நிவர்த்திகள்
பக்கத்து நாட்டு வளம்
கண்டு எரிச்சல் ஒருவனுக்கு ..
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை
கட்டவிழ்த்து விடுகிறான்..
பக்கத்து மாநிலத்தின் வளம்
கண்டு எரிச்சல் ஒருவனுக்கு ..
பாயும் நதியினை
முடக்கி விடுகிறான்
பக்கத்து ஊரின் வளப்பம்
கண்டு எரிச்சல் ஒருவனுக்கு ..
ஏரியை உடைத்து
வெள்ளத்தில் மூழ்கடிக்கிறான்
பக்கத்து வீதியின் சுத்தம்
கண்டு எரிச்சல் ஒருவனுக்கு ..
கழிவுகள் ஓடும் நீரை
திருப்பி விடுகிறான்..
பக்கத்து வீட்டின் அமைதி
கண்டு எரிச்சல் ஒருவனுக்கு ..
பொறாமையால் தினம்
தீயை வைக்கிறான்..
வீட்டிற்குள்ளேயே விரோதம்
தன்முனைப்பால் குரோதம்
முரண் படுகிறான்..
அனைத்தும் பிரிக்கிறான்
தனக்குள்ளேயே போராடும்
இரு மன வேறுபாடுகளில்
நித்தம் உழல்கிறான்
நிம்மதியின்றி சாகிறான்..
எத்தனைதான் நிறைஎன்றாலும்
இத்தகைய மாந்தரின் நடுவில்தான்
நீங்களும் நானும் வாழ்கிறோம்..
நிவர்த்திகள் ஏதுமின்றி!

