மானுடம் கரைந்த மனிதா

வெளிச்சப் புள்ளிகள்
கண்கள் கூச
தூர விலகி
இருட்குகைவெளிப்
பயணம்.

பாதைகொஞ்சம்
நெருடு ;நிரடல்,
பரவாயில்லை.

அங்கங்கே
துள்ளி ஓடி,
பதுங்கி, பாய்ந்து
வரும்
ஏற்கனவே இருப்பவை.

வராமல், குறுக்கிடாமல்
தன்வழி பார்த்து
விழிஒளி குவித்து
விரையலாம் அவையும்.

தேடுதல் குறித்த
தேவை, தேவையின்மை,
தெளிவின்மை.
துரத்தும் பேராசைப்
பேரோசை.
விடாமல்...
விட்டு விடாமல்.

அச்சம்
கொஞ்சம்,கொஞ்சமாய்
உதிர
தேடுதல் வேட்டை
தேடுதல் வேட்கை..
இங்கே...அங்கே..
இதோ..அதோ..
வேறு எங்கே?

நட.. ஓடு..
முடிந்தால் பற...

தகுமா? கூடுமா?
கேள்விகள் வருமா?
வராது.
எப்படி வரும்?

முடிந்த வரையில்
உம்...விட்டு விடாதே
நம்மால் முடியும்...
எதையும்?
யாருடையதையும்?
எப்படியும்?

மானுடம் கரைந்த
மனிதா!

வெளிச்சப் புள்ளிகள்
கண்கள் கூச
தூர விலகி
இருட்குகைவெளிப்
பயணம்

எழுதியவர் : கனவுதாசன் (27-Feb-16, 10:55 pm)
பார்வை : 86

மேலே