ஆழி நிறத்தானே

ஆழி நிறத்தானே
மேழி கொண்டென் மனதை உழுதாயோ.....
பண்பட்ட பின்னதில் நீயே நல்வித்தானாயோ.....
பாங்கான அறுவடையாம் பக்தி அளித்தாயோ.....
முக்தி எனும் நிலையெய்தவே அருள்வாய்
திருமாலே..........
எம் பெருமாளே.

அயனுக்கும் அரனுக்கும் இடையோனே
அரியெனும் நாமம் கொண்டோனே

காப்புக்குமோர் காப்பாய்த் திகழ்வோனே
என்னை மலையெனவேநீ காத்தருள்வாய்

அமுதுக்குமோர் அச்சாய் இருந்தோனேயென்
அல்லல் போக்கிநீ காப்பாயோ

பாம்பணை கொண்டருளும் பரந்தாமனேயென்
பாவங்கள் போக்கிநீ காப்பாயோ

வறியார்க்கும் இரந்தார்க்கும் தந்தருள
வரமொன்று நீயும் தந்தருள்வாய்

சாரங்கம் கொண்டெய்து என்மனதில்நற்
சாளரம் ஒன்றுநீ திறப்பாயோ

சுதர்சனம் கொண்டென் பற்றருத்து
நானுனை உய்யும்வழிநீ தருவாயோ

பாற்கடல் மேற்பள்ளி கொள்வோனேயென்
வாழ்கடல் கடைத்தேறவழி சொல்வாயோ

பாஞ்ச சன்யம்போல் நின்றதிர்ந்து
பாரெங்குமுன் நாமம் ஒலிக்கக்கண்டேன்

நாராயணாய எனுமுன் நாமத்தில்
நாளும் நர்த்தனமாடுது என்மனமும்

நாராயண அரி நாராயணா !
நாராயண அரி நாராயணா !
நாராயணா நமோ நாராயணா !
நாராயணா நமோ நாராயணா !
ஓம் நமோ நாராயணாய..........

- செ.கிரி பாரதி.

விளக்கம் :
1. ஆழி - கடல்.
2. மேழி - ஏர் / கலப்பை.
3. நல்வித்து - நல்ல விதை.
4. அயன் - பிரம்மன் (படைத்தல் தொழில்).
5. அரி - திருமால் (காத்தல் தொழில்).
6. அரன் - சிவன் (அழித்தல் தொழில்).
7. அமுதுக்குமோர் அச்சாய் - அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்து வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைக் கடைகையில் மேரு மலைக்கு அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு(கூர்ம அவதாரம்) எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார் .
8. அல்லல் - துன்பம்.
9. பாம்பணை - ஆதிசேடன் எனும் பாம்பை படுக்கையாகக்
கொண்டவர் திருமால்.
10. வறியார் - ஏழை.
11. இரந்தார் - வாழ்வை நடத்த வழியின்றிக்
கையேந்துவோர்.
12. சாரங்கம் - திருமால் கையில் இருக்கும் வில்.
13. சுதர்சனம் - திருமால் கையில் இருக்கும் சக்கரம்.
14. பற்று - விருப்பம்.
15. உய்யும் - அடையும்.
16. பாஞ்ச சன்யம் - திருமால் கையில் இருக்கும் சங்கு.

பிழையேதும் இருப்பின் பொருத்தருள்ந்து திருத்திக்கொள்ள உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்..........

எழுதியவர் : செ.கிரி பாரதி (13-May-16, 4:33 pm)
பார்வை : 194

மேலே