நல்ல வெளிப்படுத்தித் தீய மறந்தொழிந்து - சிறுபஞ்ச மூலம் 56
நேரிசை வெண்பா
நல்ல வெளிப்படுத்தித் தீய மறந்தொழிந்(து)
ஒல்லை யுயிர்க்கூற்றங் கோலாகி - ஒல்லுமெனின்
மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தான்
ஆயி னழிதல் அறிவு! 56
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
ஒருவன் (பிறர் தனக்குச் செய்த) நல்லவற்றைப் பலர்க்கும் வெளியிட்டுச் சொல்லி தீயவற்றை நினையாது அவற்றின் எண்ணத்தை விட்டு நீங்கி தன்னால் இயலுமே யானால் இடையூற்றுக் குட்பட்ட பிற உயிர்கட்கு விரைவில் ஊன்றுகோல் போல் நின்றுதவி பிறர்க்குரிய பொருளில் வஞ்சனைச் செயலை நீக்குக; மானமுடையான் ஆனால் குற்றம் வந்த விடத்து உயிர்விடுதலே அறிவுடைமையாம்!
கருத்துரை:
நல்லன வெளிப்படுத்தல் முதலியவற்றை ஒருவன் செய்யக்கடவன்; மறந்து என்னாது ‘மறந்தொழிந்து’ என்றமையால் மனத்து நினைத்தலுமாகாது என்றதாயிற்று!

