இயற்கை - எழுத்து போட்டி கட்டுரை

இயற்கையின் இன்பத்தை வர்ணிக்க அழகுப்பூர்வமான வார்த்தைகளே கிடையாது எனச் சொல்லலாம். பனி படர்ந்த நீல மலைகள், வண்ண வண்ண பூக்கள், தங்கள் பாசைகளில் பாடித்திரியும் பலவேறுபட்ட பறவைகள், தன்னிச்சையாய் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள், இவைகளை தன்னுடன் அரவணைத்து வனப்புடன் திகழும் வனங்கள், நீந்தும் சிறுமீன்கள் முதல் பெரும் திமிங்கிலம் வரை உலவும் அலைகடல், கண் சிமிட்டி அழைக்கும் விண்மீன்கள், தங்க ஓடமாய் தவழ்ந்துவரும் வெண்ணிலா இவையெல்லாம் மனித மனங்களுக்கு இன்பத்தை மட்டுமில்லாமல், மனம் கசியும் நேரங்களில் அமைதி தந்து , மன ஆறுதலையும் தந்து வருகிறது.

அதனால்தான் வள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், தாகூர், கீட்ஸ், ஷெல்லி, வோர்ட்ஸ்வொர்த் போன்ற பெருங்கவிஞர்கள் எல்லோருமே அவர்களது பாணியில் இயற்கையை ஆராதனை செய்திருக்கிறார்கள். எல்லோரும் ஆராதனை செய்து போற்றிய இந்த இயற்கையின் முக்கியத்துவத்தையும் அதன் நன்மை, அதைக் காக்கும் வழிமுறைகள் பற்றிய எனது கட்டுரையை வெறும் கட்டுரையாக மட்டுமில்லாது இதில் அதற்கான தீர்வையும் தந்து படைத்திருக்கிறேன்.

மருந்துக்காக என்ற போர்வையில் தாவரம் மற்றும் விலங்குகளை கொல்தல்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விலங்குகள், தாவரங்கள் இவையின்றி இயற்கை இல்லை.தொன்றுதொட்டு இருந்துவரும் பாரம்பரிய இயற்கை வைத்தியம் ( சித்த மருத்துவம், ஆயுர்வேதம்) முதற்கொண்டு இன்றைய விஞ்ஞான மருத்துவம் போன்றவற்றில் இவையே மனித குலத்தின் உயிர்காக்கும் மருந்துப் பொருள்களின் காரணியாக இருந்துவருகிறது. தாவரங்கள், விலங்குகள் இவைகளை அழித்து பெறக்கூடிய மருந்துகள், மனிதனின் பல முக்கிய நோய்களை குணப்படுத்துகிறது என்று கூறி, அதை அழித்து அழித்து எல்லாவற்றையும் நாசமாக்குகிறோம். இவ்வளவையும் தரும் இவற்றுக்கு நாம் என்ன செய்தோம்...? அழித்தல் அழித்தல் அழித்தல் இது மட்டுமே. அவற்றின் வளர்ச்சியில் ஏன் நாம் அக்கறை கொள்வதில்லை.? தீர்வு காண்போம்.

.......... இதற்கான தீர்வு :
-----------------------------------------
.............அழிக்கும் தாவரங்களுக்கு இணையாக பன்மடங்கு தாவரம் பெருக்குவோம்.விலங்குகள் தன்னிச்சையாக வாழ உதவுவோம். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் தராமல் அவற்றின் வளர்ச்சிக்கும் முடிந்தவரை உதவுவோம். தாவரங்கள், விலங்குகள் இவற்றை அழிக்காமல் விஞ்ஞானமுறை மருந்து உற்பத்திக்கு முயல்வோம்.

அழகுக்காக என்ற போர்வையில் விலங்குகளை கொல்தல்
-----------------------------------------------------------------------------------------------------------
கிளைகளுடன் கூடிய கொம்புகளை கொண்ட மருண்ட விழிகளைக் கொண்ட மான்கள், நீண்ட தந்தங்களை கொண்டு அசைந்து வரும் யானை, தன் கொம்புகளின் மீது பல சிறுபறவைகளை அமரவைத்து உலா போகும் காண்டாமிருகம் இவற்றை காணும் போது மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.! அதன் அழகே தனி. ஆனால் அதையும் விட்டு வைத்தோமா நாம்.

