அநாதையின் பிள்ளையும் அநாதை

கடைத்தெருவின் இடுக்கில் என்னை பெற்றவள்
அழுகுரல் கேட்டு வலி மறந்தவள்
அற்ப வயதினில் கணவரை இழந்து
என்னை ஆளாக்கிய தெய்வம் அவள்

ஊர் பார்வையை ஓரக்கண்ணில் மறைத்து
தனித்த இரவுகளில் தேம்பி அழுதவள்
வீதிகளை தூயப்படுத்தி வீடுகளின்றி தவித்தவள்
குருதிகளை விற்று குடில் அமைத்தவள்

மாற்ற உடையின்றி இரவினில் குளித்தவள்
மார்கழி குளிரினில் மழையில் நனைந்தவள்
ஒருமுழம் பூவைக்க ஓராண்டு காத்திருந்தவள்
அத்திருவிழாவில் தீச்சட்டியை எனக்காய் சுமந்தவள்

கயவர் பலரால் முகம் சுழித்தவள்
கண்ணியமான சிலரால் என்னை வளர்த்தவள்
ஒருபிடி சோற்றுக்காய் உடல் இழைத்தவள்
ஒருமகன் எனக்காய் சாகாமல் இருந்தவள்

அவளின் ஒரே துணையான நான்
அயல்நாடு பணிபெற்று முதல் முறையாய்
அள்ளிவரும் பணத்தோடு தாய்நாடு திரும்பினேன்
விமான தளத்தில் உயிரற்றவள் ஆகிப்போனாள்

பார்க்க வந்த மகிழ்ச்சியின் மூச்சடைப்பா
என்னை பிரிந்துவிட்ட வலியின் மூச்சடைப்பா
இன்றுவரை நான் அறியேன் இறைவா
அநாதையின் பிள்ளையும் அநாதை ஆனேனே!

எழுதியவர் : பா.சிவன்பாரதி (1-Mar-16, 4:25 pm)
பார்வை : 63

மேலே