மாயமான மனிதர்கள்
சித்திரை மாதம்,
சுட்டெறிக்கும் வெயில்,
வெளியில் எவர் வந்தாலும்,
காவு வாங்க காத்திருக்கும் கத்திரி வெயில்.
செதில் செதிலாய் சென்னையை
சூறையாடிக் கொண்டிருக்கும் சமயம்,
சுப்பையா சந்து வீட்டினுள்
சதா முனகிக் கொண்டிருந்தார்.
அவருக்கு வெளியே வந்து
நடக்க வேண்டும்.
மனிதர்களை பார்க்கவேண்டும்
என்று துடிப்பு.
விடிஞ்சா போதுமே,
வாயில வாத்தியம் இல்லாமலே
வாசிக்க ஆரம்பிச்சிடுவையே?
என்று கடிந்து கொண்டேன் பேரன்.
சுமார் இரண்டு வருடங்கள் படுத்த
படுக்கையாய் இருந்து கொஞ்சம்
கொஞ்சமாய் தேறி வருகிறார்.
வயசான மனசு ஏனோ
மனுசங்கள தேடுதடா பேராண்டி...
இன்னைக்கு மட்டும் ஒரே ஒரு
தரம் வெளியே போயிட்டு வரவா?
ஏக்கத்தோடு பேரனின் பதிலை நோக்கி
பச்சைக் குழந்தைபோல் பொக்கைவாய்
திறந்தபடி பார்த்தார்.
சொன்னா கேட்கவா போற?
போய்த் தொலை;
ஆனா ரொம்ப நேரம்
சுத்தாம சுருக்க வந்து சேர்ந்திடுன்னு
சொல்லி அனுபிச்சான் பேரன்.
போஸ்ட்மேனாய் இருந்து,
ஒய்வு பெற்று, தன் பேரன்
இருக்கு ஒண்டிக் குடியிருப்பில்
காலத்தை கடத்தி வருகிறார் சுப்பையா.
மணி மதியம் 12:30;
முழுக்கை சட்டையும்,
முக்கால் நீட்டம் வேட்டியும்,
கழுத்தில் கதர் துண்டும்,
மங்கிப்போன சோடா புட்டி கண்ணாடியும்,
தேய்ந்து போன டயர் செருப்பும்,
கிழிந்த கருப்பு குடையும்,
பையில் இருவது ரூவாயும்,
எடுத்தபடி படி தாண்டினார்.
குடை விரித்து,
வீடு தாண்டி,
வீதி வந்தடைந்தார்.
இடப்பக்கத் தெருவா ? வலப்பக்கத் தெருவா?
எங்கு செல்வது...?
குழம்பித் தெளிய நேரமின்றி
இடப்பக்கம் செல்லத் தொடங்கினார்....
நடக்கிறார், நடக்கிறார்....
தெருவில் ஒரு ஜன நடமாட்டமும் இல்லை...!
இன்று சனிகிழமை தானே?
விடுப்பில் மக்கள் வெளியே வரவேண்டுமே..?
எங்கு இருக்கிறார்கள்?
அங்கும் இங்கும், கார்களும்
பைக்களும் விர் விர்ரென்று ஓடுகிறது...
சரி, வாகனத்தில் ஓடும் மனிதர்களை
நின்று பார்ப்போமே என்று,
மரத்தடியை தேடுகிறார்....
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
ஒரு மரம் கூட தென்படவில்லை...!
வெறுத்துபோய் மேலும்
நடக்கிறார், நடக்கிறார்....
ஒரு பஸ் நிறுத்தம்,
அதுவும் நிழற் குடையோடு...!
அங்கு நால்வர் நிற்கின்றனர்...
இருவர், காதில் ஏதோ மாட்டியபடி,
தலையசைத்த படி இருந்தனர்...
மற்றிருவர் கைபேசியில் பேசிக்
கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பேசலாம் என்று
எண்ணி அருகில் இருந்து
இருக்கையில் அமர்ந்தார் சுப்பையா.
இருபது நிமிடமாகியும் யாரும்
யாருடனும் பேசிக்கொள்ளவே இல்லை.
ஏமாந்த படி, இடத்தை காலி செய்து
நடக்கிறார்.
வெகு தூரம் நடந்தபின்,
ஒரு சிறிய மரம்,
அதன் நிழலில்,
கைபேசியின்றி ஒரு பெண்.
அய்யாவிற்க்கு சந்தோஷம்,
பேச ஒருவர் நிற்கிறார்...
பேசிவிட வேண்டும் என்று..
வேக வேகமாய் அருகில் சென்று,
அம்மா என்றார்.
சிரித்த முகத்தோடு
திரும்பியவள்,
பையில் ஏதோ தேடிவிட்டு..
மன்னிச்சிருங்க அய்யா,
சில்லறை இல்ல...கிளம்புங்க என்றாள்.
கொஞ்சம் அசிங்கமாய் படவே,
தலை குனிந்து நடக்கலானார்.
பெரியவர்கள் இப்படி நடந்து கொண்டது,
சுப்பையாவிற்கு ஏமாற்றமாய் போகவே,
குழந்தைகளை காணலாம் என்று
முடிவெடுத்தார்...
ஏதோ ஒரு பணக்காரத் தெரு
தென்பட்டது.
வெறிச்சோடி கிடந்தது தெரு,
ஒரு ஈ, காக்கா கூட இல்லை.
ஆனால் குழந்தைகள் சத்தம்,
கனீர் என்று கேட்கிறது...
சாலையின் இரு புறமும்,
விலையுயர்ந்த அடுக்கங்கள்.
ஒரு அடுக்ககம் அடைந்து,
கேட் அருகில் நின்று பார்த்தால்...
குழந்தைகளோ, குழந்தைகள்.
ஏதோ மிருகக் காட்சி சாலையில்
அடைபட்டிருக்கும் மிருகங்களாய்
பட்டனர் குழந்தைகள்.
ஆனாலும் அய்யாவிற்கு பார்க்க
பரவசமாய் இருந்தது...
மெய்மறந்து விட்டார்.
திடீரென்று, யாரோ,
கையை உலுக்குவது அறிந்து
திடுக்கிட்டு விழித்தார்.
ஒரு சிறுவன்..
தாத்தா! தாத்தா!! என்றான்...
என்னப்பா? என்றார் சுப்பையா.
நீங்க எந்த பில்டிங்
வாட்ச் மேன், தாத்தா?
என்றான்.
வாட்ச் மேனா???