காலம் எனும் வேகம்
காலம் எனும் வேகம்
அசையாமல் நிற்பது போலத்தான், நம்மால் அறிய முடிகிறது, ஆனால் “அசுர வேகத்தில்” நம்மை கடந்தும், கடத்தியும் கொண்டு போய்க்கொண்டு தான் இருக்கிறது.
இது விடுகதை கேள்வியை போல தோன்றினாலும், உண்மையில் இதற்கான விடை “காலம்” என்னும் ஒற்றை சொல்தான்.
நாம் இருக்கும் இந்த ‘பூமி’ பிறக்கும் போது நமக்கு புதிதாக தோன்றி நாட்கள் செல்ல, அறிமுகமான ஒட்டி உறவாடக் கூடியதான சூழ்நிலைக்கு கொண்டு வந்து அதே பூமி நம்மை அதன் சூழலில் இருந்து ஒதுக்கி கடைசியில் நம்மை இதில் வாழ்ந்த சுவடு தெரியாமல் மறைய வைத்து விடுகிறது. அதைவிட மறைந்து போன பின்னும் நம்மை ஞாபகம் வைத்து கொண்டிருக்கும் ஒரு சில உறவுகளும் கூட இதே போல மறைந்த பின் நாம் இந்த பூமியில் வாழ்ந்திருந்தோமா? என்னும் நிலையில்தான் இருக்கும்.
வேடிக்கையாக கூட சொல்வார்கள், உனக்கு உங்கப்பா, உங்கம்மாவை தெரியும், அடுத்து அவர்களின் பெற்றோர்களை தெரியும், அடுத்து கொஞ்சம் முயற்சி செய்பவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கலாம், ஆனால் அவர்களோட பெற்றோர்கள்?
கண்டிப்பாய் வாய்ப்பே இல்லை, இதுதான் காலத்தின் வேலை என்பது.
ஆனால் இத்தனை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந் தாலும் நாம் மனதறிய இந்த வாழ்க்கை என்பது கடந்து போக கூடியது என்பதை பெரும்பாலானவர்கள் நம்ப மறுக்கிறோம். நமக்கு வரும் இன்பங்கள் துயரங்கள் எல்லாமே நிரந்தர்மோ, என்னும் எண்ணத்துக்குள் ஆழ்ந்து விடுகிறோம். இந்த பூமியில் அனுபவிக்கும் யாவையும் நமக்கு நிரந்தரமானது என்னும் எண்ணம் எப்படியோ மனதுக்குள் புகுந்து விடுகிறது.
அதே போலத்தான் நம்முடன் அறிமுகமானவரோ, உடன் பிறந்தவர் களோ, நம்மை விட்டு மறையும் போது நாமும் அடுத்து இதே நிலைதான் என்பதை உணர்வதற்கு முடிவதில்லை.
இது மனிதர்களின் குற்றமாக தெரியவில்லை. காரணம் இந்த பூமி நமக்கு அளிக்கும் பூரண நம்பிக்கை அப்படிப்பட்டது. அதிலும் மனித இனங்களுக்கு ஆறாவது அறிவு என்னும் ஒன்றை கொடுத்து உணர்தல், அறிதல், பகுத்தல், இப்படி பல வகை உணர்வுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது நம்மால் “நான் நிரந்தரமில்லாதவன்” என்னும் எண்ணம் எங்கனம் உருவாகும்?
நாம் பிறந்த பூமியை விட்டு பிழைப்புக்காகவோ, வாழ்வுக்காகவோ வேறு எங்கோ சென்று விட்டு மீண்டும் நாம் பிறந்த மண்ணை நோக்கி வரும்போது நம்மில் தோன்றும் உணர்வுகள் அற்புதமானவை அல்லவா?
எல்லாமே புதிதாக பார்ப்பது போல், அதே போல் நாம் சிறுவயதில் அன்று அனுபவித்த ஒரு சில பழைய நினைவுகள் நம் மனதுக்குள் நிழலாட நம்மை ‘உணர்ச்சி குவியலில்’ திக்கு முக்காட வைக்கிறது.
ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? நாம் பிறந்த இடம், மண் எப்பொழுதும், தங்களை மாற்றி கொள்வதில்லை. மனித உணர்வுகளை கொண்ட நாம் தான் நம்முடைய எண்ணங்களில் எங்கு போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அந்த சூழ்நிலைக்குள் பதிந்து கொள்கிறோம். மீண்டும் நாம் பிறந்த இடத்துக்குள் நுழையும் போது பதிந்து போன அந்த சூழ்நிலைகள் தெளிவடைந்து பழைய பதிந்து போன ‘பால்யகால’ நினைவுகளாக நம் எண்ணத்துக்குள் புகுந்து நம்மை உணர்ச்சி குவியலாக்குகின்றன.
இயற்கை எப்பொழுது நம்மை விட்டு பிரிந்து விட்டதற்காக வருத்தப்படவோ அல்லது மீண்டும் அங்கு வந்து விட்டால் மகிழ்ச்சி கொள்வதோ இல்லை. அது வழக்கம் போல இரவு பகல், வெயில், மழை என்று மாறி மாறி வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இதில் மனித வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளும் இடமும், வசதி வாய்ப்புகளும் நம்மை பிறந்த இடத்தில் சற்று வேறுபாடாய் மற்றவர்களுக்கு காட்டுகிறது. அவ்வளவுதான்.
இப்படியும் கூட எடுத்து கொள்ளலாம், “காலம்” என்பது எதற்கும் கட்டுபடாதது. காரணம் பூமி முதற்கொண்டு எங்கெங்கு இனங்கள், அது எந்த வகை உயிரினங்களாக இருந்தாலும், வாழ்ந்து கொண்டிருக்கும் கோள்கள் அது பூமியை போலவே இருந்தாலும் அனைத்துமே காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் சூரியனை சுற்றியபடி சுழன்று கொண்டிருக்கின்றன.
இன்று குழந்தையாய் பிறந்தால் வருடங்கள் செல்ல செல்ல நாம் வயதாகி மறைந்து போகத்தான் வேண்டும். இது காலத்தின் கணக்கு. அது எந்த உயிரினமாக இருந்தாலும் சரிதான்.
இந்த கருத்து அல்லது கட்டுரை மனித வாழ்க்கையை பற்றிய சோர்வை தரலாம். எதுவுமே நிரந்தரமில்லை எனும்போது வாழ்க்கை என்பது ஏது? என்று. ஆனல் காலம் அதற்கும் வழிமுறைகளை செய்து விட்டுத்தான் சென்று கொண்டிருக்கிறது. மனிதர்களோ அல்லது எத்தகைய உயிர்களோ அவற்றின் மூலக்கூறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி கொண்டுதான் இருக்கிறது.
அடுத்து அனுபவங்களை ஒருத்தர் மற்றவர்களுக்கு கடத்தியபடியேதான் வாழ்ந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாங்கள் இந்த பூமியில் வாழ்ந்து மறைந்து போவிவிட்டாலும் தொடர்ந்து வரும் மனித உறவுகளுக்கு அறிமுகப்படுத்தி கொள்ள தங்களது படைப்புக்களை அளித்து விட்டும் செல்கிறார்கள். இத்தகைய படைப்புக்கள் அவர்களுக்கு பின்பும் அவர்களை பற்றிய உணர்களை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எடுத்து காட்டியபடி காலத்தோடு நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதனால் மனித வாழ்க்கை நிரந்தரமில்லை என்பது எந்த அளவுக்கு அறிவியல் பூர்வமான உண்மையோ அதை விட அவர்கள் வாழ்ந்த போது சாதிக்கும் அல்லது படைக்கும் எல்லா அதிசயங்களும் வரும் தலைமுறை கால மனிதர்களோடு வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உங்களை நினைவுபடுத்தி கொண்டுதான் இருக்கும்.
காலம் வேகமாக ஓடினாலும் நாம் அதனுடனே ஓடி சட்டென ஒரு இடத்தில் நம்முடைய பதிவை அல்லது படைப்பை படைத்து விட்டு அதன் பின் நகர்ந்து போகலாமே..!