வேறு யாருமில்லை நானேதான்

எங்கோ பார்த்த முகம்!
எனக்கு மிகப் பழகிய முகம்!

இன்று ஒரு பெண்ணைப் பார்த்தேன்!
முன்னாளில் எனக்கு மிகத் தெரிந்தவள்!

இப்பொழுது அவள் பீப்பாய் போல
குண்டாகி விட்டாள் எடை மிகப் போட்டு!

கண்ணைச் சுற்றிக் கருவளையம்
தனிமை என ஏங்கும் அவள் விழிகள்!

தொங்கிப் போன அவள் தோள்கள்
தொய்ந்து போன அவள் நடை!

அவளுக்கு போக்கிடம் வேறு ஏது
என் சிந்தனையில் அவள் யாரென்ற கேள்வி!

காலம் எப்படிப் பறந்தோடி விட்டது
கடந்து விட்டன வருடங்கள் பத்து!

கனிந்தும் அவள் முற்றிவிட்டாள்
அவள் ஒரு முதிர்கன்னி....!

கண்ணாடியில் கண்டு திகைத்தேன்
அது வேறு யாருமில்லை! நானேதான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-16, 6:46 pm)
பார்வை : 261

மேலே