அழகு என்ற போர்வையில் மான்களின் கொம்புகளை மட்டுமா வெட்டினோம்.? அந்த தாய் மான்களை அழித்து அதன் குட்டிகளை தவிக்க விட்டோம். அதை நினைத்துப் பார்த்தோமா? அந்த மான் கொம்புகளை கொண்டு வந்து வீட்டில் வைத்து அழகு என்கிறீர்களே இது அழகா.? தாய் மான்களை கொன்று குட்டி மான்களின் சாபத்தை வாங்குகிறீர்கள்....அந்த சாபத்தின் அடையாளம்தான் அந்த மான்கொம்புகள்,

யானையின் தந்தங்களை மட்டுமா வெட்டினோம்.? அந்த ஆஜானுபாகுவான யானையையும் வெட்டிச் சாய்த்து யானைகளின் தொகையையும் குறைத்து விட்டோம். குடும்பமாக வாழும் யானைகளை கொன்று தந்தமெடுத்து அதை வடிவமாக்கி கலைப் பொருட்கள் என்கிறீர்களே அவை கலைப்பொருட்கள் அல்ல. இவற்றுக்கு நாம் செய்யும் சாபக்கேடுகள்.

ஆப்பிரிக்கா காடுகளில் இருக்கும் காண்டா மிருகங்களை, கொம்புகளுக்காக அழித்து அதன் எண்ணிக்கையை குறைத்தே விட்டோம். "தனித்தன்மை வாய்ந்த பொருள் காண்டாமிருகத்தின் கொம்பு"என்று வீட்டில் வைத்து
உறவினருக்கும், சொந்தங்களுக்கும் வருவோருக்கும், போவோருக்கும் காண்பித்து பெருமை பீற்றிக்கொள்கிறீர்கள். அதன் இறப்பைப் பற்றி சிந்தித்தீர்களா..? உயிர் கொல்லும் கலைப் பொருட்கள் தயவு செய்து வேண்டாம்.

நினைத்துப் பாருங்கள்..... பெற்றோர்கள் நீங்களில்லாமல் உங்கள் பிள்ளைகள் எவ்வாறு துன்பப்படுவார்களோ அதுபோல்தான் இவைகளும்.அதை ஏன் நாம் புரிந்துகொள்வதில்லை..?. நமக்கென்று ஒரு நியாயம். விலங்குகளுக்கென்று ஒரு நியாயமா.? வேண்டாம். கால் பிடித்து கேட்டுக்கொள்கிறேன்.

............இதற்கான தீர்வு:
------------------------------------------
...........இப்படி உயிருள்ள விலங்குகளின் உயிர்கொல்லும் அழகு நமக்கு தேவையில்லை. உயிரற்ற பொருட்களிலும் நம் கலை நயத்தை காட்டமுடியும். கற்சிலைகள், ஓவியங்கள் என்பவையும் கலை நயப் பொருட்களே. அதைக் கொண்டு வீட்டை அலங்கரியுங்கள். விலங்குகளின் கொம்புகளிலோ அதன் தந்தங்களிலோ அல்ல.

வாழ்விடத்துக்காக என்ற போர்வையில் மரங்களை அழித்தல்.
-----------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை நமக்குத் தந்த மிகப் பெரும் வரம் மரங்கள் என்றால் அது மிகையில்லை. மரங்கள் என்பவை மனித குலத்தின் மிகப்பெரிய சொத்து. மனித குலத்தின் மிக முக்கியமான அங்கம் மரங்கள். வீடு கட்டுவதற்கென்று இவற்றை அழித்து வருவது மனித குலத்துக்கு மட்டுமல்ல, புவியிலக ஜீவராசிகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அபாயம். மரங்களின் இயற்கையான நெருங்கிய உறவு, புவிக்கோளின் உயிரின வாழ்க்கைச் சூழல் செழிப்புக்கு மிக மிக முக்கியமான ஒன்று. பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக அதிக அளவு மரங்களை அழிப்பதால் எண்ணற்ற சுற்றுச் சூழல் நெருக்கடிகள் ஏற்பட்டு விரைவில் வெறுமை உலகமாகிவிடும். மரங்களை அழிப்பதால் மரங்களின் நிழலுக்காகவும், அதன் காய்கனி போன்றவற்றை உணவுக்காக சார்ந்திருக்கும் விலங்குகள், மரத்தை வாழிடங்களாக கொண்டு கூடுகட்டும் பறவைகள் எல்லாமே அழியும் பெரும் அபாயம் இருக்கிறது. உங்கள் தேவைகளுக்கு மட்டும் மரம் வெட்டுங்கள். ஆடம்பரத்துக்காக அல்ல. ஒரு மரம் வெட்டப்படும்போது மூன்று மரங்களாவது நடுங்கள். முடியாவிட்டால் ஒரு மரமாவது நடுங்கள்.

