ஞான வாசிட்டம் - 5

இது வரை :

செல்வமும், ஆயுளும் (வாணாள்) பதினொரு (11) உலகியல் துன்பங்களில் முதலிரண்டு, என்பதை இதுவரை விசுவாமித்திரரிடம் கூறிய இராமன். இனி ..அகங்காரம், மனம் , ஆசை பற்றி தான் உணர்ந்ததையும் தனது ஐயங்களையும் அவரிடம் கேட்கிறான்:

3. அகங்காரம் :

மயக்கத்தால் விளைந்த விரோதி..
"நான்"எனும் அகங்காரம்
அதுவே ஆணவம்
அஞ்சிட வேண்டியதோர் பெருந்துன்பம்
மனத்துயரும் தீயனவும் அது உண்டாக்கும்
கொந்தளிக்க வைத்திடும் -
உணவினையும் வெறுத்திடச் செய்யும் !

அகங்காரம் விடுதலே..
பெரும் விடுதலையாகும்
இம்மேகத்தால் ..
ஆசையெனும் மல்லிகை பூக்கும்
அது..
ஆபத்துகளுக்கு வித்தாகும்
மனமே அதன் குடியிருப்பாகும்
சுயம் அறியாது வாழ்தலினால்
விளையும் நெருஞ்சி ஆணவம் ..
விலகியோட வழி தேடல் வேண்டும் !

4. மனம் :

சூறைக்காற்றிடை சுழன்றாடும் ..
மயிற்பீலியென மாறும் மனம்
எப்பொழுதும் ..
விருப்பு வெறுப்பிடையே - அலைமோதும்
சான்றோர் தொடர்பறுந்து ..
திரியும் தெருநாயெனவே
புலனுகர்ச்சிப் பொருள்களின் பின்னால்
அது பயனின்றி ஓடும்
சல்லடையில் பிடித்த நீரெனவே
நாளும் பொழுதும்..
அல்லதை நாடியலையும்!


பிணந்தன்னை பிடுங்கித்தினும் நாயாக..
மனம் - பேதைமை நிறை மாந்தரையே
புசித்து மகிழும்!
மோதுபெருங் காற்றினாலே
முறிந்தெழுந்த துரும்பெனவே
மயக்கமும் துன்பமுந் தரும் - மனம்
பாழ் கிணற்றில் நமையே தள்ளும்
வேரின்றி வளர்ந்த பொய் மனதை
ஆராய்ந்தால் வேறுபடும்!

பேய்பிடித்த பாலகர்
ஆட்டுவிக்கப் படுவதுபோல்
பல தீவினைகள் நமை புரிய வைக்கும்
பூமிக்கும் அதல பாதாளத்திற்கும்..
மாறி மாறி போய் வரும்..மகிழும்
நைந்த ஒரு கயிறெடுத்து
கிணற்றில் விழுந்த மரத்தினையே
மேலேடுத்தல் போல் - மனம்
நமை உயர்த்தும் ஒரு நேரம்;
குப்புறவே கீழே தள்ளும் பல நேரம்
மனம் ஆலகால விஷமாகும்
நெருப்பினும் அது கொடிதாகும் !

மனம் -
கடத்தற்கு அரியது ;
நெடுவயிரத்தினும் வலியது -
கடலினையும் பருகிடலாம் ..
மேருமலையினையும் பெயர்த்திடலாம்
சுடுகனலினையும் விழுங்கிடலாம்;
சும்மாயிரு என ..
மனமதை நிறுத்துதல் முடியாது
பொருள்கள் உதிப்பது மனதாலே
உயர் மலையினில் அடர் வனம்போலே
அழியும் உலகு மனதாலே;
மனமொழிந்திடில் எதுவுமிலாது போமே!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (1-Mar-16, 3:48 pm)
பார்வை : 211

மேலே