அன்புள்ள மகனுக்கு
கருவில் சுமந்தது போதவில்லை எனக்கு
இன்னும் நெஞ்சில்
சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்
கோழி அடைகாப்பது போல்
இன்னும் நெஞ்சு குட்டில்
அடை கத்து கொண்டு தான் இருக்கிறேன்
உனக்கு தான் நேரம் இல்லை
என்ன செய்ய
அயல் நட்டு கம்பனிக்கு
வியர்வை சிந்தி கொண்டுருக்கிறாய்
அவன் உன் உழைப்பில் குளிர்காய்கிறான்
என் மனதை எரிய வைக்கிறான்
உனக்கு அது பிடிக்கும்
இது பிடிக்கும் என்று
அடுப்படியில்
புழுங்கி செத்தவள்
உனக்கு அழகு பார்த்து
பழகி போன கைகள்
ஒவ்வொரு வருட
தீபாவளிக்கும்
அப்போது புதிதாய் வந்த சட்டை கேட்டு நிற்பாய்
சுருக்கு பையில் சேத்து வைத்த காசுகளை
கொட்டி பார்த்தால்
உனக்கு மட்டும் சரியாக இருக்கும்
நீ அப்பனுக்கு கொள்ளி போட்ட பின்
உடலை மூடுவதற்கு வெள்ளை துணி தான்
எதற்கு புதுப்புடவை என
என்னை தேற்றி கொள்வேன்
நீ பொறியியல் படிப்பிற்கு
பிரிந்து சென்றாய்
பிரிவின் வலிகளோடு
பத்து வீட்டிற்கு பாத்திரம் தேய்ப்பவள்
15 வீடாய் மாற்றி கொண்டேன்
பட்டம் வங்கி
பதவியில் அமர்ந்தாய்
நீ அதை வாங்க
எத்தனை பேரிடம்
கை நீட்டி இருப்பேன் கடனுக்காய்
அடுத்து உன் துணைக்காய்
அதற்கும் நீ கை காட்டி விட்டாய்
உன்னோடு பணிபுரிந்த பெண்ணுக்கு
அதையும் முடித்து வைத்தேன்
விடு கட்ட வேண்டும் என்றாய்
உன் தகப்பனாரின் சுவடுகள்
கலந்த நம் புஞ்சைகளயும்
விற்று கொடுத்தேன்
உன்னோடு அழைத்து கொண்டு வந்தாய்
நரகம் என்னும் நகரத்திற்கு
பேரன் வந்த பின்
உன் மனைவி
வீட்டு வேலைகளை
என் தலையில் கட்டி விட்டாள்
உனக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்
இன்னும் முதியோர் இல்லத்தில்
சேர்க்க வில்லையல்லவா
ஹை ப்ளட் ப்ரெஷர்,ஆஸ்துமாவும்
தோழமை கொண்டு விட்டது
5 வருடங்களுக்கு முன்
போன வாரம் எடுத்த செக்கபில்
சுகரும் சேர்ந்து கொண்டது
முதுமைக்கு தோழமை கொடுக்க
முன்னை போல் செய்ய முடிவதில்லை
உன் மனைவி கேட்கிறாள்
அத்தை இதை கூடவா செய்ய
முடிய வில்லை என்று
உன்னிடம் இதை எல்லாம் சொல்ல ஆசை தான்
ஆனால் உன்னால் கேட்க முடியுமா
எழுதுகிறேன் என் இதய குறிப்பில்
எப்போவது எடுத்து படிப்பாய்
நான் இறந்த பிறகு