மரத்தை அழிப்பதால் மனித குலமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதை பல சுற்றுச் சூழல் அமைப்புகள் சொன்னாலும் , நமக்கென்ன .? என்று இருக்கும் நிலைதான் நம்மிடையே இருக்கிறது. வீடுகட்டுவதற்காகவும், வீட்டு தேவைகளுக்காகவும் மரங்களை அழித்து , மரம் மிகுந்த காடுகளை அழித்து ”மாதம் மும்மாரி” பெய்த வான் மழையை தடுத்தோம். அதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் அழிந்து வருகிறது. குடி நீர் தட்டுப்பாடு பெருகி வருகிறது. விலங்குகள் நீரின்றி அழிந்து வருகின்றன.

நகரங்கள் பெருக்கி கிராம எல்லைகளை சுருக்கி அழித்து வருகிறோம். வயல் வரப்போடு, பறவைகளும் உறுப்பினர்களாகி, எங்கள் கிராம பஞ்சாயத்து கூடும் பெரும் மரங்களை பார்த்து மகிழ்வதற்காக அவ்வப்போது மழை ”அத்தி பூத்தது போல்” வந்துபோகிறது. அதை எப்போது தடைசெய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. வரும் காலங்களில் கிராமங்களும் அழிந்துபோய் நகரமாகும். வளர்ச்சி என்பது இருக்கும். ஆனால் இயற்கையும், மனித குலமும், நல்ல தூய காற்றை சுவாசித்து நோய் நொடியின்றி இருக்குமா என்பது அச்சம் கலந்த கேள்விக்குறியாகவே இருக்கிறது.

”சொந்த செலவில் சூனியம் வைப்பது” என்பது மறைந்துபோய் இப்போது ”சொந்த செயலில் சூனியம் வைத்துக்கொண்டு, நமக்கு நாமே மரங்களை அழித்து ஓசோன் அரக்கனை அபாயக் கதிர்வீச்சால் நமக்குள் பரவச்செய்து புற்று நோய்களையும், மற்ற நோய்களையும் வாங்கிக்கொண்டு சாகிறோம்.இந்நிலை மறைய வேண்டும். மாற வேண்டும்.

.......... இதற்கான தீர்வு:
---------------------------------------
..............தேவைக்கு மட்டுமே மரங்களை வெட்டுங்கள். மரத்தாலேயே இழைத்து மாடமாளிகைகள் கட்ட வேண்டாம். ஒரு மரம் வெட்டினால் மூன்று மரங்களை நடுங்கள். கடைசிக்கு ஒரு மரமாவது வையுங்கள். இயற்கைத் தாய் குளிர்வாள். வேண்டும் வரங்களை வேண்டும் வரை தருவாள்

சுற்றுலா என்ற போர்வையில் மலைகளின் அழகை அழித்தல்
---------------------------------------------------------------------------------------------------------------
இயற்கையின் இன்னும் சில அங்கங்கள் வெள்ளிப் பனி மலைகள். மலர்கள் பல கொண்ட நீலவண்ண மலைகள். பச்சைமரங்கள் ஆடையாய் கொண்ட பசுமலைகள். ஆகாயத்தின் நீலவண்ணமும், பனியின் வெண்மையும், மென்மையும் கலந்த பனிமலைகள் மற்றும். பச்சையம் போர்த்த பசுமலைகள் இதுபோன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வது என்பது இப்போது ஒரு பொழுது போக்காகிவிட்டது. மனதுக்கு நிறைவையும், அமைதியையும் தரும் இதுபோன்ற இடங்களில் நாம் என்ன செய்துவருகிறோம். நெகிழி(பாலித்தீன்) பைகளில் உணவை எடுத்துச் சென்று உண்டுவிட்டு கும்மாளமிட்டு அவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறோம்.சுற்றுலா வரும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் நெகிழிப் பைகளை இங்கிருந்து அப்புறப் படுத்தி எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னால் ஓடிப்போயிடு பெரிசு , இது எங்களோடு ஜாலி டைம். முடிஞ்சா நீயே எடுத்துட்டு போ என்று என்னிடமே சொன்னதை நினைத்தால் இவர்களுக்கு இன்னும் இயற்கை குறித்த விழிப்புணர்ச்சி வரவில்லையோ என நெருடலாக இருக்கிறது.

