அழகு

வானத்தில் தோன்றும் நிலவழகு
வண்ணத்துப் பூச்சிக்கு நிறமழகு
கதிரொளி மேல்படும் மழைத்துளியால்
உதித்திடும் வானவில் வடிவழகு

வெள்ளிக் கிழமைக்கு விளக்கழகு
வெண்ணிற முயலுக்குக் கண்ணழகு
துள்ளித் திரிந்திடும் மான்களுக்கு
புள்ளிகள் தந்திடும் புதுஆழகு

மல்லிகை மலருக்கு மணமழகு
அல்லிகள் பூத்திடும் குளமழகு
மாலையில் மறையும் கதிரவனும்
காலையில் உதிப்பது நிதமழகு

பால்தரும் பசுவிற்கு கன்றழகு
பறக்கும் பருந்துக்கு சிறகழகு
அங்கும் இங்கும் அலைகின்ற
அணிலுக்கு முதுகில் கோடழகு

கண்ணன் கைகளில் குழலழகு
காண்டீபன் கைகளில் வில்லழகு
கல்விக்குக் கடவுள் சரஸ்வதிக்கு
கைகொண்ட வீணை கவினழகு

முக்கனி மூன்றில் முதற்கனிக்கு
முருகன் கொண்ட சினமழகு
கோதண்டம் கொண்ட ராமனிடம்
குகனவன் கொண்ட நட்பழகு

உழைத்துப் பிழைக்கும் மனிதனுக்கு
உதிரும் வியர்வைத் துளியழகு
தன்னால் உழைத்தப் பொருளாலே
தன்பசி ஆற்றுதல் தனியழகு

பூக்களின் இதழ்களில் பனியழகு
பூமியில் பசுமை நிறமழகு
ஆயிரம் அழகுகள் இருந்தாலும்
அன்பே அகிலத்தில் முதலழகு.

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (24-Feb-16, 5:29 am)
பார்வை : 115

மேலே