துணை - புதுக்கவிதை வடிவில்

தமிழ்மகன் என்ற எழுத்தாளர் எழுதிய ‘துணை’ என்ற சிறுகதை 17.07.2013 ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்தது. அருமையான கருத்துள்ள கதை. இது கதையாக எனக்குத் தோன்றுவதைவிட நிசமான பல பெண்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உணர்கிறேன். இதை இன்றைய புதுக்கவிதை முறையில் எழுதினால் எப்படியிருக்கும் என்று தோன்றியது.

பலர் இப்படித்தான் புதுக்கவிதைகள் எழுதுகிறார்கள். இதற்குப் பெயர் உரைவீச்சுக் கவிதையாம்...!

அதன் முயற்சியே இது.

பலசரக்குக் கடைப் பையன் கடைக்கு டீத்தூள் வாங்க வந்த புவனாவிடம், ’அக்கா! நான் எழுதிய கவிதை இது. நன்றாக இருக்கிறதா என்று பார்த்து, திருத்தித் தாருங்கள்’ என்று கேட்கிறான்!

நிழலாகப் பின் தொடர்வேன்
என்றாய்,
இருள் வந்தாலுமா?

வீட்டில் கணவன் பத்ரியின்
குதர்க்கமான கேள்விகளும்,
நடவடிக்கைகளின் விளைவும்..!

இருட்லயும்
அவன் உன் கூட
இருக்கணுமா?

எதற்கு அடிப்பான்..
எதற்கு அடிக்கமாட்டான்
என்று என்றாவது ஒருநாள்
சரியாக ஊகித்துவிட முடியுமா?

இந்த ஜென்மத்தின்
சவாலாக நினைத்தாள்
புவனா!

இடுப்பின் மீது
உதைக்கும் போது
கொஞ்சம் பயம்!

தன் பொருட்டு வயிற்றில் வளரும்
இன்னொரு உயிரும்
அடிவாங்கும்!

எதிர்பாராதவிதமாக
அவளுடைய தலையை உயர்த்தி
சுவரில் டமார் என அடித்தான்!

நெற்றியில் இருந்து
ஈரமாக முகத்தில் இறங்கியது
ரத்தம்!

சட்டையில் இருந்து
சிகரெட்டை எடுத்தான்
டி வி யை இயக்கினான்!

அவனுக்கு இன்றைய
ஆணவம் அலுப்பு நிலைக்கு
வந்து விட்டது!

இரண்டாம் ஜாமத்தில் எழுப்பி
சமாதானக் கொடி பிடிக்காமல்
இருந்தால் போதும்!

டி வி யில் ஒரு
மனோவியாதி மனிதனைப் பற்றிக்
காட்டிக் கொண்டிருந்தார்கள்!

குழந்தையின் எதிரில்
இது போன்ற படங்களைப் பார்க்க வேண்டாம்
என்று கோரிக்கை வைக்கலாம்!

ஆனால், அவனாக
வேறு சேனலுக்கு மாற இருந்த
யோசனையையும் கெடுத்து விடும்!

செத்துத் தொலைப்பதை விட
வாழ்ந்தே தொலைக்கலாம்
போல இருந்தது!

யாரோ ஒருவரின் நினைவு
நம்மை இழந்து விடாமல் காக்குமென்றால்
யாருடைய முயற்சியால் வாழ்கிறேன் நான்?

கரும்பலகையில் ஒரு கை எழுதிச்
செல்லும் வாக்கியத்தை இன்னொரு கை
ஈரத்துணியால் அழித்துக் கொண்டே வந்தது!

கணவனோடு செல்லும்
எல்லாப் பயணங்களும் ஒரு
மனக்கசப்பில் வந்து முடிகிறது!

கல்யாணம் காட்சி
என்று போக அவளுக்கு
விருப்பங்களே இருந்தது இல்லை!

பத்தடிக் கூண்டுக்குள்
சிக்கிய மான் போல வாழப்
பழகியிருந்தாள்!

எப்போது புல்லைச் சாப்பிட வேண்டும்
எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்
பழகிக் கொள்வதில் சிரமம் இருக்கவில்லை!

வீட்டில் எல்லா வேலைகளும் அவளுடைய
வேலைகளாக இருந்தாலும் தனித்தனியாகப்
பிரித்துப் பார்த்து எளிமையாக்கிக் கொள்வாள்!

இரவில் பத்ரியின் படுக்கைத் தொல்லைகளின் போது
மகன் சுரேஷ் எழுந்துபோய் அவனாகவே
ஹாலில் படுத்துக் கொள்வான்!

காலையில் பள்ளிக்கூடப் பையைத்
தூக்கிக் கொண்டு சுரேஷுக்குப் பின்னால்
நடந்தாள் புவனா!

எதுக்கு கோயம்பேட்டுக்கு?
நாம தாத்தா வீட்டுக்குப் போறோம்,
திருச்சிக்கா? ஆமாம்!

பாந்தமாக
அம்மாவின் கைகளைப்
பிடித்துக் கொண்டான்!

ஏன் இப்படி வந்தீங்கன்னு
தாத்தா திட்டினா? திட்ட மாட்டார்!
திட்டினா..? நீயும் திருப்பித் திட்டும்மா!

நானும் புதுக்கவிதைகள் எழுதுவதால், இந்தக் கதையை வாசித்த பொழுது பத்ரியை நினைத்து மிக்க கோபம் வருகிறது. புவனாவை நினைத்து என் மகளே போல வருத்தமாக இருக்கிறது.

ஏன் இப்படி வந்தீங்கன்னு
தாத்தா திட்டினா? திட்ட மாட்டார்!
திட்டினா..? நீயும் திருப்பித் திட்டும்மா! - இப்படி ஒருத்தனுக்கு என்னைக் கட்டி வைச்சுட்டீங்களே என்று புவனா தன அப்பாவைப் கேட்டுத் திட்ட ’என் மனைவி’ சொன்னாள்.

எழுத்தாளர் தமிழ்மகனையும் பாராட்ட வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Feb-16, 7:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

சிறந்த கட்டுரைகள்

மேலே