விவசாயியின் மகன் ஒதுக்கியது இந்தியா, வரவேற்றது அமெரிக்கா
பிறவியிலேயே பார்வையிழந்தவர். “இவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிடுங்கள்; இவனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை” என சொந்தங்களால் வெறுக்கப்பட்டவர்.
மற்றவர்களின் ஏளனத்துக்கும், புறக்கணிப்புக்கும் ஆளான அவர், இன்று நூற்றுக்கணக் கானோருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர்தான் ஸ்ரீகாந்த் போலா. ஒரு ஆண்டுக்கு ரூ.50 கோடி டேர்ன் ஓவர் செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்.
போலன்ட் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் உணவு பேக்கிங் செய்யப் பயன்படும் பொருட்கள், தட்டுகள், ஸ்பூன், பேக்கிங் செய்யப் பயன்படும் காட்டன் பெட்டிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பிசினஸ் செய்து வருகிறார். இவை அனைத்தையும் பிளாஸ்டிக் போன்றவற்றைத் தவிர்த்து, இயற்கையான முறையில், காகிதங்கள் மரப்பொருட்கள் போன்றவற்றை வைத்து சுற்றுச் சூழலுக்கு ஏதுவான முறையில் தயாரித்து வருகிறார். அவரது பிசினஸ் பயணம் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து...
விவசாயியின் மகன்!
“ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன். ஆந்திரப் பிரதேசத்தின் மசூலிப்பட்டினம் பகுதியில் உள்ள சீதாராமபுரம் என்ற கிராமத்தில் ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தேன்.
பார்வையற்றவனாகப் பிறந்ததால், என்னை ஏதாவது ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விடுமாறு என் பெற்றோரிடம் அக்கம்பக்கத்தினர் வற்புறுத்தி னார்கள். ஆனால், அவர்கள் அப்படி செய்ய வில்லை. என்னைக் கூடவே இருந்து பார்த்துக்கொண்டதுடன், இருந்த கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்து என்னைப் படிக்க வைத்தனர். அவர்களது ஆண்டு வருமானமே ரூ.20,000 -தான்.
என் பெற்றோருக்குப் படிப்பறிவு இல்லாவிட்டாலும், பாசமும் அக்கறையும் அதிகம். அதுதான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த வரம்.
தேர்வில் 98% மார்க்!
“சிறுவயதில் நான் பள்ளிக்குப் போக எங்கள் ஊரிலிருந்து 5 கிமீ போக வேண்டும். பள்ளியில் என்னை யாரும் ஒரு பொருட் டாகவே பார்க்கவில்லை. யாரும் என்னுடன் அதிகம் பேச மாட்டார்கள்; விளையாட்டு போன்ற எதிலும் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அந்தப் புறக்கணிப்பும் தனிமையும் மிகுந்த வேதனை அளித்தது.
பிறகு ஹைதராபாத்தில் ஸ்பெஷல் குழந்தைகளுக்கான பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்குதான் எனது தனித்திறமை அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஆனாலும் என் பார்வையின்மை காரணமாக அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்ய அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் விடாமல் மாநில அரசுடன் ஆறு மாதங்கள் போராடி அறிவியல் பாடத்தை படிக்கும் அனுமதியைப் பெற்றேன்.
என் ஆசிரியை ஸ்வர்ணலதா மற்றும் வேறு சிலரின் உதவியோடு புத்தகங்களை ஆடியோ வடிவில் மாற்றி படித்து, 98% மார்க் வாங்கி தேர்வில் வெற்றி பெற்றேன். எல்லோரும் என்னைப் பாராட்டி னார்கள். இந்த மார்க்குக்கு கல்லூரியில் அறிவியல் படிப்புக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்றார்கள். நானும் அதை நிறைய நம்பினேன். ஆனால், கல்லூரியில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒதுக்கியது இந்தியா, வரவேற்றது அமெரிக்கா!
ஐஐடி, பிட்ஸ்பிலானி போன்ற கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு கல்லூரி நுழைவுத் தேர்வு எழுதக் கூட அனுமதி தர மறுத்து விட்டார்கள். அதனால் எனக்கு பெரிய வருத்தம்தான்.
என்றாலும், ‘ஒரு கதவு மூடினால் என்ன, விளையாட இந்த உலகமே இருக்கிறது’ என்ற எண்ணம் எனக்குள் எப்போதுமே இருக்கும். எனவே, இந்தக் கல்வி நிறுவனங்களை விட்டுவிட்டு, வெளிநாடுகளில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப் பித்தேன். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தேன். இந்திய கல்வி நிறுவனங்கள் எனக்கு ஒரு சீட் கொடுக்க தயங்கிய வேளையில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உட்பட நான்கு பல்கலைக்கழகங்களில் எனக்கு சீட் கிடைத்தது.
நான் மாசசூசெட்ஸ் தொழில் நுட்பக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். அங்கும் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. போகப் போக அனைத்தையும் எனக்கு சாதகமாக மாற்றினேன்.
படித்து முடித்ததும் அடுத்து என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. என்னென்னவோ செய்யலாம் என்கிற திட்டம் மனதுக்குள் இருந்தாலும், என் குழந்தைப் பருவ புறக்கணிப்புக் கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற வெறி மட்டும் எனக்குள் குறையாமலே கனன்று கொண்டிருந்தது. அதனால் அமெரிக்காவில் கிடைத்த வேலைவாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இந்தியாவுக்கு வந்து எனக்கான, என் போன்றோருக்கான இடத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினேன்.
