திருக்குறளும் திருமந்திரமும்-3
1908 ஆம் ஆண்டில் பிறந்த திரு. வேணுகோபால் சர்மா என்பவர் பல மொழிகளின் தேர்ந்தவர் ஆயினும், தமிழில் சிறப்புப் புலமை பெற்று, திருக்குறளை நன்கு படித்து வைத்ததுடன், படம் வரைதல், பலகுரலில் பேசுதல் ஆகிய பலதிறம் படைத்தவராகத் திகழ்ந்தார். தனது 22 ஆம் வயதில் திருவள்ளுவர் எனும் தமிழ் புலவரை படமாக வரைய விரும்பினார்.அதுவே அவரது வாழ்க்கையின் இலட்சியமாக அமைந்தது. கி.பி. 1950 ஆம் ஆண்டில் திருவள்ளுவரின் பென்சில் வரைபடத்தை அவர் முடித்து விட்டார். 1957 ஆம் ஆண்டில், திரு. சி.என் அண்ணாதுரை அவர்கள், அப்போது தமிழக முதல்வராய் இருந்த திரு. பக்தவச்சலம் அவர்களிடம் பரிந்துரைத்து திரு சர்மாவினானால் வண்ணம் தீட்டப்பட்டு 1957 ஆம் ஆண்டில் அலுவலக ரீதியில் திருவள்ளுவரின் படம் என அறிவிக்கச் செய்தார். அதற்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்திய தபால் துறை இந்த படத்தை தபால் வில்லையில் பதிப்பித்து தமிழுக்கும், குறளுக்கும் பெருமை சேர்த்தது.
திரு. சி.என். அண்ணாதுரை அவர்கள் 1967 இல் தமிழக முதல்வர் ஆனவுடன், அரசின் அனைத்து துறைகளிலும் திருவள்ளுவரின் இந்தப் படம் அலுவலகங்களின் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார். தமிழக அரசின், போக்குவரத்து துறையைச் சேர்ந்த அனைத்து பேருந்துகளிலும் திருக்குறளும், திருவள்ளுவரின் படமும் வைக்கப்பட்டு, பயணம் செய்வோரின் சிந்தனையை தூண்டவும், வழி நடக்கவும் ஏதுவாக வைக்கப்பட்டு உள்ளது. அத்தோடு, மயிலையில், அவர் வாழ்ந்த இல்லத்தில் 400 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்ட ஒரு கோயிலும், அதில் வள்ளுவரை சிறுதெய்வமாக இன்றளவும் வழிபட்டு வருவதும் காணலாம்.
வள்ளுவர் கோட்டம் என ஒரு பெரும் கல்லால் ஆன இரதத்தில் 1330 குறட்பாக்கள் எழுதப்பட்டு சுமார் 4000 பேர் அமரும் வசதி உள்ள ஒரு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது, இன்றைய நிலையில் காதல் கோட்டமாக இளம் பிராயத்தினர் பயன்படுத்தும் இந்த நினைவு மண்டபம் வள்ளுவரின் பெயரை இளம் உள்ளங்களில் நிலை நிறுத்தும் என்பதில் ஐயமில்லை.
கன்னியாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை ஒன்று ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள் கொண்ட குழுவினரால் முனைவர் கணபதி ஸ்தபதி தலைமையில் 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு பொங்கி எழும் அலைகளுக்கு மேல் மங்காப் புகழுடை வள்ளுவரின் மேன்மையைப் பறை சாற்றும் வகையில் நிற்கிறது. இதற்கான தேர்ந்த கற்கள் சிறுதாமூர், பட்டுமலிக்குப்பம் மற்றும் அம்பாசமுத்திர மலையினின்று கொணரப்பட்டது. இந்தச் சிலையை 2000ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 1 ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டது. வள்ளுவப் பெருந்தகைக்கு இன்றளவும் பெருமை சேர்த்துக் கொண்டே இருக்கும் இச்சிலை மொத்தம் 133 அடி ஆயினும், இதன் அடிக்கல் உயரம் மட்டும் திருக்குறளில் அறத்துப் பாலில் உள்ளச் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையிலும் மீதமிருக்கும் 95 அடி பொருள், இன்பம் ஆகிய பால்களில் உள்ள அதிகாரங்களின் கூட்டுத் தொகையிலும் அமையப்பெற்றுள்ளது. சிலையைத் தாங்கும் அலங்கார மண்டபம் ஒன்றும் 10 யானைகள் சூழ அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எட்டு யானைகள் எண் திசைகளையும் மற்ற இரண்டும் இப்புவியையும் வானையும் குறிப்பன. கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 400 அடி தூரத்தில் உள்ள இந்த சிலை கண்ணுக்கு விருந்தாக அமைவதோடு தமிழனின் பெருமையை எடுத்து உரைப்பதாகவும் உள்ளது.
