அப்பாவின் மண்வெட்டி
மண்வெட்டியின்றி அப்பாவை
தனியே பார்க்கமுடியாது.
அப்பா வயலுக்குப்போகும்
போதெல்லாம் அவர் சட்டையில்லாத வெறுந்தோளில் சாய்ந்தபடி கூடவே போகும் ஒரு குழந்தையைப்போல.
அப்பாவுக்கும் இதற்குமான உறவை எங்கள் நிலம் காடு கரை என யாவும்
அறியும்.
அவர் இதை காய்ந்தநிலத்தில்
லாவகமாக சாய்த்து இறக்கும்போது
பூமி இத்தனை இலகுவானதா எனத்தோன்றும்.
ஒருநாள் வாங்கிய விவசாயக் கடனுக்காக வளர்த்த மரத்திலே தொங்கிப்போனவரை புதைக்கக்கூட
குழிதோண்டியது இதோ இந்த மண்வெட்டியால்தான்.
விவசாயக்குடும்பத்தின் கடைசி சாட்சியாய் ஒவ்வொரு வீட்டிலும் மிஞ்சிவிடுகிறது
வெட்ட மண் இல்லாமல் வெட்டியாய்.
- நிலாகண்ணன்

