வாடிய மலர்கள் தேடிய கடவுள்

விடியலின் உலகை வாசமாக்க
பயணப்பட காத்திருந்தது
பனியில் குளித்த மலர்கள்

வண்ண மலர்களின் பயணச் சாலையில்
வந்ததெதிரே மழலைப் பூக்கள்
தவழும் மழலைகளெல்லாம் தன் புன்னகையால் வாசம் வீச
தன் தோல்வி ஒப்புக் கொண்டு
தன் பயணம் தொடர்ந்தது

அதோ அங்கே
ஆகம விதிகளுக்கு வெளியே நிற்கும்
அவன் தோட்ட மலர்கள்
கருவறை தாண்டிச் சென்று
வாசம் வீசிக் கொண்டிருந்தது
கடவுளின் கழுத்தோடு..

அதோ அங்கே
மழலைப் பூக்கள் மலர செய்ய
மங்கையவள் குழலேறி
மகரந்தச் சேர்க்கைக்கு மன்னவனுக்கு தூதுவிட்டு
வாசம் வீசிக் கொண்டிருக்கிறது
கட்டிலெனும் காடுகளில். .

அதோ அங்கே
மனித பயணம் முடிந்து
மரித்தவன் பயணத்தில்
நாற்றம் வீச செய்யாமல்
நறுமணம் வீசிக் கொண்டிருந்தது

அதோ அங்கே
அமைதியின் சின்னமாய் ஆடையணிந்தவள்
அள்ளியெடுத்து சூட நினைக்க
பலமாக ஒலித்தது பழமைவாத குரலொன்று
பதியிழந்தவள் பூச்சூட
பாவம் வந்து சேருமென்று

இப்போதோ
வாசம் வீசி வலம் வந்த
வண்ண வண்ண மலர்களெல்லாம்
மனம் வாடிய மங்கையைப் போல்
மணம் வாடிச் சருகானது

வாடிய மலரோ
தேடியேச் சென்றது திரும்பவும் கடவுளை

பதியிழந்த பெண்ணவள் பூச்சூட பாவமெனில்
கடவுள் நீ சூடினாலும் காய்ந்துதானே போகிறேன்
கனவனை இழந்தவள் எனைச் சூட
காலம்தான் நின்றிடுமோ? ஞாலம்தான் அழிந்திடுமோ? எனக்
கடும் கேள்வி கடவுளைக் கேட்டு
காற்றோடுச் சருகாய் பறந்தே மறைந்தது

கருவறைத் துயில் கலையா கடவுள் மட்டும்
கல்லாக நின்றிருந்தார் அங்கேயே...

எழுதியவர் : மணி அமரன் (18-Feb-16, 5:53 am)
பார்வை : 122

மேலே