லியோ டால்ஸ்டாய் ஹிந்துவிற்கு ஒரு கடிதம் என எழுதிய கட்டுரையில், மேற்கோள் காட்டிய, “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் காட்டி விடல்” எனும் குறளைப் படித்தே மகாத்மா காந்தி தனது வன்முறையின்மை கொள்கையினை வகுத்தனர் என்பார். இன்று உலகின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள குறள், ஃபிரான்ஸ் நாட்டின் ரயில்களில் ஃப்ரென்சு மொழியில் உள்ள குறட்பா, ஆங்கில மொழியாக்கத்துடன் பவனி வருகின்றது. அண்மையில் டிசம்பர் 2015இல் புதுடில்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒப்பிக்கும் நிகழ்சி நாடாளுமண்ற உறுப்பினர், தருண் விஜய் முயற்சியில் நடத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை விரைவில் எழுப்பப்படும் என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு அளித்து உள்ளார்
.திருவள்ளுவரின் காலம் பற்றி எழுதவந்து விட்டு அண்மைக்கால நிகழ்வுகளை பிறழ்ச்சியாகக் கூறுவது, காலத்தாற் அழியாதது குறள் என்பதை நிலை நாட்டத்தான்.
தமிழில் தோன்றிய நீதி நூல்களுக்கெல்லாம் முன் மாதிரியான, சிந்தனை ஊற்றாகிய திருக்குறளில் 14000 தமிழ் வார்த்தைகள் இருப்பினும், தமிழ் என்ற ஒரு சொல் எங்கணும் காணப்படவில்லை. ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”. எனப் பாரதியாரால் போற்றப்படும் திருக்குறள் பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்று ஆகும். இது படைப்பட்ட காலம்,கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உட்பட்டதாகும் என வி.ஆர். ஆர். தீட்சிதர் கூறுவர். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, இது ஆறாம் நூற்றாண்டில் தோன்றி இருக்கக்கூடும் என்பார். இவ்வாறு இருவேறு கருத்துக்கள் உலவுமிடத்து,”வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில், திருவள்ளுவர் காலம் கி.மு. 1 முதல் 300க்கு உட்பட்டது என்று கொள்வதே அமைவுடையதாகும் என்பார். மா. இராசமாணிக்கனார். மறைமலை அடிகள், திருவள்ளுவர் கிறிஸ்துவுக்கு 30 ஆண்டுகள் முற்பட்டவர் என்பார். அதனாற்றான், தமிழக அரசு, திருவள்ளுவராண்டு 2047 என (2016+31) நடப்பு ஆண்டினைக் குறிக்கின்றது.
திருவள்ளுவர் தமது நூலினைத் தொல்காப்பித்தின்
அந்நிலை மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப ( தொல் சூ. 1363)
என்பதற்கேற்பவே தம் நூலை முப்பாலாக யாத்துள்ளார் என்றும்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழிதானே மந்திர்ம் என்ப (தொல் சூ. 1434)
எனும் நூற்பாவை ஒட்டியே
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
என்பதால் தொல்காப்பியரின் காலத்துக்கு பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் திருவள்ளுவர் எனக் கொள்ளலாம்.
மேற்சொன்னதோடு, தொல்காப்பியப் புறத்திணையியலில், காஞ்சித் திணை ப|ற்றிய முதல் துறையில், “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்” என்ற சொற்பிரயோகத்தை, “ நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்திவ்வுலகு” எனக் குறள் எண் 336இல் கையாண்டு இருப்பதும் ஓர் சான்றாகும்.