மலையெங்கும் நெகிழிப் பைகளின் அலங்கோலம். இவைகளுக்குள் இருக்கும் சிறு உணவுப் பொருட்களுக்காக இந்தப் பைகளையே விழுங்கும் மலைவாழ் விலங்குகளின் நிலை என்ன ஆகும் என்பதை சிந்திப்பதே இல்லை.

பனிமலைகளில் இந்த நெகிழிப் பைகள் சூட்டை உயர்த்தும் ஆபத்தை விளைவிப்பவை. பனிமலை சுற்றுலா இடங்களில், இந்த நெகிழிப் பைகளின் அளவு பெருகும்போது அதன் வேதிவினையிலும், சூட்டை உருவாக்கும் நிலையிலும் பனிமலை உருகி பூமியை கபளீகரம் செய்து விடும் ஆபத்தை விளைவிப்பவை. இந்த நெகிழிப் பைகள்தான் இயற்கையின் கொடிய எதிரி. இதன் ஆபத்தை உணர்ந்த அரசாங்கம் இத்தகைய பைகளுக்கு தடைவிதித்திருக்கிறது.இப்போதைய இயற்கை ஆர்வலர்களும். தொண்டு நிறுவனங்களும் தன்னார்வ குழு அமைத்து மலையிலும் மற்ற இடங்களிலும் உள்ள நெகிழிப்பைகளை அகற்றி வருகிறார்கள்.

..........இதற்கான தீர்வு :
--------------------------------------
.......... நெகிழிப் பைகளை அறவே ஒழிப்போம். எளிதில் மட்கும் பொருட்களையே உபயோகிப்போம். சுற்றுலா செல்லும் இடங்களில் இருக்கும் இதுபோன்றவற்றை சேகரித்து எதற்கும் தீங்கு விளைவிக்காத முறையில் அதை அழிப்போம்.இயற்கையின் மகத்துவம் பற்றி மாணவர்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

முடிவுரை:
-------------------
இயற்கை நம் மனித குலத்துக்கு அனைத்து வகைகளிலும் உதவி வருகிறது. ஆனால் நம் மனித குலம் அதற்காக செய்ய வேண்டியவை பல உள்ளது. இந்த இயற்கையின் அழிவை தடுத்து நிறுத்த மனிதகுலம் இதுவரையில் சேகரித்து வைத்திருக்கும் ஆற்றல், தொழில் நுட்பம், அறிவாற்றல் இவையே போதுமானது. இந்த இயற்கைப் பிரச்சனைகளை சமாளிக்க மனிதர்களின் ஒத்துழைப்பை தீவிரப் படுத்த வேண்டும். குளம், குட்டை, ஆறு போன்ற நீர் நிலைகளை மாசில்லாமல் இருக்கச் செய்யவேண்டும். மேலும் நாமெல்லாம் பின்னுக்கு திரும்ப முடியாத மாறுதல்களின் அழிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்று புரியும்படி சொல்லி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இயற்கை குறித்த குறிக்கோள்கள், அதை காக்கும் வழிமுறைகள் இவற்றில் நாடு தழுவிய ஒற்றுமை வேண்டும். இந்த இயற்கை தாயின் உயிர் காக்க பூமியின் ஒவ்வொரு கண்டங்களுக்குள்ளும் ஒற்றுமை வேண்டும். நம் வருங்கால சந்ததிகளுக்கு நல்லதொரு இயற்கை அழகை ஏற்படுத்தி கொடுப்பதில் நமக்கும் பல பங்கு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு விரைந்து செயல்படவேண்டும். விவேகத்தோடும் செயல்படவேண்டும்.

இயற்கையைக் காப்போம்
இனியதோர் எதிர்காலம் படைப்போம்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (1-May-16, 10:20 am)
பார்வை : 48340

சிறந்த கட்டுரைகள்

மேலே