unavu
உயிரினங்களின் உன்னத அடிப்படையே உணவு. உயிர்களின் இயக்க ஆற்றல் உணவுதான். உணவாகவே பிறந்து உணவாகவே உட்கொள்ளப்படும் நிகழ்வுதான் உலக உயிரினங்களின் விசித்திரம். பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகின்றவையும் உணவாகும். உயிர் வாழ உணவொன்றுதான் வழி. அறிவியல் ஆராய்சிகள் அறிவிக்கும் உயிர் படைப்புகள் அனைத்தும் உணவிற்காக சார்ந்து வாழ்ந்தவைகள் தான். ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்கள் அனைத்தும் உணவுப்பொருட்களே! தாவரங்கள் உயிர்வாழ காற்று, நீர், வெப்பம், நிலம் ஆகியவற்றை உணவாக்கி வளர்கிறது. தாவரங்களை விலங்குகளும், விலங்குகளை விலங்குகளுமேயும், இவை இரண்டையும் மனிதனும் உணவாக்கி வளர்கிறான். மனிதன் விலங்குகளுக்கும், சிதைக்கும் உயிரினங்களுக்கும் உணவாகிறான்.
பறித்த உணவு, பச்சை உணவு, பருகும் உணவு, பக்குவப்படுத்திய உணவு, பதப்படுத்திய உணவு, சமைத்த உணவு, சமைக்கப்படாத உணவு, வேகவைத்த உணவு, வேட்டையாடிய உணவு, பிணிக்கு உணவு, பிணி போக்கும் உணவு, சைவ அசைவ உணவு, துரித உணவு வரை என உணவில்தான் எத்தனை எத்தனை வகைகள். பாம்புற்கு பாம்பும், மீனிற்கு மீனும் போல மனிதை மனிதனே உணவாக்கி உண்டதும் உண்டு.
உணவுதான் நாகரிகத்தின் முதல்படி. ஆதிமனிதன் உணவிற்காகவே நெருப்பையும், உழவையும் உண்டாக்கினான். உழவினால் விலங்குகளை உறவாக்கினான். உண்பதற்காகவே வாழ்ந்த மனிதன் உணவின் பண்பினாலே வாழ்க்கை முறை மாற்றி வாழ்வதற்காக உண்ணும் வழக்கத்திற்கு வந்தான். உணவொன்றுதான் உயிர்களின் அனைத்திற்குமான மூலம்.
ஒரு நாட்டின் வளர்ச்சியும், வறுமையும் உணவின் பண்புதான். உணவின் தாக்கம் தான் இன்றைய உன்னத படைப்புகள். பேரண்டத்திற்கும் பெருமை சேர்க்கும் புவி சுழற்சி, உயிர்களை தன்னகத்தே உள்ளடக்கி அழிந்துபோன, புதிய பரிமாணங்களுடன் உயிர்களை பிறப்பித்து கொண்டிருக்கிறது. உணவிற்காகத்தான் மனிதன் உலக இயல்பை மாற்றினான். மாற்றியவன் காலப்போக்கில் தன் இயல்பிலும் மாற்றம் கொண்டான். ஒரு பகுதியில் தேவை போக வீணாக வீசப்படும் உணவுகள். ஒரு புறம் உணவின்றி வாடி உயிர்விட்ட உடல்களை புதைக்கும் அவலங்கள்.
உணவிற்கும் காலம் பிறந்தது. கண்ட நேரத்தில் கண்டதை தின்று திரிந்தவனுக்கு, கால நேரத்திற்கு என்ற கட்டுப்பாடு கொண்டு காலை, உச்சி, இரவு என்று உணவிற்கு நேரம் வகுத்து மேன்மையான உணவுகளை உண்டாக்கினான். உணவின் தன்மை உணர்ந்தவன் ஒரு போதும் உணவை வீணாக்க மாட்டான். வள்ளுவன் வரிகளை வாங்கி உரைப்பதானால் "உணவின்றி அமையாது உயிர்".
மருந்தே உணவும் உணவே மருந்தும் போல உணவே உயிராகும், உயிரே உணவாகும்.