இது காதல்

தமிழும் எனக்குள்.
தமிழ் இலக்கணமும் எனக்குள்.
உன் வரவில் எனக்குள்
தனிமையில்லை

”உம்” என்று நான்
சொல்வதைக் கேட்கையில்
புரிகிறது
”இடைச்சொல்” அது என்று.

பெயரைக்கொண்டு
முடிவது ”பெயரெச்சமோ..?
எனக்குத் தெரிந்து
உன் பெயரை
எச்சமென்று எவர் சொன்னாலும்
நச்சென்று நரம்பெடுப்பேன்

செயலைச் சொல்லி.
காலம் காட்டுமாம்
ஆனாலும்
முற்றுப் பெறாதது
”வினைச் சொல்லாம்”
சிரிப்பு வருகிறது எனக்கு
வினையும் நீதான்...
வினைச் சொல்லும் நீதான்
என் இதயமிருக்கும் வரை
எப்படி நீ முற்றுப் பெறுவாய்...?

காதலின் பதிலுக்கு
கையறு நிலையாய்
நூலக வழியில்
பார்த்துக் காத்திருக்க
பாரா முகத்துடன்
எட்டிச் செல்கிறாயென்று
இரணவேதனை நரம்பில்
மெதுவாய் ஏற
உன்னதக் காதல் முடிந்தே
போனதென்று
எனது
இதயப்பிடில்
முகாரி வாசிக்கத் தயாரானபோது
சற்றும் எதிர்பார்க்காமல்
எட்டடி தள்ளிச்சென்று
குளிர்தென்றலாய்
ஓர விழிப்பார்வைச் சிரிப்பில்
சம்மதப் பதிலை
தூதுவீசிச் சென்றாய்.

அந்த எட்டடியில்
இறங்கிப் போனதடி எனக்குள்
ஒட்டுமொத்த
”எட்டுத்தொகை” நூல்களும்...

ஒன்று மட்டும் புரிகிறது
இப்போதெல்லாம்
இலக்கணத்துக்கு
மாறிவிட்டேன்..
இல்லையில்லை
உன்னால் மாற்றப்பட்டு விட்டேன்
காரணம்...
விழிகளில் நீ
சம்மதம் சொன்னபோது
ஆச்சரியம் தாங்காமல்
வழக்கமாய்
கிராமத்தான் நான் பாடும்
”தெம்மாங்கு” வரவில்லை எனக்குள்.
..
முத்துப் பல் சிரிப்போடு
சம்மதம் சொன்ன
அந்தப் பத்து நொடிக்குள்
பிறந்தது ”பத்துப் பாடல்கள்”
நறுந்தமிழின் சிறப்போடு...

முதன்முதலாய்
காதல் சம்மதத்தில்
எனைக் கடந்து
நீ எட்டி வைத்த நாலடியில்
நாலடியார் முதற்கொண்டு
நீ எட்டப்போய் நின்றபோது
”கைந்நிலை” ”கையறு நிலையாய்”
நான் படித்தது ”பதினென்கீழ் கணக்கு”

இனியென்ன
நீதான் என் தமிழ்
இனி
இலக்கணமே நமது எல்லை.

ஒன்றுக்கொன்று
உரிமை கொண்டு
இணைந்திருக்கும்
”உரிச்சொல்லாய்”
நாமிருப்போம்.

நெருங்கி வா
”எட்டுத்தொகை” முதல்
எட்டா தொகைகளும்
நமக்குள் வசமாகட்டும்.
என் இதயம் எப்போதும்
உன் வாசமாகட்டும்...

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (17-May-16, 8:39 am)
Tanglish : ithu kaadhal
பார்வை : 332

சிறந்த கவிதைகள்

மேலே