1 ஆலவாயண்ணல் திருமுகப்பாசுரம் குறிப்புரை தொடர்ச்சி
`கூடற் பதிமிசை நிலவு ஆலவாயில் மன்னிய சிவன் யான் மொழிதரும் மாற்றம் சேரலன் காண்க, அம்மாற்ற மாவன, - பாணபத்திரன் தன்னைப் போலவே என்பால் அன்பன் என்பதும், அவன் தன்னைக் காணுதலைக் கருதித் தன்பாற் புகுந்தனன் என்பதும், அவனுக்கு மிகுந்த பொருளைக் கொடுத்து மீண்டு வரும்படி விடை கொடுத்து அனுப்புதல் என்பதுமாகும் என வினை முடிக்க.
முதல் அடி தலச் சிறப்புக் கூறியது. அடுத்த இரண்டடிகள் அத் தலத்தில் உள்ள கோயிற் சிறப்புக் கூறியன. ஐந்து, ஆறாம் அடிகள் சேரலனது கொடைச் சிறப்புக் கூறியன. ஏழு, எட்டாம் அடிகள் அவனது வெற்றிச் சிறப்புக் கூறியன. ஒன்பது, பத்தாம் அடிகள் பாண பத்திரனது அன்புடைமை கூறியன. இறுதி இரண்டடிகள் ஆணை கூறியன.
`இப் பாசுரத்தில் குறிக்கப்பட்ட சேரலன் யாவன்` என்னும் ஆராய்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உள. பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்துள் இப் பாசுரத்திற் குறிக்கப்பட்ட பாண பத்திரரை வரகுண பாண்டியன் காலத்தவராகக் கூறினார். `சுந்தரர் காலத்துப் பாண்டியன் வரகுணன்` என்பதற்கு நூற்சான்றோ, வரலாற்றுச் சான்றோ எதுவும் இல்லை.
பரஞ்சோதி முனிவர்க்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு கட்கு முற்பட்டவராகிய சேக்கிழார், `இப்பாசுரத்தில் குறிக்கப் பட்ட சேரலன் சேரமான் பெருமாள் நாயனாரே` எனத் திட்டமாக வரையறுத்து, இத்திருமுகப் பாசுரத்தைக் கண்டு, சேரர் பெருமான் பாண பத்திரரைப் பெரும் பத்தியோடும், சிறப்போடும் வரவேற்று வழிபட்டுப் பெரும் பொருள் கொடுத்துப் பாசுரத்தில் - வரவிடுப் பதுவே - என்று இருத்தலால் பத்திரரைத் தம்மிடத்தே இருத்திக் கொள்ள மாட்டாது விடை கொடுத்து விடுத்தார்` என இப்பாசுர வரலாற்றினைக் கழறிற்றறிவார் புராணத்துள் பன்னிரண்டு பாடல்களால் விரித்துரைத்தார். `சேரமான் பெருமாள் நாயனார்` சுந்தரர்க்குத் தோழர் என்பது நன்கறியப்பட்டது.
மறைமலை அடிகளார் தமது, `மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்` என்னும் நூலில், மாணிக்கவாசகர் மூவர்க்கு முற்பட்டவர்` என்னும் தமது வாதத்தை நிலை நிறுத்தற் பொருட்டுப் `பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல` என்றார்.
திருமுகங் கொடுத்த வரலாற்றைக் `கல்லாடம்` என்னும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஞானசம்பந்தர் முதலிய மூவரில் ஒருவரைப் பற்றிய குறிப்பும் அவ் இலக்கியத்தில் இல்லை. `ஆகவே, அவ் இலக்கியம் மூவர் காலத்திற்கு முற்பட்டது` என்றும், அது மாணிக்கவாசகரைக் குறிப்பிட்டு விட்டு மூவரைக் குறியாமை யால் மாணிக்கவாசகரது காலம் மூவர் காலத்திற்கு முற்பட்டது என அடிகளார் முதலில் கூறினார். பெரிய புராணத்துள் திருமுகங் கொடுத்த வரலாறு சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுதல் அடிகளார் முதலில் கூறிய கூற்றை மாற்றுவதா கின்றது. அது பற்றி அவ்வரலாறு கூறும் பெயரிய புராணப் பாடல்களை `இடைச் செருகல்` என்றார். ஆயினும் அதனை நாம் அவ்வாறு கொள்ளுதற்கில்லை.
இத்திருமுகப் பாசுரத்தில் சேரலனைப் ``பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவுபவன்` என அவனது கொடையை ஆலவாய்ப் பெருமான் சிறப்பித்தருளினமை காணப்படுகின்றது. பெருமான் அருளியவாறே பாண பத்திரர்க்குச் சேரர்பிரான் மிகப் பெரும் பொருள் வழங்கியதைச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பெருமான் திருமுகம் விடுக்கும் அளவிற்குத் திருவருள் பெற்று விளங்கிய சேரன் எவனும் சேரமான் பெருமாள் நாயனாருக்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை.
சுந்தரர், தனது திருத்தொண்டத் தொகையில் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுகையில்,
`கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்` (தி.7 ப.39 பா.6)
எனக் குறிப்பிட்டார். `கார்கொண்ட கொடை` என்பது திருமுகப் பாசுரத்தில், `பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு - ஒருமையின் உரிமையின் உதவி`` எனக் கூறப்பட்டதனை அப்படியே எடுத்து மொழிந்ததாய் உள்ளது. அதை வைத்துத்தான், சேக்கிழார் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றில் திருமுகம் கொடுத்த வரலாற்றை விரித்துக் கூறினார். அதை, `இடைச் செருகல்` என்று தள்ளிவிடப் பார்ப்பது முறையாகத் தோன்றவில்லை. சேரமான் பெருமாள் நாயனார் தில்லைத் தரிசனம் செய்த சிறப்பைக் கூறுமிடத்தில் சேக்கிழார்.
