ஞான வாசிட்டம் - 7

இதுவரை :

பதினொரு உலகியல் துன்பங்களில் ,
செல்வம், ஆயுள், அகங்காரம், மனம் , ஆசை
பற்றிய இராமனின் சிந்தனைகள் பார்த்தோம்..இனி..
உடம்பு, பால பருவம், இளமை,
பற்றி இராமன் சொல்வதை இந்த பாகத்தில் காண்போம்:

6. உடம்பு

மெலிந்தும் பருத்தும்
மாறிடும் உடல்
இருப்பது துன்பம் தாங்க!
பொருள் நுகர்ச்சியினால்
எடை கூடுதல் குறைதல்
உடம்பின் இயல்பு..

பயனற்றே அது
இன்பமும் துன்பமும்
அடைவதும் கண்கூடு!
அதனினும் துயரமே
தருவதும் வேறு ஏது ?
..
பொறிகள் ஐந்தும்
இந்திரியங்கள் ஐந்தும் ஆன
பொல்லாப் பசுக்கள் பத்தும் ..
மனமெனும் வேலையாளும்
ஆசையெனும் மனைவியும்
வாயெனும் வாயிலும்
பற்களால் தோரணமும்
நாவெனும் குரங்கும்
அகந்தை உடை மனிதர்க்கு
வீடாகும் உடம்பு
அமிழ்த்திடும் அவரையே
அற்ப இன்பதுன்பம் எதிலும்
பயனேதும் இல்லாத போதிலும்!

இருப்பவன் இல்லாதவன்
எவர்க்குமே ஓர்நாள்
இறப்பினை தருபவன்
எமனெனும் கூற்றுவன்
மரணமும் மூப்பும்
யாவர்க்கும் பொது -உடம்பிற்கு
தனியாக பெருமை ஏது ?
..
மின்னலின் மீதும்
இலையுதிர் காலத்து
மேகத்தின் மீதும்-இல்லாத
கந்தர்வ நகரத்தின் மீதும்-
நம்பிக்கை வைப்போன்
மட்டுமே இவ்வுடம்பை
மெய்யென்று சொல்வான் !

7.பால பருவம்:

உடம்பின் உள்ளிருந்து
வேலை செய்யும்
அலையும் மனம்..
இதனிடை பால பருவம்
யாவர்க்கும் ஓர் துயரம்..
..
அதற்கு..
..
வலியினை சொல்லிடத் தெரியாது
துவளும் சிந்தையை அடக்கிட முடியாது
நல்லதும் தீயதும் புரியாது -பாலர்க்கு !

அற்ப விஷயத்திற்கும்
அழும் ..மகிழும்..
புழுதி மண்ணில் புரளும்;

பச்சைக் குழந்தையது ..

விண்ணிலவை வாவெனச் சொல்வதுண்டு
கற்றோரும், பெற்றோரும், உற்றோரும்
நடுங்குவர் பாலர் படும் பெரும் துயர் கண்டு
அறியாமை இருளில் தள்ளாடும்
பால பருவம் .. அதுவும் ஒரு துன்பம்!

8. இளமை:

இன்னுமொரு வேதனை..
மாந்தர்க்கு இளமை !
ரதி மன்மதர் சாதனை
அவர்தம் மனங்களில்
பாய்ச்சிடும் வேல்தனை
..
இளமையிலே ..
மனமும் உடலும்
மெதுவாய் மெலியும்
..
கல்வியால் விரிந்த உள்ளம்
காமத்தால் கலங்கும்
பெற்ற அறிவு எல்லாம்
பெருமழைக் கால வெள்ளமாய்
பயனின்றிப் போகும் !
தெளிந்த அறிவையும் கலக்கும்
இளமை - தருவதில்லை ஒரு சுகம்!

மனமெனும் மான் விழும் குழி
இளமை ..பாலை உடம்பில்
பெருகும் கானல் நீர்
இளமை இருக்கும் மட்டும்
ஆசையினால் அல்லவை செய்யும்
இவை யாவும் தவிர்த்த இளமை
எளிதிலே கைவரப் பெறுவது இல்லை

..என்பதால் பெரும்
துன்பம்தான் இளமை!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (3-Mar-16, 2:24 pm)
பார்வை : 103
மேலே