எந்த பக்தன் என் மேலுள்ள பக்தியை விடாமல் இருக்கிறாரோ, அந்த பக்தன் என்னையே விலைக்கு வாங்கி விடலாம். நான் அவருக்கு அடிமையாகி விடுகிறேன். இது என்னப் பிரமாதம், நான் அவருக்குப் பரமபதத்தையே வழங்கி விடுகிறேன்’.

எழுதியவர் : டி.ஜே. மாதவன் (17-Feb-16, 4:45 pm)
சேர்த்தது : vaishu
பார்வை : 234

மேலே