`சீரார் வண்ணப் பொன்வண்ணத்
திருவந்தாதி திருப்படிக்கீழ்ப்
பாரா தரிக்க எடுத்தேத்திப்
பணிந்தார், பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரியகொடைக்
கையார் கழறிற் றறிவார்தாம்` (தி.12 கழறிற். பா.56)
எனக் கூறினார். இதில் நாயனாரது கொடைச் சிறப்பைக் கூறிய தொடர், `திருமுகப் பாசுரத்தில் உள்ள தொடரே` என்பது தெற்றென விளங்குகின்றதன்றோ! பின்னும், `சேரர் பிரான் திருவாரூர் சென்று சுந்தரரைக் கண்டு வணங்கிய பொழுது அவர் பெரிதும் மகிழ்ந்து சேரமானது கையைப்பற்றினார்` எனக் கூறும்பொழுது, `பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு` (தி.12 கழறிற். பா.67) எனக் கூறினார். இதவும் முன்னர்க் கூறியதையே பின்னரும் வலியுறுத்தி மொழிந்ததாகின்றது.
பின்பு சுந்தரர் சேரர்பிரானை அழைத்துக் கொண்டு பாண்டி நாட்டு யாத்திரை செய்ய விரும்பிச் சேரரை அழைத்ததைக் குறிப்பிடும் பொழுது,
`சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
ஆர்வம் பெருகத் தமக்கு அன்று
மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
சேர எழுந்த குறிப்பாலும்
தாமும் உடனே செலத்துணிந்தார்``
(தி.12 கழறிற். பா.81)
எனக் கூறினார். இதிலும் திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் தெளிவாகக் குறிப்பிட்டமை காணப்படுகின்றது. பின்பு மதுரையில் சென்று தரிசித்ததைக் குறிப்பிடும் பொழுதும்,
``படியேறு புகழ்சேரர் பெருமானும் பார்மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை
முடிவேதென் றறிந்திலேன் என மொழிகள் தடுமாற``
(தி.12 கழறிற். பா.94)
என்றார். எனவே `திருமுகங் கொடுத்த வரலாற்றைச் சேக்கிழார் ஏதோ ஓரிடத்தில் போகிற போக்கில் ஒருவாறு கூறிப் போயினார்` என்னாது, `சேரமான் பெருமாள் நாயனாரது வரலாற்றில் அஃதொரு முதன்மை யான பகுதியாகக் கருதி வலியுறுத்தினார் என்றே கூற வேண்டியுள்ளது. அதனால் தான் சுந்தரர் சேரமான் பெருமாளைக் குறிப்பிடுமிடத்து அந்தக் கொடைச் சிறப்பையே எடுத்தோதிக் குறித்தார். ஆகவே, பெரிய புராணத்துள் ஒரு சில பாடல்களை, `இடைச் செருகல்` என்று சொல்லி நீக்கிவிட முயன்றால், அம்முயற்சி பின் பல இடங்களில் தடைப்பட்டு வெற்றி பெறாது மறையும். எனவே திருமுகங் கொடுத்த வரலாறு பெரிய புராணத்துட் கூறப்பட்ட வாறே கொள்ளத்தக்கது. பரஞ்சோதி முனிவர் கூற்ரில் உள்ள காலக் கணக்கை நாம் அப்படே கொள்ளுதற்கில்லை.
இனி, ``ஆல நீழல் உகந்த திருக்கையேஎத் தொடங்கும் திருஞானசம்பந்தரது திருவாலவாய்த் திருப்பதிகத்தில்,
(தி.3 பதி.115)
`தாரம் உய்த்தது பாணற் கருளொடே`(தி.3 பதி.115 பா.6)
என்று ஒரு தொடர் வந்துள்ளது. ``தாரம் பல் பண்டம்`` என்பது நிகண்டு ஆதலின், அத்தொடர் சேரமானால் பாணற்குப் பல் பண்டம் வரச் செய்த திருவிளையாடலைக் குறித்ததாகலாம் - எனச் சிலர் கருதுவர். `தாரம்` என்பது ஏழிசைகளுள் சிறந்த தொன்று, அதனை இனிது இசைக்கப் பாணற்கு ஆலவாய்ப் பெருமான் அருளியதையே அத் தொடர் குறிப்பதாகக் கொண்டு சேக்கிழார். திருநீலகண்டப் பலகை யிட்டருளிய செயலைக் கூறினார். அதனையும் பரஞ்சோதி முனிவர் பத்திரர் பொருட்டுச் செய்த திருவிளையாடலாகவே கூறினார். பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும். ஆலவாய்ப் பெருமானடிகள் அருளிச் செய்ய, நம்பி யாண்டார் நம்பிகள் பதினொன்றாந் திருமுறையில் முதல் திருப் பாடலாக அதனைக் கோத்து வைத்ததினூல் அத்திருப்பாடல் இத்துணை ஆராய்ச்சிக்கு இடமாயிற்று.
திருமுகப் பாசுரம் முற்றிற்று