தோழி தன் தலைவியின் காதலைத் திருமணத்தில் முடித்து வைக்கப் பொய் கூறத் தயங்க மாட்டாள் என்பது, “வாய்மையும் பொய்மையும் கண்டோர் சுட்டி” என அகத்திணையிலும், “ வாய்மை கூறலும், பொய்மை பெய்தலும்” எனப் பொருளியலிலும், “மெய்யினும் பொய்யினும் வழி நிலை பிழையாது” என களவியலிலும் ஆயிரம் பொய் சொல்லி ஒரு நன்மை ஆகிய திருமணம் நடக்கவே தோழியின் பொய்கள் கூறப்படுகிறது எனக் காணலாம். இதுவே “வரைதல் வேண்டி தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும்” என்பதே வள்ளுவரின் “பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்” எனக் குறள் எண் 292இல் அதே சொல்லாட்சி இருப்பதைக் காணலாம்.
மேலும் சங்க இலக்கியத்துகும் திருக்குறளுக்கும் உள்ள இயைபை கண்டோமெனில் அவரது காலம் தெள்ளிதின் விளங்கும்.
நீரின்றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
எனும் 20 வது குறட்பாவின் சொல்லாட்சியை நற்றிணையில்,
நீரின்றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நந்நயத்தருளி ( நற்—1) எனக் காணாம்.
மேலும் “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
எனும் நற்றினண 355 ஆம் பாடல், திருக்குறளில்,
பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (குறள் எண்.500)
என எதிரொலிப்பதைக் கேட்கலாம்.
குறுந்தொகையில்,
“பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்ததொன்று உடையேன் கொல்லோ (230) என்பதே
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின் (குறள் எண் 805 என உள்ளது.
புற நானூற்றின் 34 ஆம் பாடலில்,
நிலம்புடைபெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம் பாடிற்றெ, ஆயிழை கணவ
என இருப்பது திருக்குறளில்,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்க்கு (குறள் எண் 110)
என்று அறம் என புறனானூறு கூறி இருப்பதை, அறத்துப்பாலில் செய்நன்றியறிதல் எனும் தலைப்பில், புதிய மொந்தையில் பழைய கள்ளினைக் கொடுத்து மாந்த வைக்கிறார் வள்ளுவனார்.
திருக்குறள், காப்பியங்கள் ஆன சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைக்கு முற்பட்டது என்பது அக்காப்பிய ஆசான்கள் திருக்குறளை பொன்னே போல் பொதிந்து எடுத்து ஆண்டுள்ளது வாயிலாகவும் விளங்கும்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேராய்
என மணி மேகலை (சிறை 59-61 ) இல் காணலாம்.
திருவள்ளுவர் தமது காலச் சூழ்நிலையில், புரட்சிகரமான, புதுமை படைக்கும் சிந்தனையாளராகக் கருதப்பட்டு இருக்க வேண்டும். சங்க காலத்தில், கள் குடித்தல், மது அருந்துதல், பரத்தையர் இல்லம் செல்லல் ஆகியவை குற்றமாகா. புலாலுணவு வழக்கத்தில் இருந்ததால், தமிழர்கள் சிறுதெய்வ வழிபாட்டிலும் மூட நம்பிக்கைகளிலும் மிகவும் ஈடுபட்டு இருந்த காலம். அந்த கால கட்டத்தில், பொளத்த சமண சமயங்களில் உயிர் இரக்கம், மனித நேயம், முதலிய பல நற்சிந்தனைகள் இருந்தாலும் அவை கடுந்துறவுதனைப் போதித்தன. இவ்வுலக வாழ்வை அறவே வெறுத்தன. வள்ளுவரொ எனில் அறம் பொருள் பின் இன்பம்
எனத்தான் நிலை நாட்டியுள்ளார்.
திருவள்ளுவர், தமிழரிடையே காணப்பட்ட குறைகள் குற்றங்களை மறுத்து, நல்வழி காட்டினார். வட நாட்டுத் தொடர்பு, புறச் சமயத் தொடர்பு ஆகியவற்றால் ஏற்பட்ட தமிழர் பண்பாட்டுக்கு முரணான அனைத்தையும் மறுத்தார். எனவேதான், திருக்குறள் தமிழர் பன்பாட்டின் பிழிவு, தமிழர் வாழு நெறி காட்டும் வழிகாட்டி, தமிழரின் அடையாளம், தமிழரின் முகவரி என்று தைரியமாகக் கூறிடலாம். இவ்வாறு கூறிட நாம் இந்த இரு நூல்களின் கட்டமைப்பினை பற்றி ஆய்தல் நலம் பயக்கும்.