புலி வால்
புலி வால்.
அன்னையின் தந்தை சொல்லை
தட்டுதல் பாவம் என்று
முன்னவர் பாதம் வீழ்ந்து
முட்டியே மாப்பு வேண்டி
என்னவள் இவளே ஆவாள்
மறக்கிலேன் என்றும் என்றேன்.
கண்ணியைக் கொணர்ந்து எந்தன்
வலவயின் கவின வைத்தார்
பன்னியாம் அவளை எனக்கு
பத்தினி ஆக்கிடு நாளை
நுண்ணிய மதியிற் பெரியார்
நொடியிலே குறித்து அகன்றார்.
மங்கல நீரால் அவளை
மலர் மணம் கமழச் செய்து
கொங்கு அலர் மாலை சூட்டி
குனிந்து தலை நடக்கச் சொல்லி
நங்கைதன் கையைப் பற்றி
நம்பிய என் கையில் ஏற்றி
புங்கவர் சூழப் பரமனைப்
போற்றியே மந்திரம் சொன்னார்..
ஆர்த்தன இசைக் கருவிகள்
அனைவரும் பூக்கள் தூவ
வார்த்த நல் வார்த்தை எல்லாம்
முளைத்தன நல்வாழ்த்தென்று
பார்த்தனர் கண்கள் எல்லாம்
பெற்றது பெரிய பேறு.
நன்றெனப் பிடித்த கரங்கள்
இன்றும் பிணைத்து மகிழ்ந்திட
ஒன்றும் இடரிலை எனினும்
முன்னர் இருந்த நிறைவு
குன்றிய காரணம் தன்னை
நின்ற நிலையில் பார்க்க
பிடித்தது அன்றொரு புலியின்
வாலை என்ப தறியாமல்
இடித்தெனை அவளது இசைக்கு
ஆட வைப்பது தெரியாமல்
படுத்து மடியில் பாலை
கேட்டிடும் குழவி போலே
இந்தாங்க என்ற அன்பு
மொழியினில் உருளும் பந்தாய்
சந்தான பாக்கியம் தந்த
சத்தான வாழ்வின் வழியாய்
பந்தாக்கள் ஏதும் இன்றி
முப்பத்தா றாண்டுகள் கழிய
கன்னியா குமரிப் பெண்ணை
கோவையின் நாயகன் வந்து
அன்னமே பொன்னே என்று
அணைந்த நாளிதுவே என்றும்
மன்னா இன்றுதான் நம் திரு
மண நாள் நினைவு என்றாள்.
சட்டப் பேரவை இன்று
கூடிடும் நாளென் பதாலே
இட்டம் போலே விடுப்பு
எடுப்பது சிரமம் என்றேன்
கட்டையில் போகும் போதும்
பணியில் இருப்பீர் என்றாள்.
பி.கு: இன்று எனது திருமண நாள் நினைவு..
ஜே. ஜே..

