கார்மேகம்
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
*கார்மேகம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
கனிஷ்கர்
யானை படையைப் போல்
நீ திரண்டு வந்தாலும்
நாங்கள்
பயப்பட மாட்டோம் ....
ஏனென்றால் ?
உன் மனம்
கனிஷ்கர் மனம்போல்
இளகியது என்பதை
நாங்கள்
நன்கு அறிவோம் ....!
எங்கள் மீது
போர் தொடுக்க
வந்து விட்டு
ஏன் ?
இன்னும்
மௌனமாக இருக்கிறாய்...
உனக்கும்
நல்ல நேரம் பார்க்கும்
பழக்கம் இருக்கிறதோ ?
மழைத்துளி அம்புகளை
எங்கள் மீது பொலி....
எங்கள் கவலைகள்
கண்ணீர் கொட்டி
துடி துடித்து
இறக்கட்டும் .....!!!
நீ வந்து தாகம்
தீர்ப்பாய் என்று
ஆறு ஏரி
குளம் குட்டை
கிணறுகள்
வாயை திறந்து
வைத்திருக்கிறது.
தனது தொண்டையை
நனைத்துக் கொள்ள
ஏமாற்றி விடாதே......!
பட்டினியால் வாடியிருக்கும்
செடி குழந்தைகள்
மலர் பாத்திரத்தை
ஏந்தி கொண்டு இருக்கிறது....
உன் தானத்திற்காக
ஏமாற்றி விடாதே.... !
பள்ளிக்கூடம்
டியூசன் சென்டர்
வீட்டுப்பாடம் என்று
செக்குமாடாய்
சலித்துப்போன
குழந்தைகள்
தங்கள் மன அழுத்தத்தை
கப்பலேற்றி
அனுப்பி வைத்திட
கையில்
காகிதக் கப்பலோடு
காத்திருக்கிறார்கள்
உன் வருகைக்காக
ஏமாற்றி விடாதே...!
குற்றுயீராக இருக்கும்
மரங்கள் நீ கொடுக்கும்
குருதியைப் பெற்று
எழுச்சி பெற
வேர்களைத் தயார்படுத்தி
வைத்திருக்கிறது
ஏமாற்றி விடாதே.....!
வயது
வித்தியாசம் இல்லாமல்
உன்னோடு
விளையாட
பலர் காத்திருக்கின்றனர்
அவர்கள் ஆசையை
மண் தூவி விடாதே....!
பாத வெடிப்பு கொண்ட
கால்களை போல்
வெப்ப வெடிப்பில்
வீழ்ந்து கிடக்கும்
நிலங்கள்
தாய்ப்பால் பட்டு
உதடுகளை
ஈரப்படுத்திக் கொள்ள
இருக்கும்
குழந்தையைப் போல்
உன் வருகைக்காக
தவியாய் தவித்திருக்கிறது
தயவு செய்து வந்து விடு.....!
ஏய் கார்மேகமே !!
விழுவது கேவலம் என்று
நினைக்கிறாயா ?
உன் முன்னோர்கள்
கீழே விழுந்ததால் தான்
நீ வானுயரத்தில்
எழுந்திருக்கிறாய் என்பதை
மறந்து விடாதே...!
விதையின் வீழ்ச்சி தான்
விருட்சமாகிறது....
மழலைகள் விழுவதால்தான்
மானுடத்தை பெருக்கியது....
ஒளியின் விழுதல் தான்
உலகத்தை
வெளிச்சமாக்கியது.....
கனியின் விழுதல் தான்
புவியீர்ப்பு விசையை
கண்டுபிடித்தது......
மரத்தின்
நிழல் விழாமல் போனால்
எங்கே ஓய்வெடுப்பது.....?
கண்ணீர்
விழாமல் போனால்
எங்கே
கவலைகள் தீர்ப்பது......?
விழுந்து விழுந்து
எழுவதில் தான்
ஆனந்தம் உண்டு என்று
அலையைப் பார்த்து
தெரிந்து கொள்.....
விழுந்தாலும்
எப்படி எழுவது என்று
அருவியிடம் கற்றுக்கொள்....
அது என்ன ?
மெல்ல மெல்ல
அடி எடுத்து வருகிறாய்.....
ஓடி வா எங்களை
அணைத்துக்கொள்ள
ஒரு அன்னையைப் போல்....!
*கவிதை ரசிகனன*
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️