ஒரு நிமிடக்கதை - நல்ல விஷயங்களை பின்பற்றவும் வேண்டும்

ஒருநாள், ஒரு காட்டிற்கு வேடன் ஒருவன் வந்தான். காட்டின் உட்பகுதிக்குச் சென்ற அவன், ஒரு மரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள் இருந்ததைக் கண்டான். அநேக பச்சைக்கிளிகளை மரத்தில் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் மரத்தினடியில் வலை விரித்து, அதில் தானியங்களைத் தூவினான். பின்னர் அங்கிருந்து ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைந்து நின்றுகொண்டான். சிறிது நேரத்தில், அவன் எதிர்பார்த்த படியே பச்சைக்கிளிகள் பறந்து வந்து வலையில் சிக்கிக்கொண்டன.

வேடன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, வலையில் சிக்கிய பறவைகளைப் பிடிக்கச் சென்றான். அப்போது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். வலையில் சிக்கியிருந்த கிளிகளைப் பார்த்ததும், முனிவரின் மனதில் கருணை உண்டாயிற்று. கிளிகளைப் பிடிக்கும் நிலையில் இருந்த வேடனைப் பார்த்து அவர், வேடனே ! இந்தக் கிளிகளைக் கொல்லாதே என்று கூறினார்.

முனிவரின் வேண்டுகோளுக்கு வேடன் உடன்படவில்லை. அவன் முனிவரிடம், சுவாமி ! எனக்கு இந்தக் கிளிகள்தான் இன்றைய உணவு. எனவே, இவைகளைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கிளிகளுக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று உணவு நீங்கள் எனக்குத் தருவதாக இருந்தால், இந்தக் கிளிகளை நான் கொல்லாமல் விட்டு விடுகிறேன். என்று கூறினான்.

முனிவர், என்னிடம் சிறிது உணவு இருக்கிறது. அதை நான் உனக்குத் தருகிறேன். இந்தக் கிளிகளை விட்டுவிடு. என்று கேட்டுக் கொண்டார். அதற்கு வேடனும் சம்மதித்தான். தான் கூறியபடியே முனிவர் தன்னிடமிருந்த உணவை வேடனுக்குக் கொடுத்தார். வேடன், முனிவர் தந்த உணவைப் பெற்றுக் கொண்டான். பிறகு அவன் வலையில் சிக்கியிருந்த கிளிகளை விடுவித்தான். அப்போது முனிவர், கிளிகளைப் பார்த்து, கிளிகளே ! இவன் வேடன். வேடன் வருவான். வலை விரிப்பான். அதில் தானியங்களைத் தூவுவான். நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று கூறினார். இவ்விதம் கூறிய பின்பு முனிவர் தன்வழியே சென்றார்.

ஒருவாரம் கடந்தது. வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் வலையுடன் அதே மரத்தின் அருகில் வந்தான். வேடனைக் கிளிகள் பார்த்தன. அவனைப் பார்த்ததும் எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, கிளிகளே ! இவன் வேடன், வேடன் வருவான், வலை விரிப்பான், அதில் தானியங்களைத் தூவுவான், நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரித்த வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று கூறின. கிளிகள் கூறியதைக் கேட்ட வேடன், இந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் மறக்கவில்லை ! இங்கு நான் வலை விரித்தாலும், இந்தக் கிளிகள் என் வலையில் வந்து சிக்காது.

எனவே இங்கு வலை விரிப்பதால் பயனில்லை ! என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். ஆதலால் அங்கு வலை விரிக்காமல், வேறு இடம் தேடிச் சென்றான். ஒரு மாதம் கடந்தது, மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தின் அருகில் வேடன் வலையுடன் வந்தான். இப்போதும் வேடனை கிளிகள் பார்த்தன. உடனே அவை வேடனை நோக்கி, கிளிகளே ! இவன் வேடன். வேடன் வருவான். வலை விரிப்பான். அதில் தானியங்களைத் தூவுவான். மரத்திலிருந்து பறந்து வந்து, வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள், என்று ஒரே குரலில் கூறின. வேடன், முன்பு நடந்ததை இந்தக் கிளிகள் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றனவே ! இவைகள் என்வலையில் வந்து விழாது. எனவே இங்கு நான் வந்து பயனில்லை என்று நினைத்து, வலை விரிப்பதற்கு வேறு இடம் தேடிச் சென்றான். அதன்பிறகு சுமார் ஆறு மாதங்கள் கழிந்தன.

வேடன் மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தினடியில் வலை விரிக்க வந்தான். அவனைப் பார்த்ததோ இல்லையோ, உடனே எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, கிளிகளே ! இவன் வேடன். வேடன் வருவான். வலை விரிப்பான். அதில் தானியங்களைத் தூவுவான். நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரித்த வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் ! என்று ஒரே குரலில் கூறின.

வேடன், இது என்ன ஆச்சரியம் ! இன்னும் இந்தக் கிளிகள் என்னை நினைவில் வைத்திருக்கின்றன ! இவை என் வலையில் விழாது ! என்று நினைத்தான். என்றாலும் அவன், நான் இன்றைய தினம் எங்கெங்கோ அலைந்தும், எனக்கு வேட்டையாடுவதற்கு எந்த மிருகமோ பறவையோ கிடைக்கவில்லை. இங்கு இந்தக் கிளிகளும் என்னை மறக்கவில்லை. நானோ இப்போது காட்டில் சுற்றி அலைந்து மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். சரி ! இந்தக் கிளிகள் என் வலையில் சிக்காமல் போனாலும் பரவாயில்லை. வேறு ஏதேனும் பறவைகள் இந்த வலையில் வந்து சிக்கலாம் என்று நினைத்து, வலையை விரித்து அதில் தானியங்களைத் தூவினான்.

இப்படி வேடன் செய்ததை அங்கிருந்த கிளிகளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன. வேடன் தானியம் தூவி முடிந்ததும் கிளிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து, கிளிகளே ! இவன் வேடன். வேடன் வருவான். வலை விரிப்பான். அதில் தானியங்களைத் தூவுவான். நீங்கள் மரத்திலிருந்து கீழே பறந்து வந்து, வேடன் விரித்த வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று கூறிய படியே அத்தனை கிளிகளும் பறந்து வந்து வேடனின் வலையில் சிக்கிக்கொண்டன !

அப்போதுதான் வேடனுக்கு, இவை சொன்னதைச் சொல்லும் பச்சைக் கிளிகள். முனிவர் சொன்னதைச் அப்படியே இவை சொல்கின்றன. ஆனால் அந்தச் சொற்களுக்கு என்ன அர்த்தம் என்று இந்தக் கிளிகள் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் அனைத்து கிளிகளும் இப்போது என் வலையில் வந்து விழுந்திருக்கின்றன என்பது புரிந்தது. பிறகு அவன் வலையில் சிக்கிய கிளிகள் அனைத்தையும் பிடித்து சென்றான் .

அன்பு நண்பர்களே ..

இந்தக் கதையில் சொல்லப்பட்ட கிளிகளைப் போன்றுதான் மக்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல விஷயங்களை நிறைய கேட்கவும், படிக்கவும் செய்கிறார்கள்.

ஆனால்,அவர்கள் அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை. நாம் நல்ல விஷயங்கள் பலவற்றை அதிகமாகக் கேட்கவும் படிக்கவும் வேண்டும்.
அவற்றை,
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
என்று திருவள்ளுவர் கூறியபடி. நாம் நம் வாழ்க்கையில் பின் பற்றவும் வேண்டும்.

எழுதியவர் : செல்வமணி (13-May-16, 11:37 pm)
பார்வை : 329

மேலே