கிராமிய இசை - மரபுக் கவிதை அமைப்பில்

கலி விருத்தம்

மண்ணோடும் மண்ணின் சிநேக மணத்தோடும்
விதையோடும் விதையின் விந்தைத் துளிர்ப்போடும்
இழையோடி விளையாடும் எங்கள் இன்னிசையே
வழங்குமெங்கள் மூத்தயிசை கிராமியத் தேனிசையே!

பல விகற்ப இன்னிசை வெண்பா

மண்ணோடும் மண்ணின் சிநேக மணமும்,
விதையோடும் அவ்விதையின் விந்தைத் துளிர்ப்பாய்
இழையோ டிவிளையாடும் இன்னிசையே எங்கள்
விழும மிகுதே னிசை!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வண்டி யோடும் தாளத்திலும்
..காளைகளின் கொம்புமணி ஓசையிலும்
லாடக் குளம்பின் லயத்தினிலும்
..பால்வேண்டும் கன்றின்நா அசைவிலும்
பிறந்து வரும்இசை விழுமிய
..எங்களது கிராமியத் தேனிசை!!
உறவுக்கு உத்தாரமாய் ஓங்கியே
..உற்சாகம் அளிக்கும் தேனிசை! 1

அசைஇல்லை ஆனாலும் நாஅசையும்
..அசைவில் குலவைச் சத்தம்
இசையிருக்கும்! சீரில்லை எங்கள்
..வாழ்க்கை ஆனாலும் சீரிருக்கும்!
பாசம், குணம்,நேசம் வேசமில்லா
..சீர்வரிசை ஆனாலும் தளைஇருக்கும்!
பசியும் இருந்தும் பசிஅறியா
..ஏழ்மைத் தளைஎங்க ளிடமிருக்கும்! 2

தரவு கொச்சகக் கலிப்பா

எழுத்தறியா எங்களுக்கு இலக்கணங்கள் ஏதுமில்லை
பொருளறியா எங்களுக்கு இலக்குகளும் ஏதுமில்லை
சேற்றோடு உழன்றாலும் இலக்கியங்கள் எடுத்தாளும்
இலக்குள்ள இனியயிசை கிராமியத்தின் தேனிசையே!

இரு விகற்ப நேரிசை வெண்பா

நாகரிகம் நித்தம் பெருகிவந்து நெஞ்சினில்
யோகமென இன்னிசைகள் பற்பல – வாக
மலர்ந்தாலும் கண்ணயரும் உன்மழலை கேட்கும்
புலர்ந்தாலே ஆதி இசை!

கலி விருத்தம்

நாகரிகம் நித்தம் பெருகிவந்து நெஞ்சினில்
யோகமென இன்னிசைகள் பற்பல வாக
மலர்ந்தாலும் கண்ணயரும் உன்மழலை கேட்கும்
புலர்ந்தாலே ஆதியிசை கிராமியத் தேனிசையே!

ஆதாரம்:

க.அர.இராசேந்திரன் அவர்கள் ’கிராமிய இசை’ என்ற தலைப்பில் எழுதியிருந்த புதுக் கவிதையின் கருத்தை மரபுக் கவிதையாக மாற்ற முயற்சித்ததன் விளைவு கலிவிருத்தம் 2, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 2, பல விகற்ப இன்னிசை வெண்பா 1, இரு விகற்ப நேரிசை வெண்பா 1, தரவு கொச்சகக் கலிப்பா 1 என 7 பாடல்களாக அமைந்துள்ளன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-16, 10:34 am)
பார்வை : 218

மேலே