காலத்தை வென்றவன் கண்ணதாசன்

#காலத்தை வென்றவன் கண்ணதாசன்..!

வாழ்வியலை வளைத்துப்பிடித்து வனைந்த கவிஞனாம்
வற்றாத பாடல்களில்
வாழும் கவிஞனாம்..!
ஏழைக்கும் எளியவர்க்கும்
எழுதி வைத்தவன்
ஏழ்மைவிரட்டத் துவளாது
ஏற்றங் கண்டவன்..!

பூவனமாய் மணக்குத்தன்றோ
பொன்மகனின் பாட்டு
போதைதான் பலருக்கும்
கேட்டுஇன்பம் கூட்டு..!
மாவடுவாம் மழலைக்கண்
கண்டு இரசித்தவன்
மயங்கியே நொடிதன்னில் பாடிக் களித்தவன்..!

பித்தனையும் தெளிவாக்கும் புத்தன் மந்திரம்
பேசுமவன் பாடலுக்கு
உண்டு தந்திரம்
எத்தர்களை சாடுகையில்
எழுத்து சாட்டைதான்
எடுத்துவீசத் தேவையில்லை
எழுந்து அடிக்குந்தான்..!

ஏற்றத்தாழ்வு வாழ்விலு ண்டு
எதற்கு அச்சமோ
எண்ணியெண்ணி நோவதனால் இன்பமண்டுமோ
ஊற்றெடுத்தப் பாட்டுக்குள்ளே சுரந்த தத்துவம்
உன்னைநீ அறிந்துகொள்ள உண்டும கத்துவம்..!

கட்டிவைத்தான் தூளியினைக் கனிந்த தமிழிலே
கண்ணுறங்கச் செய்வானே காற்றின் வழியிலே..!
மெட்டிசைக்கும் பாட்டெல்லாம் மெத்தை போடும்
மெய்மறக்கும் இமைதழுவி தூக்கம் ஆடும்..!

வலைபோட்டுப் பிடித்து விட்டான் வகைப்பாட்டினில்
அவனடிகள் பற்றிபார்
நீமேட்டினில்
சிலைநாட்ட வைத்துவிட்டான்
தெருவீதியில்
சிறப்பெல்லாம் தமிழ்தந்தாள்
நிலைப் பாட்டினில்..!

காலத்தை வென்றகவி
வாழ்க வாழ்கவே
கலைச்செல்வன்
புகழ்புவியில் நின்று வாழ்கவே
ஞாலத்தில் ஞானகவி
என்றும் வாழ்கவே
ஞாயிறோடு திங்களோடு வாழ்க வாழ்கவே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-Jul-25, 8:21 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 53

மேலே