சந்தித்துக் கொள்வோம் வா

சந்தித்துக் கொள்வோம் வா
நீயும் நானும் சந்தித்துக் கொள்வோம் வா
சங்கடம் களைந்து சந்தித்துக் கொள்வோம் வா
ஓரு முறையேனும் சந்தித்துக் கொள்வோம் வா
நிலவைத் தாண்டி நீல வானைத் தாண்டி
நட்சத்திரங்களைத் தாண்டி
புவியைத் தாண்டி பிரபஞ்சத்தைத் தாண்டி
சந்தித்துக் கொள்வோம் வா நீயும் நானும்
சந்தித்துக் கொள்வோம் வா
நீயும் நானும் நாமாய் மாற
கைகள் ஒன்றாய் சேரும் வேளை
கார்கடல் எழுந்து கருமேகம் தொடட்டும்
விண்மீன்கள் விழுந்து நிலமகள் மின்னட்டும்
எண்ணமும் வண்ணமும் ஒன்றாய் இணைய
ஊடலும் கூடலும் கூடித் தழுவட்டும்
உடலும் உயிரும் ஒன்றாய் உருகட்டும்
உதிரும் நம்பிக்கை மீண்டும் தளிர்க்கட்டும்
சந்தித்துக் கொள்வோம் வா
நீயும் நானும் சந்தித்துக் கொள்வோம் வா
சமரசம் செய்வோம் வா நீயும் நானும்
சமரசம் செய்தே சேர்ந்து கொள்வோம் வா
பூக்களின் புன்னகை பூமியை நிரப்பட்டும்
விச வண்டுகள் எல்லாம் வாடித்தொலையட்டும்
வடிக்கின்ற கண்ணீர் வற்றியே போகட்டும்
துடிக்கின்ற வேதனை தூர்ந்தே போகட்டும்
ஓர்மமும் வன்மமும் ஒழிந்தே போகட்டும்
சாதிகள் சண்டைகள் சரிந்து போகட்டும்
பூமியில் புது ஒளி கசிந்து பரவட்டும்
கத்திகள் யுத்தங்கள் மறைந்து ஒழியட்டும்
உத்தம வேதத்தில் உலகமே செழிக்கட்டும்
புத்தனும் இயேசுவும் புதுவழி சமைக்கட்டும்
புதுமைகள் காட்டியே அல்லாவும் இணையட்டும்
சித்தனும் சீடனும் சிவனையும் அழைக்கட்டும்
உற்றவர் யாவரும் ஒரு குடி ஆகட்டும்
சங்கடம் மறைந்து சலங்கள் தொலையட்டும்
நித்திலமதிலே நியாயங்கள் நிலைக்கட்டும்
நித்திய பூமியில் நிம்மதி பிறக்கட்டும்
நிலமகள் குளிர்ந்து பசுமையில் செழிக்கட்டும்
சந்தித்துக் கொள்வோம் வா
நீயும் நானும்
சந்தித்துக் கொள்வோம் வா
சண்டையும் சமாதானமும்
சந்திக்காதென்ற சரித்திரத்தை மாற்றியே
சந்தித்துக் கொள்வோம் வா
நீயும் நானும்
சந்தித்துக் கொள்வோம் வா