2012-ல் படித்து முடித்ததும் இந்த போலன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஆரம்பித்தேன். சிறிய கொட்டைகையும், மூன்று மெஷின்கள், எட்டு வேலையாட் களுமாக இருந்த என்னுடைய ஆரம்பகட்ட பிசினஸ் இன்று ஹூப்லி (கர்நாடகா), நிஜாமாபாத் (தெலங்கானா), ஹைதராபாத்தில் இரண்டு பிளான்ட்கள், ஸ்ரீசிட்டியில் முழுக்க சோலார் பவரில் இயங்கும் ஒரு ப்ளான்ட் உட்பட ஐந்து பிளான்ட்களாக வளர்ந்து உள்ளன.
இயற்கையின் மீது பற்று!
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் இயல்பியிலேயே இயற்கையின் மீது பற்று உண்டு. சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாசுபட்டு வருவதால், பெரும்பாலானோர் மீண்டும் பயன்படுத்தக்கூடிய (Recyclable) பொருட்கள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர். எனவே, பெருமளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இனி இது போன்ற பேப்பர் பொருட்களே தேவைப்படும். மேலும், அதற்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும் வீணான ஒன்றாகக் கருதப்படு வதால், கிடைப்பதும் எளிதாக இருந்தது. அதையே எனது பிசினஸாக தேர்தெடுத்துக் கொண்டேன். அதற்கான மிஷின்களை வாங்கி பிசினஸைத் தொடங்கினேன். சிறிய அளவில் தொடங்கியது நாளடைவில் பலத்த வரவேற்பு பெற்று படிப்படியாக முன்னேறினேன்.
ஏனெனில், பிசினஸ் என்பது சாதாராண விஷயமல்ல. அனைத்து பிசினஸிலும் பிரச்னைகள் உள்ளன. அதுவும் பார்வையற்ற எனக்கு அதிகமா கவே இருக்கிறது. அதற்காகத்தான் எனக்காக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டேன். என் பணியாளர் களையும், உற்பத்தி யையும் கவனித்துக்கொள்ள என்னுடைய டீச்சர் ஸ்வர்ணலதா, ஆலோசனைக்கு எஸ்.பி.ரெட்டி ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூலம் என் ெரும்பாலான பிரச்னைகளுக்கு என்னால் தீர்வு காண முடிகிறது.
ரத்தன் முதல் ரெட்டி வரை!
இன்று என் நிறுவனத்தில், ரத்தன் டாடா, பீப்பில் கேபிட்டல் நிறுவனத்தின் சீனிராஜூ, டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் சதிஷ் ரெட்டி, இந்தியாவின் முக்கிய ஏஞ்சல் இன்வெஸ்டார் களில் ஒருவரான ரவி மந்தா போன்றவர்கள் முதலீடு செய்துள்ளார்கள். இதில் ரவி மந்தாதான் எனக்கு நிதி மேலாண்மை குறித்த ஆலோ சனைகளை அளித்து வருகிறார்.
என் நிறுவனத்தில் தற்போது 450 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்களில் 60% மாற்றுத் திறனாளிகள். உள்ளூரில் என் பொருட்களைச் சந்தைப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறேன்.
எனக்கொரு கனவு உண்டு!
எல்லோருக்குமே கனவுகள் உண்டு. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமா வதில்லை. அதற்குப் பல காரணம். ஆனால், நாம் நம்முடைய மனதையும், இதயத்தையும் ஒருமுகப்படுத்தி துணிந்தால் எதையும் சாதிக்க முடியும். இந்தச் சமூகம் எப்போதும் தடைகளைப் போட்டுக்கொண்டேதான் இருக்கும். நாம் அதையெல்லாம் தாண்டி போகவேண்டும் என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.
மேலும், அதிர்ஷ்டம் என்பது எப்போதும் துணிவுடையவர்கள் பக்கம்தான் இருக்கும் என்பதை புரிந்துகொண்டால் வெற்றி நிச்சயம். “உன்னால் எதையும் செய்ய முடியாது என்று கூறும் உலகத்துக்கு, நான் எதையும் செய்வேன்’’ என்று நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளில் ரூ.100 கோடி!
தற்போது ரூ.50 கோடி மதிப்பிலுள்ள பிசினஸை இரண்டு வருடங்களில் ரூ.100 கோடி டேர்ன் ஓவர் செய்யும் நிறுவனமாக உயர்த்த வேண்டும். எனது நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ. என்னும் பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1.000 கோடி திரட்ட வேண்டும். இவைதான் என் அடுத்த இலக்கு’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ஸ்ரீகாந்த்.
பார்வை இல்லை என்றால் என்ன, என்னாலும் சாதிக்க முடியும் என்று உணர்த்தும் இவருக்கு நிச்சயம் ஒரு சல்யூட் அடிக்கலாம்!
கற்றுக்கொள்ளுங்கள்!
1. ஒரு கதவு மூடினால் என்ன, விளையாட இந்த உலகமே இருக்கிறது. முயற்சியைக் கைவிடாதீர்கள்.
2. சவால்களே உங்களுக்கான வாய்ப்புகள் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுக்குச் சாதகமாக அதை மாற்றிக்கொள்ளுங்கள்.
3. நம்முடைய மனதையும், இதயத்தையும் ஒருமுகப்படுத்தி துணிந்தால் எதையும் சாதிக்க முடியும். எப்போதும் அதிர்ஷடம் துணிவுடையவர்கள் பக்கமே இருக்கும்.
4. இந்தச் சமூகம் எப்போதும் தடைகளைப் போட்டுக்கொண்டேதான் இருக்கும். நாம்தான் அதையெல்லாம் தாண்டி போக வேண்டும்.
5. உன்னால் முடியாது என்று கூறும் உலகத்துக்கு, என்னால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டுங்கள்