என்ன செய்யப் போறீங்க

#என்ன செய்யப் போறீங்க..?

இருதிங்கள் அடவுகட்டி
இயன்றவரை நாடகம்
இளித்தவாயர் என்றெண்ணி
அடிமையாக்கும் ஆணவம்.!

திரண்டுவந்த கூட்டத்திற்கு
தின்னஎலும்பு அளித்திட்டார்
செய்வினைதான் எந்திரத்தில்
செய்தபலன் அடைந்திட்டார்..!

தேசமெங்கள் தேசமென்று
தெம்மாங்குப் பாடுறார்
தீசல்வாடைத் தெரியாமல்
தில்லுக்காட்டி ஆடுறார்..!

நாசங்கள் செய்தாலும்
ஞாயம்பேச யாருள்ளார்
நாசுழற்றிச் சாடுவோரை
நறுக்கிக்கூறு போடுறார்

குடியுரிமை நாட்டினிலே
கொள்கை மாறிப்போனதே
அடிமைகளாய் ஆக்குதற்கு
ஆனசட்டம் போடுதே..!

அயல்நாட்டான் அடிமைத்தனத்தில்
அன்றஞ்சி வாழ்ந்தனர்
மயக்கம்நீக்கி மாற்றானை
வந்தவழி ஓட்டினர்

நிலைமாறிப் போனதின்று
நிம்மதிகள் சாய்ந்ததே
மலையேறி நின்றகாலம்
மலையேறிப் போகுதே..!

சொந்தநாட்டில் அடிமைகளாய் சுடலைப்பேய்கள் ஆக்குமோ
வந்தவழி விரட்டிவிட
வாட்டமின்றிப் போகுமோ..!

எத்தனைதான் விழித்திருந்தும் எத்தர்களின் கண்கட்டு
வித்தைகளை புரிகிறாரே
விவேகத்தைக் கொன்றிட்டு..!

விலைவாசி வானந்தொட
விருட்டென்று ஏறுதே
மலைத்துப்போய் நின்றிருந்தால்
மரணம்விரைவில் சூழுமே..!

கள்ளனுக்கே காவலெல்லாம்
காட்டில்பிணம் கூட்டலில்
முள்ளில்வாழ்வைக் கொள்கிறாரே மூடர்சக்தி
கேட்டினில்..!

காக்கைகள் பிடிப்போர்க்குக்
காலமும்பொற் காலமாம்
வாக்கிட்ட வல்லவர்க்கோ
போக்குக்காட்டிப் போகுமாம்..!

தேர்வினிலே மோசடி
தேர்தலிலே மோசடி
சோர்ந்துபோகும் நாடடி
தீர்வினைகள் காணடி..!

துன்பங்களை ஏவிவிட்டார்
துட்டர்கள் அம்பிலே
இன்பமெல்லாம் காயங்களில்
என்செய்வார் மக்களே..!

அச்சத்துடன் ஒப்பந்தம்
அதுஎரிக்கும் தீப்பந்தம்
மிச்சஉயிரை மீட்கவே
மீட்டுச்சமர் ஆயுதம்..!

புலம்பிபுலம்பி வாழ்ந்ததெல்லாம் போதுமினிப் போதுமே
கள்ளர்களைச் சாய்த்தால்நம்
கவலையாவும் தீருமே..!

#சொ.சாந்தி
#மீள்

எழுதியவர் : சொ.சாந்தி (9-Jul-25, 9:24 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 45

மேலே